திங்கள், 12 அக்டோபர், 2015

கடவுள்



கடவுள் என்று தனியொருவருமில்லை ,
உணரும் காலம் வருவதுமில்லை ,
வாய்ப்பு வந்தபோதும் நினைப்பதுமில்லை,

உண்மையாய் இருப்பதும் ,
உதவிடும் எண்ணமும் ,
அன்பெனும் ஆதரவும் ,
உயர்வின் உயரல்லவா !
கடவுளை
உணரும் உணரல்லவா !

வியாழன், 1 அக்டோபர், 2015

என் அழகே !


கன்னக் குழியில் நகை காட்டு
காது மடலில் நிறம் காட்டு
அன்னம் போல் நடை காட்டு
வண்ண நிலவில் முகம் காட்டு

மன்னன் மார்பில் மல்லிகை சூட்டு
மயக்கம் தள்ள பஞ்சனை நீட்டு
தயக்கம் தள்ளி சுகம் கூட்டு
பக்கம் வந்து இதம் காட்டு

ஒப்பனைகள் உனக்கெதற்கு
ஒளிந்திருக்கும் அழகெல்லாம்
மறைப்பது சரியாகுமா
மலரெல்லாம் உனக்கு ஈடாகுமா

தேன் தரும் சுவை
மான் மருளும் பார்வை
வான் விரிக்கும் உல்லாசம்
அத்தனையும் நீயே !நீயே !





வியாழன், 24 செப்டம்பர், 2015

சுந்தரேசன் சம்பந்தம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து 24.09.2015



பிறப்பின் மேலாம் நிலை,
பிரிதோர் சொல் கேளாமை.
உறவின் உன்னதம்,
உடனிருந்து நலம் செய்தலே.
கற்றவை கடனென்றே,
பலருக்கும் கொடுத்திடல் வேண்டும்.
செய்வன திருந்தச் செய்தல்,
உயர்வுக்கு ஒரு வழியாம்.

மேற் சொன்னவையாவும்,
உங்கள் தனிச் சிறப்பு.
வாழ்த்துக்கள்.
பிறந்த நாள் நினைவில்
நின்று மகிழ்ச்சி தரும் நாள்.
மகிழ்வோடு, நலம்யாவும் பெற்று
சிறக்க வாழ்த்துக்கள்.

வள்ளல் அழகப்பர்

கொடைக்கோர் கர்ணன்,
கண்ணார கண்டோமில்லை.
கொண்டதல்லாம் கொடுத்த வள்ளல்
அழகப்பர்.
கண்ணார கண்டோம்.

கல்வியே காலமெல்லாம் காக்குமென்று,
கல்விச் சாலைகள் பல ,
காரை நகர் கண்ட வள்ளல்.

எழுதிப் பார்க்க முடியாத தர்மங்கள்,
எண்ணிப் பார்க்க முடியாத கொடைகள்.

மண் பரப்பும் ,விண் விரிப்பும்,
உள்ளளவு உயர்ந்த புகழ் நிலைக்கக் கண்டோம்.

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

கோபமும் ,கவலையும் ஒன்றே !

கோபமும் ,கவலையும் ஒன்றே !
உணர்ச்சியின் வெளிப்பாடு கோபம் .
உள்ளிருக்கும் நிலைப்பாடு கவலை .

உச்சத்தில் கத்துவதும் ,
கடுகடுவென  இருப்பதும் ,
தன்னிலை மாறுவதும் ,
மனித நேயம் மறப்பதும்,
வேகம் சேர்ப்பது கோபம் .

உணர்ச்சிதனை அடக்கி,
உண்மைதனை மறந்து ,
உள்ளத்துள் புழுங்கி ,
சோகம் சேர்ப்பது கவலை.

விஷயமில்லாமல் ,
விஷம் தோய்ந்து ,
பகை சேர்க்கும் ,
பலன் சேர்க்காது,
உடம்புதனை கேடாக்கும்  கோபம்  .

மனத்தை மலடாக்கி  ,
துக்கத்தை மேலாக்கி ,
துன்பத்தை பெரிதாக்கி ,
வாழ்க்கையை  சோர்வாக்கும்   கவலை  .

மணித்துளி பொருத்து,
மனதினில் நிறுத்தி ,
இருக்கும் நிலை மாற்றி ,
நிதானம் கொண்டால் ,
மாறிவிடும் கோபம்.
மறந்துவிடும் கோபம் .

மனம் விட்டு பேசி ,
அன்பு காட்டும் தோள் சாய்ந்து ,
நேசிக்கும் கரம் பற்றி ,
நடந்தவை நாளை மாறுமென்று
உறுதிகொண்டால்,
பறந்ததோடிடும் கவலை.
பக்கம் வாராது  கவலை .

