புதன், 6 ஏப்ரல், 2011

தெலுக் இந்தான் சித்ரா பௌர்ணமி - திருவிழா


சைவமும் தமிழும் வளர்த்த குலம்
தர்மமே கண்ணெனக் கொண்ட இனம்
நகரத்தார் இனம்.
நன்மைகள் எங்கும் பெருகிடவேண்டும்
தீமைகள் யாவும் நீங்கிடவேண்டும்
சீர்மிகு மொழியாம் வளமான தமிழால்
வணங்குகின்றேன் அன்னை மீனாட்சியே
வருவாய் வந்து காத்தருள்வாய்.



நகரத்தார் பெருமக்கள்,' திரை கடலோடியும் திரவியம் தேடு'  என்ற முது மொழிக்கேற்ப வியாபாரம் நிமித்தமாக தூரக்கிழக்கு நாடுகளான வியட்நாம், இந்தோனேசியா, சிலோன்,பர்மா,சிங்கப்பூர்,மலேயா ஆகிய நாடுகளுக்கு 200 -250  ஆண்டுகளுக்கு முன்பே பாய்மரக் கப்பலில் துணை வேண்டி, சிறு கூட்டமாக,  சிறு குழுக்களாக பயணப்பட்டனர்.அத்தனை பெரும் ஒரே தேசத்தை நினைக்காமல் பல்வேறு தேசங்களுக்கு பயணப்பட்டனர்.அத்தனை பேர் மனதிலும் ஆழமாக இருந்தது 
'செட்டிக்கப்பலுக்கு செந்தூரன் துணை' என்றஅசைக்கமுடியாத  நம்பிக்கையும், கடவுள் பக்தியும்.


வைசியர் வீட்டுப்   பெண்களும்,  பிராமணர்களும்  கடல் தாண்டக்கூடாது (கடல் பயணம் ) என்பது அந்தக்காலத்து மரபு. இதன் காரணமாக நகரத்தார் வீட்டுப் பெண்கள் அந்தக்காலத்தில் வெளி நாட்டுப் பயணம் செல்லவில்லை.தனி ஆளாகப்   பயணப்பட்ட நகரத்தார்களுக்கு,தணிகை வேலரின் தெண்டாயுத பாணி கோலமே சரியாகப்பட்டது போலும். 


ஆரம்ப காலத்தில் அதிகமாக நாகப்பட்டினம்  துறை முகத்தின்  வழியாக கடல் பயணம் மேற்கொண்டதால், எட்டுக்குடி  முருகனின் வழிபாடும், அருளாசியும் அவசியமாக இருந்தது. செட்டிநாட்டின் மையத்தில் குடி கொண்டு நகரத்தார் இல்லங்களிலும்,உள்ளத்திலும் குடி கொண்டு,இன்றும்,என்றும்   இருப்பவர் குன்றக்குடி முருகன். ஆக வேல் இருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான் என்ற கருத்திலே 'வேலை'  துணையாக கடல் பயணத்தில்    உடன் கொண்டு சென்றார்கள், தவறாது வழிபட்டு வந்தார்கள்.

இப்படியாக முருகன் வேலாக வந்து கோவில் கொண்ட இடம் தான், நாம் இப்பொழுது பார்கின்ற 'பேரா'   தெண்டாயுதபாணி சுவாமி கோவில். இதன் ஆரம்பம் 1870  ஆம் ஆண்டு.1926 ஆம்   ஆண்டு முழு கோவிலாக வளர்ச்சி பெற்று, 1926 ஆம் ஆண்டு முதல் கும்பாபிஷேகமும் நடை பெற்று சிறப்புப் பெற்றது.



நகரத்தார்கள் , இந்தியாவிலுருந்து  , தானியங்கள், வாசனைப்பொருட்கள்,  துணிகள் என்று நெடு நாட்கள் கெடாத பொருட்களை வியாபாரம் செய்யும் நோக்கமாக கொண்டு சென்றார்கள்.
லேவா தேவி தொழில் என்பது அவர்களது ஆரம்பத்   தொழிலாக இருந்ததில்லை.கொண்டுசென்ற பொருட்களை விற்று பெற்ற பணம் அவர்களிடம் அதிகமாக இருந்ததும்,அவர்களிடம் நேர்மையும்,நன்னடத்தையும் இருந்ததின் காரணமாகவும் உள்ளூர் மக்கள்  இவர்களிடமிருந்து பண உதவி பெற்றுக்கொண்டார்கள்.சிறிய அளவிலே தொடங்கியது,பெரிய அளவிலே மாற்றம் பெற்று விட்டது.



மலாயா நாட்டிற்கு வந்த நகரத்தார்கள் ,மூவார்,மலாக்கா ,சிரம்பான்,கோலாலாம்பூர்,பினாங்கு,  அலோர்ஸ்டார், தைபிங்,ஈப்போ, தெலுக் இந்தான் என்ற ஊர்களிலும், மற்ற முக்கிய ஊர்களிலும் தங்கள் தொழில் நிறுவனங்களை நிறுவி தொழில் செய்து வந்தார்கள்.கோவில் அமைத்த ஊர்களிலெல்லாம், ஒவ் வொரு கோவிலுக்கும் ஒரு திருவிழா என்று ஒற்றுமையாய் சிறப்புச் சேர்த்தார்கள்.



