வெள்ளி, 27 ஜூன், 2014

ஆகாயம் ,காற்று,நெருப்பு,நீர்,பூமி .

ஆகாயம் ,காற்று,நெருப்பு,நீர்,பூமி .

வெட்ட வெளி வானத்தில்
எல்லையில்லா பரப்பு
எத்திசையும் ஒரு குணம் காட்ட
அண்டசரா சரத்தின்  வெளிவாசல்
ஒளிந்து கிடப்பது ஓராயிரம்
அதுவே ஆகாயம் .

காற்று எனும் கடுங் கோபக்காரி
நதியோடு விளையாடி நட்புப்பேன
மலையரசன் நடு நின்று  நலம் காக்க
வீசு தென்றலென வலம் வந்தாள்

பொறியென விதை வளர்த்து
சுடரென வெளிக்காட்டி
சுகங்கள் உள்ளடக்கி
உயிரதன்  உண்மையில் ஒளிந்து
உயிர் காப்பதும் நீர்ப்பதும் நெருப்பே !

நீர்நிலயாம் நதிப் பெண்ணவள்,
ஆவியென மாறி ,
ஆகாய வானரசனுடன் கலந்து, கூடி ,
பெற்றெடுத்தாள் மண் குளிர ,
மழைப் பெண்மகளை !


கூறு போட்டு கொத்திக் கிளறி
பிளந்து கொடுமைகள் பல புரிந்தும்
அத்தனையும் அவதரிக்க
அருமருந்தாய் அவதனிக்க
பொருத்து பொறுமை காப்பவள்
பூமித் தாய் !




திங்கள், 23 ஜூன், 2014

காய்கறிக் காரரின் காதலி

தக்காளி நிறத்துக்காரி ,
காரட் உடம்புக்காரி .

கீரைக்கட்டு கொண்டக்காரி,
புடலங்காய் கூந்தக்காரி .

கொத்தமல்லி வாசக்காரி ,.
பச்சைமிளகாய் கோபக்காரி

பச்சரிசி பல்லுக்காரி ,
சவ்வரிசி சொல்லுக்காரி .

பசப்பிப் பேசுவதில் அவள் கைகாரி ,
ஒப்பனையில் அவள் ஒய்யாரி .

ஆப்பிள் அவள் கன்னங்கள் ,
மாதுளை அவள் செவ் விதழ்கள் ,
பன்னீர் திராட்சை அவள் விழிகள் ,
வெண்டிக்காய் அவள் விரல்கள் ,
முருங்கக்காய் அவள் கால்கள்.


அவளை அருகிருந்து பார்க்கவேண்டும் ,
தொட்டு தொட்டுப்  பேசவேண்டும் ,
அறுசுவை உணவை,
உண்டபின் வரும்,  மயக்கம் கூட வரும்.

(காய்கறிக் காரர்  தன்  காதலியைப் பற்றிய விமர்சனம் )

வெள்ளி, 20 ஜூன், 2014

தேவகோட்டை காந்தி நாராயணன் செட்டியார்.

பார்த்தறியா குணம் கொண்ட மனிதரிவர்.
எளிமையே அவர் செயல்பாடு.
சத்தியமே அவர் வாக்கு .
காந்திய சிந்தனையே அவர் நோக்கு .

வாழ்ந்த காலத்தில் ,
அவர் சொல்லிச்  சென்றதெல்லாம்,
இன்று ,
பணம் கொடுத்துப் படிக்கும் பாடம் .

கோபமும், கொடுமையும் ,
கண்டவிடத்தில் கடுமை காட்டாத,
காந்தியவாதி.
வளம் யாவும், இருந்தபோதும் ,
சிக்கனத்தின் சிறப்பை ,
சிறப்பாய் பேணிய,
மா மனிதர்.

அவர்  காலத்தில் வாழ்ந்தோம் ,
உறவால் அறிந்தோம் .
மனம் பெரும் மகிழ்ச்சி.

கண்ணாரக் கண்ட காந்தி
அவரே தேவகோட்டை
காந்தி நாராயணன் செட்டியார்.