எழுதுவது எளிது
எடுத்துச் சொல்வது சுலபம்
இருந்து பார்க்க வேண்டும்
முயன்று பார்த்தால் என்ன
 ஒருவராவது பயன் பெற்றால் நலமே 

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

பாடகர் உன்னி கிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்து



பாடகர் உன்னி கிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்து
'மனம் உருகும் அற்புத கானங்கள் பாடிய இனிய பாடகர், முதல் திரைப்பாடல்களின் மூலமே விருதுகள் குவித்த உன்னி கிருஷ்ணனின் பிறந்த நாள் இன்று..

நாள் முழுவதும் இன்றைய நட்சத்திரம் பகுதியில் உன்னி கிருஷ்ணன் பாடிய இனிய பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்

Happy Birthday @[53664508646:274:Unnikrishnan]'
இனிய முகம்
சிரிப்பைத் தந்திடும் பார்வை
தேன் சுவைக் குரல்
சுகம் தந்திடும் கானங்கள்
அற்புத மெல்லிசைப் பாடல்கள்
இவையனைத்தும் உந்தன் சொந்தம்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
குரலும், இனிமையும் மாறாதிருக்க வேண்டும்
இன்று மட்டுமல்ல உன் பிறந்த நாள்
என்றைக்கும் பாராட்டு மழை
ஆக உனக்கு தினம் பிறந்த நாள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வளராமல் குழந்தையாகவே இருந்திருந்தால் நலம் என்ற கவிதைக்குப் பதில்





வளராமல் இருந்திருந்தால்.......

தாய் மனம் தளர்வு கண்டிருக்கும்,
தந்தை மனம் கலங்கியிருக்கும்
தங்கையும்,தம்பியும் சோர்ந்தேயிருப்பர்,
பாட்டியும், பாட்டனும் பரிதவித்திருப்பார்கள்,
நண்பன் என்று ஒருவன் இல்லாமலே போயிருக்கும்.

வளராமல் இருக்க வரம் வேண்டாம்
எங்கும் வளம் கூட வரம் பெற்று வருவோம்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்........மறைவிற்கு ..


மெல்லிசையில் இமயம்
அடக்கத்தில் இமயம்
உயர்வு கண்ட போதும்
கர்வம் காட்டாத உன்னதம்
நடந்து வந்த பாதை 
மறக்காத நேர்மை
பட்டி தொட்டிக்கெல்லாம்
பாடல் தந்த நாதம்
மறைவு உந்தன் உடல் கண்டது
இசையுள்ளவு தங்கள் உயிர் இருக்கும்
உங்கள் புகழ் நிலைக்கும்.

திருமதி சுந்தரேசன் சம்பந்தம் அவர்களின் அறுபது நிறைவிற்கு திரு சுந்தரேசன் எழுதியிருந்த கவிதைக்கு வாழ்த்துக் கவிதை




வயது அறுபது
அருமை பெருமை தெரிந்த வயது
அனுபவம் பெரிதும் காட்டும் முதிர்வு
உள்ளன்பு உயர்வாய் பண்பின் தெளிவாய்
தன்னலம் கடந்த சிறப்பு
அதுவே பெண்மையின் உயர்வு

சிறப்புக்கள் சிகரம் தொட வேண்டும்
உறவுகள் உள்ளம் மகிழ வேண்டும்
உன்னதம் உங்கள் மொழியாக வேண்டும்
வளரட்டும் வாழ்க்கை உயரங்கள்.
வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.

காசி ஸ்ரீ தட்சிணாமூர்த்தி அவர்களின் அறுபது நிறைவு விழாவிற்கு வாழ்த்து



அடக்கமாய் அன்பாய்
அனுதினமும் சிறப்பாய்
சிரித்த முகத்துடன் 
வலம் வரும் உத்தம 
குலத்துதித்த அருமை நண்பர்.

ஆச்சியோடமர்ந்து அறுபது
காணும் மகிழ்வு
பிள்ளைகள் அறுபது
விழாக்களையும்
காணவேண்டும் பெற்றோர்.

இறைப்பணி, சமுகப்பணி
என்று நாளும் தொண்டாற்றும்
உண்மைச் சிறப்பு.

உயர்வுகள் பல உங்களை
நாடி வர வேண்டும்
நலம் யாவும் பெற்று
சிறக்க வேண்டும்
உள்ளன்போடு வேண்டுகிறேன்
உலகாலும் சொக்கேசன்
பாதம் பணிகின்றேன்.

வாழ்த்துக்கள்.

பெருமை மிகுந்த போற்றுதலுக்குரிய மா மனிதர் மேதகு அப்துல் கலாம் மறைவு ..........

பெருமை மிகுந்த போற்றுதலுக்குரிய மா மனிதர் மேதகு
அப்துல் கலாம் மறைவு ..........