தை மாதம் பினாங்கிலே தை பூசம். மாசி மாதம் அலோர் ஸ்டார் - மாலக்காவில் மாசி மகம்.
பங்குனி மாதம் கோலாலம்பூரில் பங்குனி உத்திரம்.சித்தரை மாதம் தெலுக் இந்தானிலும்,ஜாவியிலும் சித்ரா பௌர்ணமி.வைகாசி மாதம் ஈப்போவிலும், வாழப்புரிலும்    வைகாசி விசாகம்.ஆடி மாதம் தைப்பிங்கில் ஆடி வேல்.ஆவணி மாதம், சிரம்பானில் விநாயகர் சதுர்த்தி .கார்த்திகை மாதம், மூவாரில் திருக் கார்த்திகை.       
                                                                              
                 
இந்தியாவில் எட்டுக்குடி முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமி ,10 நாள்     திருவிழாவாக   மிகச் சிறப்பாக நடைபெறும். 




மலேசியாவில் தெலுக் இந்தான் பேரா தெண்டாயுதபாணி கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா கடந்த 84 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.தெலுக் இந்தான் பேரா தெண்டாயுதபாணி கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா அன்று நகர்வலம் வருகின்ற வெள்ளி ரதம் 1932 ஆம் ஆண்டு (28 -01 -1932 ) முதன் முதலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

2011  ஏப்ரல் 17  ஆம் நாள் சித்ரா பௌர்ணமி என்று, இங்கு மலேசியா நாட்டிலே சொல்கிறார்கள்.
அது தவறு.

நகரத்தார் தொடர்புடைய கோவில்களெல்லாம் திருவிழாவிற்கு நாள் குறிப்பது,மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எந்த நாள் குறித்து திருவிழா அறிவிக்கப்படுகிறதோ,அதனையே பின் பற்றுவது பழக்கம்,அது தான் மரபு.

அதன்படி மதுரையில் அழகர் ஆற்றில் இறங்குவதும்,சித்ரா பௌர்ணமி திருவிழாவும் 2011 ஏப்ரல் 18  ஆம் நாள் தான்.அன்று தான் சித்தரை நட்சத்திரமும்,பௌர்ணமி திதியும் ஒன்றாக வருகிறது.                       

சித்ரா பௌர்ணமிக்கும்,தெண்டாயுதபாணி கடவுளாம் முருகக் கடவுளுக்கும் என்ன தொடர்பு ? 



சித்ரா பௌர்ணமி திருநாளின் சிறப்பு, எம தர்ம ராஜாவின் பிரதம கணக்கப்பிள்ளை சித்திர குப்தரின் பிறந்தநாள் .சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் கைலாயத்தில் உமா தேவியாரால் சித்திரமாக வரையப்பட்டு பின் சிவபெருமானால் உயிர் கொடுக்கப்பட்டவர்.பிறக்கும் பொழுதே கையில் எழுத்தாணியும், ஓலைச்   சுவடியும் இரு கைகளிலும் கொண்டு பிறந்தவர்.ஆக இவர் முருகனின் சகோதரர் . இவரின் முக்கிய வேலை மனிதர்களின் புண்ணிய, பாவங்களுக்கு சரியாக கணக்கு வைத்துக்கொள்வது.சித்ர குப்தரை நிறைந்த மனதோடு வணங்க வேண்டும்,நல்ல பாடல்களைப் பாடி துதிக்கவேண்டும், நல்ல அன்னம் படைத்தது,பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கவேண்டும். இவையெல்லாம் அவர் விரும்புவது.                             



கணக்குகளில் தவறேதும் நேராமல், காலக் கணக்கும் தப்பாமல் எல்லாம் சரிவர நடப்பதற்கு நாம்  சித்திர குப்தரை வணங்க வேண்டும்.வேல் கொண்டு வேளை தவறாமல் காத்திடும் முருகக் கடவுளை ,தெண்டாயுத பாணி சுவாமியையும் வணங்க வேண்டும். இவ்வளவு சிறப்புமிக்க சித்ரா பௌர்ணமி நாளில் முருகக் கடவுளை, தெண்டாயுத பாணி சுவாமியை திருவிழா எடுத்து சிறப்பாக வணங்கினால், காலமும், நேரமும் நன்றாக இருக்கும், முருகன் தெண்டம் கொண்டு தினம் காப்பான், கால தேவனின் கவனம் நம் பக்கம் வாராமல், சித்ர குப்தர் காத்து அருள்வார்  .


நாள் என் செய்யும் ?வினை தான் என் செய்யும்? 
எனை நாடி வந்த
கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? 
குமரேசர் இரு 
தாளும் சிலம்பும், சலங்கையும் தண்டையும்
சண்முகமும் 
தோளும், கடம்பும் எனக்கு முன்னே 
வந்து தோன்றிடினே. (கந்தரலங்காரம்) 

அருணகிரிப் பெருமான் இந்த பாட்டிலே 27 நட்சத்திரங்களை உள்ளடக்கி முருகப் பெருமான் தன் உடல் உறுப்புக்களாலும் அணிகலன்களாலும் அவன் தாள் பணிவோரை காத்து   அருள்வார் என்பதை சொல்கிறார்.
 தாள் -        2 


சிலம்பு -     2

சலங்கை - 2

தண்டை -  2 

முகம் -      6 

தோள் -    12

கடம்பு -      1  

பேரா தெண்டாயுத பாணி சுவாமியின் அருளாசி பெற்று உயர்ந்திட அவன் தாள் பணிவோம்.