வியாழன், 19 ஜூன், 2014

நித்திலத்தில் நிரந்தரம்

நித்திலத்தில் நிரந்தரம்  என்றும் உண்டா ?
நிறங்களில் வெறுமை கண்டதுண்டா?
புற்கள் பூமணம் தந்ததுண்டா?
சொர்க்கம் புவியில் பார்த்ததுண்டா?

உறவுகள் மாறாமல் நிலைத்ததுண்டா ?
மறக்கமால் தவறுகள் நடந்ததுண்டா  ?
சிறகுகளின்றி பறவை பறந்ததுண்டா?
தருக்களின்றி மண் சிறந்ததுண்டா?

ஆடம்பரம் சிறப்பு கண்டதுண்டா ?
ஆவேசம் போற்றப் பட்டதுண்டா  ?
அன்புக்கு அவனியில் மாற்று உண்டா?
பண்புக்கு பாரினிலே தேசமுண்டா?

பாரம்பரியம் நிலை தாழ்ந்ததுண்டா ?
பாசாங்கு செய்வோர் நிம்மதி பெற்றதுண்டா ?
பாசமில்லாமல் உயரினங்கள் வாழ்ந்ததுண்டா?
பிறந்தவர்கள் மரிக்காமல் இருந்ததுண்டா ?










புதன், 11 ஜூன், 2014

எழுத்துத் தளம்

அறிமுகம் இல்லை ,
கண்ணிருந்தும் பார்க்கவில்லை,
காதிருந்தும் குரல் கேட்கவில்லை ,
ஆனால் நண்பர்கள் ,
எண்ணிக்கையோ நாற்பத்தி  நான்கு -
எழுத்துத் தளம் தந்த வெகுமதி .

மொழி படித்தேன்.
கவிதைகள்  படித்தேன் .
தமிழ் வளர்த்துக்கொண்டேன்.

காதல் உண்டு .
கற்பனை உண்டு .
சிந்தனை உண்டு .

எட்டாத நிலையும் ,
தொட்டுப் பார்க்காத
பொருளும் ,
சமூகச் சீண்டலும்,
கேள்வியும் பதிலும் ,
நகையும் சுவையும் ,
கருத்தான கட்டுரையும் ,
அருமை கண்டு ,
நேரம் போக்குவதில்,
நிம்மதி பெற்றேன்.
அறியாதன அறிந்து கொண்டேன் . 

தேர்வுகள் முக்கியமில்லை .
பரிசுகள் அவசியமில்லை .
எழுதுவது என்  கவனம் .
பண்பு காப்பது என் தனம் .
உண்மைக்கு உயர்வுண்டு.
தரத்திற்கு பரிசுண்டு .

எழுத்துத்  தளம் தரும் சுகம் ,
தினம் படித்து மகிழுது மனம்.


குறும்புப் பா


 வெளியிடத்தில்
ஆணும் பெண்ணும்
கட்டிப் பிடித்தால் -

அது

கலாச்சாரக் கெடுதல்
பாலியியல் பலாத்காரம்
      ------
திரையரங்கில்
கூட்டம் கூட்டி
ஆணும் பெண்ணும்
கட்டி உருள்வதை
திரையில் காட்டினால்  -

அது

சினிமா , கலை ரசனை.




குறுக்கு வழி வேண்டாம்


தொந்தரவுகள் நிறைந்த உலகம்,
மந்திரங்களால் மாறுமென்றால்,
மடங்களெல்லாம்,  மறுபிறப்பெடுக்கும்.
காவி வேட்டி கடை சிறக்கும் .

தந்திரங்கள் செய்வோரும்,
சாஸ்திரங்கள் பேசுவோரும்,
தனிக்கட்சி ஆரம்பித்து,
தலைவராகி விடுவர்.

உழைப்பின் உன்னதத்தை
உணராமல், ஊர் சுற்றி
வருவதே தொழில் என்பார்.
உண்மைக்கும், நன்மைக்கும் ,
உதவாது கேடு நினைப்பர் .

உடம்பு வளர்த்து, உயிர் வளர்த்து,
கை உயர்த்தி ,காரியம் செய்து ,
காசு பணம் பரித்து, கயமை புரிவது
எங்கள் கடமை என்பார் .