இந்திய தீபகற்பத்தின் தென் கிழக்கு பகுதியாம்
இராமேஸ்வரத்தில் பிறந்து
வடகிழக்கு பகுதி மேகாலயாவில் மறைவு கண்ட
இந்தியாவின் ஒப்பற்ற குடிமகனே!
மேகங்களின் ஆலயத்தில் உனக்கோர் ஒய்வு.
எளிமையாய் வாழ்ந்து காட்டி
எட்டாத உயரங்களை எட்டிய பெருமகனே!
இருந்த போது இளைஞர்களை உன் வசப்படுத்தீனாய்
காட்டிய வழியில் வளம் கண்டோம்.
வளம் தந்து தாய்நாட்டின் உயர்வு கண்டாய்,
உந்தன் மறைவு,
மறக்க முடியாத மறைவு,
நிரப்ப முடியாத நிறைவு.

நண்பர் சுந்தரேசன் சம்பந்தம் ,மறைந்த திரு அப்துல் கலாம் அவர்கட்க்கு தெரிவித்த கண்ணீர் அஞ்சலிக்கு தெரிவித்தகருத்து




மனதில் தைத்த வார்த்தைகள்.
எண்ணத்திற்கு வடிவம் வார்த்தைகள்.
எடுத்துச் சொன்ன விதம் ,
இழந்த இழப்பை இரட்டிப்பாக்குகிறது
மரணம் என்பது தவிர்க்க முடியாதது
தருணம் என்பதே கவலை தருவது.
உயரம் என்றால் இமயம்.
உன்னதம். என்றால் கலாம்
மானிடம் கண்டறியா உன்னதம்.
மகான்கள் வாழ்க்கையைப் படித்ததுண்டு
மகானைப் பார்த்துவிட்டோம்
அதுவே நாம் கண்ட பெரும் பேறு.

ஹரி தியாகராஜன் பிறந்த நாள் வாழ்த்து - 02.08.2015


பாரம்பரியம் நிறைந்த குடும்பத்தின்,
பண்பு நிறைந்த பிள்ளை,
அன்பு காட்டிடும் பிள்ள,
குணம் காத்திடும் பிள்ளை,
குடும்பப்பெரியவர்களின் ,
சிறப்பெல்லாம் தனதாக்கிக்கொண்ட பிள்ளை.

பிறந்த நாள் காணும் இந்நாளிலும்,
இனி வரும் நாட்களிலும்,
சிறப்புக்கள் பெருகி வர வேண்டும்.
பொறுப்புக்கள் நாடி வர வேண்டும்.
மகிழ்ச்சி மனதில் நிலையாக வேண்டும்.
உளமாற வாழ்த்துகிறேன்,
உயர்வுகள் என்றும் உனதென்றே வாழ்த்துகின்றேன்.

சனி, 30 மே, 2015


        

                    தெலுக் இந்தான் தெண்டாயுதபாணி முருகன் 



துதிப்போரின் மனமெல்லாம் நிறைந்திருக்கும் கொஞ்சும் அழகன் 


அர்ச்சிப்போர் மனம் போல் வரும் பொருளைத் தரும் திருக்குமரன். 


துள்ளி வரும் வைர வேலும்,துயர் துடைக்கும் துளசி மாலையும்


உத்திராட்சமும்பதக்கமும் படியளக்கும் புன்னகையும் கொண்டு 


காலமெல்லாம் காத்திடும் வேலன் - தெலுக் இந்தான் 

தெண்டாயுதபாணி முருகன் .



மனசு ,

வயிறு  நிறைந்தவுடன், போதும்
என்று நினைக்கிற  மனசு ,
பொருள் நிறைந்து இருக்கும்  போதும் ,
போதாதுன்னு  ஏன் மாறுபட்டு நிக்குது ?

கோடி கோடியாய் குவிந்தபோதும் ,
கூடவருவது ஏதுமுண்டோ ?

கூட இருப்போர் நலம் காத்து
குணம் காப்பது நலமா ?
குழி பறிப்பது தகுமா ?

பட்டும், பீதாம்பரமும்,
பகட்டும் பாரினில் இருக்கும் வரையே !

கயமை செய்யாமை ,காயங்கள் தாராது.
பெருமை சேர்ப்பது, பொறுமை காப்பதே!

எனக்கு மட்டும் என்பது ஆணவம்.
கூடி  இருப்பது கோடி சேர்க்கும் ஆவணம்.

உண்மைகள் உயர்வானால் ,
உரிமைகள் நிலையாகும் .










பந்தயம்

வாழ்க்கையில் நீ சந்திக்கும் இடர்கள் - பந்தயம் .
கலங்காமல் எதிர்கொண்டால் - கண்ணியம் .
கடவுள் துணை நின்றால்  - புண்ணியம்

அது என்ன நியதி .

உன் முன்னோர்களிடமிருந்து உனக்கு நோய் -
அது பரம்பரை வியாதி .

உன் முன்னோர்களின் நல்ல குணங்கள் ,
உனக்கு வரவில்லையே ,
அது என்ன நியதி .

ஞாயிறு, 17 மே, 2015

நான் உன்னுள்ளே, இருக்கிறேன் .

நான் உன்னுள்ளே, இருக்கிறேன் .
நீ ,என்னுள்ளே இருக்கிறாய் .
பின் எப்படி நான் நானாக இருப்பேன் ?

என் விழிகள் ,இரண்டென்றாலும்,
பார்வைகள்  நான்கென்பேன்.
என் கண்களுக்குள்ளே, நீயே இருப்பதால் ,
இமைகள் மூட மறுக்கின்றன .

ஒட்டி உறவாட, உடல்கள் இருக்க ,
உள்ளம் உறங்கிட உன் மனதை தந்துவிடு !
அள்ளி அணைப்பது ,கைகலென்றாலும் ,
சொல்லிக் கொடுத்தது நீயல்லவா?

உன்  மேனி தரும் வாசம்,
அதுவே என் மூச்சின் சுவாசம் .
நலம்  அனைத்தும், சுகமென்றாலும்,
நயம் தரும் உன் சொல்லே சொர்க்கமென்பேன்.







 

வெள்ளி, 1 மே, 2015

03.05.2015 - சித்ரா பௌர்ணமி அன்று சித்திர குப்தனை வணங்குவோம்

03.05.2015 - சித்ரா பௌர்ணமி அன்று  சித்திர குப்தனை வணங்குவோம் 

சித்திரத்தின் நாயகன்,
சிகரத்தின் புத்திரன் ,
சித்ரகுப்த்தன் எனும் பெயரினன்.
சித்திரை பௌர்ணமியில் ,
நலம் காக்க வந்துதித்தனன்  .

சிறப்பாய் நாம் வாழ்ந்து,
பொறுப்பாய் இருப்பது நம் கணக்கு.
நல்லவை வரவிலும்,
தீயவை  செலவிலும்,
வைத்து நம் கணக்கை,
பார்ப்பது  அவன் பொறுப்பு.

காலனின் கணிப்பில்,
நேரங்கள் தப்புவதில்லை,
காலங்கள் மாறுவதில்லை,
இவையாவும் சித்திரகுப்தனின் சிறப்பு.

இருக்கும் காலத்தில்,
இல்லாதவை மறந்து,
இருப்பது நினைத்து,
இனிமை சேர்ப்பது,
நலமான வாழ்க்கைக்கு உரமாகும்.
உன்னதம் உயர்வாகும்.

சித்திரை நாயகனை,
சிந்தையில் வைத்து,
பௌர்ணமி நன் நாளில்,
வளம் தந்திட வணங்குவோம்.
வாழ்வுக்குப் பின் சுகம் தந்திடுவான்.
சந்ததிகள் நலம் காத்திடுவான் .
-----------------------------------------------------------


திங்கள், 27 ஏப்ரல், 2015

ராமநாதன் தம்பி சுப்ரமணியன் இல்ல புதுமனை புகு விழா வாழ்த்து (நாள் 30.04.2015)


திரு .மு .சுப்ரமணியன் இல்ல புதுமனை புகு விழா வாழ்த்து 
 (நாள் 30.04.2015)

பெற்றோரை நினைவில் நிறுத்தி ,
தந்தை பெயரில் இல்லம் கண்டு ,
சிந்தை மகிழ்ந்திடும் நேரமிது .
மனையென்னும் மங்கலம் ,
காணும் சிறப்பது கொத்தமங்கலம் .
சுகம் தந்திடும் நினைவிது .

உறவுகள், சுற்றம் சூழ்ந்து ,வாழ்த்த
புதுமனை புகு விழா நிகழ்வுகள் ,
அருமை ,பெருமையோடு
சிறக்க வேண்டுமென ,
அருங்குணத்து நாயகி ,
அன்னையவள் மீனாட்சி
பெருங்குணத்து சொக்கேசன் ,
இருவர் பாதம் பணிந்து வணங்குகின்றேன்.

அன்புநிறை ,சுப்ரமணியன் தம்பதிகள் ,
நலம் யாவும் பெற்று ,வளம் சேர்த்து ,
குலம் சிறக்க வேண்டுமென,
மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.


சனி, 25 ஏப்ரல், 2015

அவளே என் தமிழ்மகள்.

நித்தில வானில்
முழு நிலவு நாளில்
கைத்தலம் பற்ற
கனவு கண்டேன்
கனவினில் வந்தவள்
காரிருள் நிறத்தவள்
கசங்கிடா மனத்தவள்
காட்சிக்கு எளியவள்
தருவது அவள் சுகம்
பெறுவது என் தாகம்
ஏட்டினில்  சேவை
பாட்டினில் பரவசம்
அறிவுத் தடாகம்
செறிவுறு செல்வி
அவளே என்  தமிழ்மகள்.