நன்மை பணிந்து, நயம் பயந்து ,
கண்ணியம் காத்து ,
கொடுப்பதில் சிறந்து ,
மதிப்பு பெறுவதே சிறப்பு.

குறுக்கு வழி நாடாமல்,
குற்றம் புரியாமல் ,
எற்றம் பெற்று ,
உள்ளம் மகிழ்ந்து, உயர்வோம்.







செவ்வாய், 10 ஜூன், 2014

தாபம்


கொஞ்ச வரும் நேரத்தில்
கெஞ்ச வைக்கும் நிலவே
நீ பருத்திக் காட்டில் பூத்த மலரோ
பண்ணைக் காட்டில் வளர்ந்த கொடியோ

எண்ணங்கள் ஆயிரம்
எடுத்துச் சொல்ல
அருகே வா என்றால்
தள்ளி நின்று கை சாடை செய்கிறாய்
வெள்ளரி பிஞ்சு விரலால்
பாவம் காட்டுகிறாய்

உன் கண்ணில் காதல் தெரியுது
கையும் காலும் காதல் மொழி பேசுது
கனவில் கண்ட காட்சிகள்
மனதில் வந்து நிற்குது

மலர்ந்த முகம் கொடுத்து
மஞ்சள் நிறம் அள்ளி தந்து
பள்ளிப் பருவத்து ஞாபகங்கள்
தள்ளி வைத்து விட்டு
தாலாட்டும் பாடல் பாடி விடு

உந்தன் அழகு மேனியிலே
அழகு குறிப்புக்கள்  எடுக்க வேண்டும்
அருகிருந்து  சுவைக்க வேண்டும்
அருமை விருந்து தர வேண்டும் .

வெள்ளி, 6 ஜூன், 2014

எல்லாம் அவனே


திரவியங்கள் குவிந்தபோதும்,
செல்வங்கள் சேர்ந்தபோதும்,
பதவிகள் நிறைந்தபோதும்,

கொடுத்தவன் அவனிருக்க ,
கொண்டுவந்தவன்  " நான் "என்று
நினையாதே .
"நான்" அழித்து நலம் சேர்த்தால்,
நன்மைகள் பலகூடும்.

வெருண்டபோதும்
மருண்டபோதும்
மலையெனவே அவன் பால்
சரண் புகுந்தால் 
மனமிரங்கி வந்திடுவான்
கேட்டவரம் தந்திடுவான்

அரற்றி அழுதபோதும்
அன்பு கொண்டோர்
விலகிச் சென்றபோதும்
அவன் தாள் பணிந்தால்
சஞ்சலமெல்லாம் நீக்கிடுவான் 

ஞாயிறு, 1 ஜூன், 2014

தேர்தல் முடிவுக்குப் பின்




வீராதி வீரனும் ,சூராதி சூரனும்,
இருக்கும் இடம் எங்கே என்று,
தெரியாமல் இருக்கும் நேரம் இப்போ!

பேசிய பேச்செல்லாம்,
தண்ணீரில் கரையவில்லை,
காற்றிலும் மறையவில்லை,
காணமல் போனது எங்கே!

சுற்றிச் சுற்றி ,கத்திக் கத்தி,
பேசி காசைக் கரியாக் கினார்.
போட்டகாசெல்லாம்,
பெருகி வருமென்றே,
பெருமிதத்தோடு காத்திருந்தார்.

உண்மையொன்று சொன்னாலும் ,
உள்ளம் அறிந்து சொன்னாலே ,
உன்னை ஏற்பர் .
உன்நிலை தெரியாமலே,
தன்நிலை  அறியாமலே பிதற்றினால்,
உன்னை யார் ஏற்றுக்கொள்வார் !

வந்தவரும் ,வந்தது போதுமென்று ,
இருந்துவிட்டால், வந்தவழி ,
மாற்று  வழியாகி குழியாகிவிடும் .
சேவை என்பதும், உழைப்பு என்பதும் ,
வெரும் வார்த்தையில் வேண்டாம்.
விருப்பமுடன் பணியாற்றி ,
மாற்றங்கள் தருவீர்.