புதன், 22 ஏப்ரல், 2015

இனி ஒரு விதி செய்வோம்


 துளிர்க்கும் பனித்துளி
எரிக்கும் சூரியன்
சூழும் மேகம்
விழும் மழைத்துளி
மண் ஆதாரம்
பயிர் நட்டு
வளம்  காப்போம்
இயற்கை நினைப்போம்
செயற்கை அறுத்து
செல்லாதவை வெறுத்து
செழுமை பேணி
செய்வதே   பணி
ஒழுக்கம் கற்று
உண்மை நின்று
திருத்தம் செய்வோம்
இனி ஒரு விதி செய்வோம் 

திங்கள், 20 ஏப்ரல், 2015

தேவகோட்டை நகரின் பெருமைகளும்.செய்திகளும்.


தேவகோட்டை நகரின் பெருமைகளும்.செய்திகளும்.

சைவமும் தமிழும் வளர்த்த குலம்,
தர்மமே கண்ணெனக் கொண்ட இனம்,
நகரத்தார் இனம்.
நன்மைகள் எங்கும் பெருகிடவேண்டும்.
தீமைகள் யாவும் நீங்கிடவேண்டும்.
சீர்மிகு மொழியாம் வளமான தமிழால்,
வணங்குகின்றேன்
அன்னை மீனாட்சியே வருவாய், வந்து 
காத்தருள்வாய்.


யம்பட, வாழ்ந்து சிறந்தவர்கள்,
நானிலமும் சிறக்க , நன்மை பல செய்தவர்கள்,
நல்லோர் பலர் இருக்க,
நல்  தவம் செய்திட்டோர்  நகர்  தேவகோட்டை.


தேவகோட்டை நகருக்கு இரு விதமான வரலாறுகள் உண்டு.

1. ஸ்ரீ ராமன் தேவர்கள் சூழ்ந்த பகுதியான தேவகோட்டையில் இருந்த பொழுது,
சீதையைக் கண்டு வந்த அனுமன் "கண்டேன் தேவியை " என்று சொல்லி,
ஸ்ரீராமனுக்கு நம்பிக்கை உயிரினை ஊட்டிய தலம் .இதனால் தேவகோட்டைக்கு அருகி லுள்ள  சிறு கிராமம் "கண்ட தேவி" என்று அழைக்கப்படுகிறது.

2. அம்பிகை ஈசனை அடைய குங்குமக் காளியாக  உருவெடுத்து தவம் செய்த
இடம் தேவகோட்டை.பின் அரக்கர்களை வதைத்து,திருக்கானப்பேர்  என்னும்
காளையார்கோவில் அம்பிகையை ஈசன் சொர்ணவல்லியாக மாற்றி அருள்
பொழிந்து  ஆட் கொண்டார். எனவே இதன் பெயர்  "தேவி கோட்டை".
சென்ற நூற்றாண்டு வரை இலக்கிய  நூல்களில் தேவி கோட்டை என்று வழங்கி வந்துள்ளது. காலப் போக்கில் தேவகோட்டையானது .

வெள்ளையனே    வெளியேறு இயக்கத்தின் முதல் விதை தேவகோட்டையில் தான் போடப்பட்டது .வெள்ளை அரசினை எதிர்த்து,ஏராளமானோர்,1942 ஆம்
ஆண்டு தேவகோட்டை நீதி மன்றத்தினை  தீ வைத்து எரித்தனர்.   அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் மரணம் அடைந்தனர்.
இதன் நினைவாக,இப்போதும் அந்த சாலைக்கு "தியாகிகள் சாலை" என்றும்,
தியாகிகளின் நினைவிடம் "தியாகிகள் பூங்கா" என்றும் அழைக்கப் பெற்று ,
தேவகோட்டை நகராட்சியால் பராமரிக்கப் பட்டு வருகிறது.


சுதந்திரப் போராட்ட தியாகிகள், திரு.டி.ஆர் .அருணாசலம் செட்டியார் , திரு.சின்ன அண்ணாமலை செட்டியார் , திரு.அள .சுப .பழ .சுப.திருநாவுக்கரசுசெட்டியார்,
திரு.தினமணி செட்டியார், திரு.ஆர்ச்.அண்ணாமலை செட்டியார் ஆகியோர்
குறிப்பிட்டு சொல்லக் கூடிய நகரத்தார்கள்.சிறை சென்ற விடுதலைப் போராட்ட வீரர்கள்.

பிரிக்கப் படாத இராமநாதபுரம் மாவட்டத்தின் (தற்போதைய இராமநாதபுரம்,
சிவகங்கை, விருதுநகர் ) முதல் நகராட்சி தேவகோட்டையாகும்.

தேவகோட்டை, நீதி மன்றம், வழக்குகளுக்கும்,தலை சிறந்த வழக்கறிஞர்
களுக்கும் பெயர் பெற்றது.

நகரத்தார்களின் தலை நகரம் தேவகோட்டை ஆகும்.

தேவகோட்டையில் 40 வகையைச் சார்ந்த நகரத்தார் மொத்த புள்ளிகள் 5245.  

தேவகோட்டை நகரச் சிவன் கோவில் :

திரு.கரு.கி ..சொ.சொர்ணநாதன் செட்டியார்அவர்கள், 1920ஆம்  ஆண்டு முதல் 1950 ஆம் வரை தனி ஒருவராக சிவன் கோவில் நிர்வாகத்தை நிர்வகித்து வந்தார்கள், இப் பெரியவர் 1950 ஆம் ஆண்டு 40 வகையினரையும் சிவன் கோவிலில் ஒன்று கூட்டி கோவில் நிர்வாகத்தை அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அன்று முதல்  சுழற்சி முறையில்,  இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 40 வகைகளுக்குள் ,ஐந்து வகையினரால் கோவில் நிர்வாகம் நடை பெற்று வருகிறது. 16 வருடங்களில் 40 வகையினருக்கும் வாய்ப்பளிக்கப்பெற்று ஒரு சுற்று நிறைவுறுகிறது.
40 வகை நகரத்தார்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புத்தான் "தேவகோட்டை  நாட்டுகோட்டை நகரத்தார் தர்ம பரிபாலன சங்கம்". இச்சங்கம் இந்திய அரசியல் சட்ட அமைப்பின் படி 21/10/1960  தேதியன்று புதுக்கோட்டை  பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டது .

தேவகோட்டை  நகரச் சிவன் கோவிலில், சேக்கிழாருக்கு  என்று ஒரு தனிச்
சன்னதி உள்ளது.இங்குள்ள கோவில் மணியில்  சேக்கிழார் மணி என்று பொறிக்கப் பட்டுள்ளது.

மதுரை போன்று, சுவாமி,அம்மன் இரு சன்னதிகளுக்கும் கிழக்கு நோக்கிய இரண்டு ராஜ கோபுரங்கள் உள்ளது தனிச் சிறப்பு.

இங்குள்ள தண்டாயுதபாணிக்கு,பழனியிலுள்ள,பழனி ஆண்டவருக்குள்ளது போன்று தலையில் உச்சிக் குடுமி உள்ளது.

இந்த தண்டாயுதபாணி பெயரில் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார்.

சிவன் கோவிலில் இரண்டு தேர்,வடகலைப்  பெருமாள், தென் கலைப் பெருமாள்  கோவில்களில் தனித்தனியாக இரண்டு தேர் என ஒரே ஊரில் நான்கு தேர்கள் உடைய சிறப்பு உண்டு.

தேவகோட்டையில் நான்கு திசைகளிலும் நான்கு அம்மன் கோவில்கள் என்பது    மற்றுமொறு  சிறப்பு.
கிழக்கில் - கிழக்கு நோக்கிய கோலம் அருணகிரிப் பட்டினம் ஸ்ரீ முத்து மாரியம்மன் .
மேற்கில் - மேற்கு நோக்கிய கோலம் , திருப்பத்தூர் சாலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன்.
வடக்கில் - வடக்கு நோக்கிய கோலம் நகரத்தார் பத்ர காளி அம்மன் .
தெற்கில் - தெற்கு நோக்கிய கோலம்  தாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரிய நாயகி    அம்மன் .

பள.செ. கோவிலிலும்,தி.ஊரணி பிள்ளையார் கோவிலிலும் தூண்களில் உள்ள சிற்பங்கள் சிறப்பு மிக்கவை.

தி.ஊரணிப் பிள்ளையார் கோவிலுள்ள விசாலாட்சி சன்னதி பின் புறமுள்ள இடத்தில்  விழும் நிழல் குத்து விளக்கு அமைப்பில் விழுவது ஒரு அதிசயமாகும் .

தேவகோட்டையில் கந்தர் சஷ்டி  விழா  74 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது.இந்த விழா நிகழ்சிகளில் தமிழகத்தின் தலை சிறந்த இசை விற்பனர்கள், ஆன்மிகப் பேச்சாளர்கள், பரத நாட்டியக்
கலஞ ர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள்.  

சேக்கிழார் விழா  ஆண்டு தோறும் செம்மையாக,வைகாசிப்  பூசத்தன்று நடை பெறுகிறது, இதில் பெரிய புராண  முற்றோதுதலும், நகரத்தார்களில் சிறந்த
ஒருவருக்கு "சிவநெறிச் செம்மல்"என்ற பட்டமும் ஆண்டு தோறும் வழங்கப் படுகிறது.

கடந்த 11 ஆண்டுகளாக ,"ஞான தான சபை " எனும் அமைப்பு வாரந்தோறும்,
வியாழன்  மாலை,திருக்குறள், திருவாசகம் வகுப்புக்களை நடத்தி வருகிறது.
திருவாசகம் 656  பாடல்களையும் இதுவரை 600 முறை முற்றோதுதல் நடத்தியுள்ளது.

தேவகோட்டை கலை இலக்கியப்  பெரு  மன்றத்தின் சார்பிலான பாரதி தமிழ் சங்கம் 50 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய நிகழ்சிகளை நடத்தி வருகிறது.

தேவகோட்டை பிரவசன சபா  சார்பில் ஆண்டு தோறும் ஒரு வாரம் இலக்கியச் சொற்பொழிவு நடை பெற்றுவருகிறது.தமிழக்கத்தின் சிறந்த இலக்கிய வாதிகள் இங்கு நடை பெறும் நிகழ்சிகளில் கலந்து கொண்டுசிறப்பித்திருக்கிறார்கள்.
தேவகோட்டை ஜமீன்தார்  திரு.சோம.நாராயணன் செட்டியார் தலைமையிலான குழு இதனை நடத்தி வருகிறது.  

தமிழகத்தின் தலை சிறந்த பதிப்பாளர்கள்  தேவகோட்டையைச் சார்ந்தவர்களே. சாந்தி பிரசுராலயம், நவயுக பிரசுராலயம், BOOKS INDIA P. LTD. தமிழ் பண்ணை ,பாரதி பதிப்பகம் , வானதி பதிப்பகம் ,இன்ப நிலையம் , மணி மேகலை  பிரசுரம் , அருணோதயம்,கவிதா  பதிப்பகம், குமரன் பதிப்பகம் , பொன்முடி பதிப்பகம்  முதலியன சில.

நாட்டின் மிக உயர்ந்த உச்ச நீதி மன்றத்தில்  நீதியரசராக அமர்ந்த பெருமையினைப் பெற்ற முதல் நகரத்தார் நீதியரசர் டாக்டர் .ஆர்.லெட்சுமணன் அவர்கள்.
மாண்பமை  நீதியரசர் டாக்டர் .ஆர்.லெட்சுமணன் அவர்கள்.நீதியரசர் கற்பக விநாயகம் , திரு.லேனா.தமிழ் வாணன் .அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களின் நேர்முக தேர்தல் ஆலோசகர் திரு.ஹரி சேவுகன் முதலியோர்
தேவகோ ட்டையின் புகழினை உலகறியச் செய்பவர்கள்.

பேச்சாளர்கள்,மற்றும் எழுத்தாளர்களான , காசி ஸ்ரீ.அரு.சோமசுந்தரம், திரு. சொ சொ .மீ சுந்தரம் ,திரு.கண.சிற்சபேசன் , டாக்டர்.சபா .அருணாசலம் , நிதி ஆலோசகர் .சோம.வள்ளியப்பன்,திரைப் பட இயக்குனர் வசந்த் , ஆன்மீகச்  சொற்பொழிவாளர் இலக்கிய மேகம்ஸ்ரீ நிவாசன் ,பேராசிரியர் டாக்டர்,பழனி இராகுலதாசன், தேவகோட்டை இராமநாதன்  ஆகியோர் தேவகோ ட்டையின்  பெருமையினை   பேச்சாற்றலாலும் ,எழுத்தாற்றலாலும்  உலகரியச் செய்பவர்கள்.

திரைப் பட இயக்குனர் எஸ்பி.முத்துராமன்,நடிகர் ,அரசியல் வாதி விஜயகாந்த் ஆகியோர் தேவகோட்டை தே பிரித்தோ மேல் நிலைப் பள்ளியில் பயின்றவர்கள்.

சித.முரு.வீட்டின் பெரியவர் ராமநாத ஐயா என்பவர்,தனுஷ் கோடியில் சத்திரம் வைத்து அன்ன தானம் செய்து வந்தவர்கள் . அவர்கள் வாழ்வின் நிறைவிற்குப் பின் அவர்களைத் தகனம் செய்யும் போது  அவர்களுடைய வலக்கரம் மட்டும் எரியாமல் இருந்தது அதிசயமாகும் . இது அன்னதானத்தின் சிறப்பின் சிறப்பாகும்.அதனைக் கொணர்ந்து சிலம்பணி மேல்கரையில் ஆலயம் எழுப்பி வழிபாடு நடைபெற்று வருகிறது.

தேவகோட்டை ஜமீன்தார்  வீட்டு சொர்ணவல்லி பங்களாவில் அரண்மனை போன்று அந்தப் புரம் உள்ளது.

இரவுசேரி,கண்டதேவி ,இரக்காட்டி  போன்ற இராமாயணக் கதை தொடர்புள்ள கிராமங்கள் தேவகோட்டையைச் சுற்றியுள்ளன .


தேவகோட்டை மேல வீட்டைச் சேர்ந்த வீர.லெ.சிந்நயச் செட்டியார் 
(1855-1900) சிறந்த புலவராகத்  திகழ்ந்தவர்.இவர் நான்காம் தமிழ் சங்கம் நிறுவிய பாண்டித்துரை தேவருடன் இணைந்து பணியாற்றியவர்.வேலங்குடி கல்வெட்டிலிருந்து,நகரத்தார் வரலாற்றை முதலில் வெளியிட்டவர்

தமிழகத்திலுள்ள   கோவில்களில் பெரும் பகுதியினை திருப்பணி செய்தவர்கள் தேவகோட்டை நகரத்தார்களே.  அதில் மேனா வகையினரின்
பங்கு அதிகம்.

பல வங்கிகளில் ஆரம்ப காலம் முதல்,  இயக்குனர்களாக இருந்தவர்கள் தேவகோட்டை நகரத்தார்கள்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - தமிழ் வள்ளல் .ராம.மெ. சுப .சேவு.மெய்யப்ப செட்டியார்.
இந்தியன் வங்கி  -தொடக்க கால இயக்குனராக இருந்தவர்கள் ராம. மெ. சிதம்பரம் செட்டியார். பின்பு .மு. சுப .லெ.மெய்யப்ப செட்டியார் .
மதுரை வங்கி    -   .ராம.மெ. சுப .சேவு.அண்ணாமலை செட்டியார்.
மதுரை வங்கி       -   .முசுப .லெ.அழகப்ப செட்டியார்  
காரைக்குடி வங்கி - மெ.லெ.மெ .மகாலிங்கம் செட்டியார்.  

தொழிற்துறையில் முதற் தொடக்கமாக, நூற் பாலை, சர்க்கரை ஆலை, காகித ஆலை நிறுவியவர்கள் தேவகோட்டை நகரத்தார்கள்.பி.எஸ்.எஸ்.சாத்தப்ப
செட்டியார் , தேவகோட்டை ஜமீன்தார்  வெள்ளையன்  செட்டியார்,சத்திரம் சோமசுந்தரம் செட்டியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்திய ஆட்சிப்  பணியில் , தேவகோட்டை நகரத்தார்களான திரு.சொ.சொ.
மீனாட்சி சுந்தரம்,திரு.ஆர்.லெட்சுமணன் குறிப்பிடத்தக்கவர்கள்

வங்கிப் பணியில், திரு.ராஜேந்திரன் ,ஆந்திரா வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள்  .இவர்கள் தேவகோட்டை நகரத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நகரத்தார்களுக்குரிய ஒன்பது நகரக் கோவில்களில், இளையாற்றங்குடி,
இலுப்பக்குடி,வேலங்குடி ஆகிய மூன்று கோவில்களுக்கு பரம்பரை அரங்
காவலர்கள்  பதவி தொன்று தொட்டு,அந்தந்த கோவில்களைச் சார்ந்த தேவகோட்டை நகரத்தார்களுக்கு வழங்கப் பெற்று வருவது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய செய்தி.  


தேவகோட்டைக்கு பெருமை சேர்க்கும் மறைந்த பெரியவர்கள்.

வன்  தொண்டர் நாராயணன் செட்டியார். மகா வித்துவான்  திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணாக்கர்.
தேவகோட்டை ஜமீன்தார்,அள.அரு. சோமய்யா  செட்டியார் .  
சிவ ஸ்ரீ .சத்புருஷ தேசிகர் பால கவி வயிநாகரம் வே.ராமநாதன் செட்டியார்
மலேசியாவில் வருமான   வரித் துறையில் தலைமை பதவி வகித்த டான் ஸ்ரீ சுந்தரம் செட்டியார்., பார்-அட் -லா படித்து சிறந்த முறையில் வழங்கறிஞராக கோலாலம்பூரில்  பணியாற்றிய KR .P .பெருமாள் செட்டியார் , பினாங்கில் வழங்கறிஞராக பணியாற்றிய அண்ணாமலை செட்டியார் 
தியாகராஜர்  கல்லூரி முதல்வர் சுப.அண்ணாமலை செட்டியார்.. 
இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்தவர் - தேவகோட்டை .என். சொக்கலிங்கம்  செட்டியார்.ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

கல்வி நிறுவனங்கள் 
6 உயர் நிலைப் பள்ளிகள்,8 நடு நிலைப் பள்ளிகள், 3 தனியார் மெட்ரி குலேசன் 
பள்ளிகள்,2 கல்லூரிகள் தேவகோட்டையில் உள்ளன

மருத்துவ மனை :
பெரி .சோம .சாத்தப்ப செட்டியார் குடும்பத்தாரால் வழங்கப்பட்ட நன்கொடையைக் கொண்டு தேவகோட்டை அரசு மருத்துவமனை தொடங்கப் பெற்றது.

இரத்தின வேல் :
பழனி நடைப் பயணத்தில் கொண்டு செல்லும்  இரத்தினவேல் தேவகோட்டை நயினப்ப செட்டியார் குடும்பத்தாரால் செய்து கொடுத்ததாகும் .இந்த
இரத்தினவேலைக் கொண்டு வந்து ஆண்டு தோறும் மாசி மகத்தன்று 31 மூடை அரிசி சமைத்து மகேஸ்வர பூசை நடத்தப் பெறுகின்றது.

ஆன்மீகம், கலை, பேச்சு, எழுத்து, திரையுலகம் , பதிப்புலகம்,திருப்பணிகள்,
பல் சார் துறை அறிஞர்கள் என தேவகோட்டை, பல சான்றோர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால்,தேவகோட்டையை உலகமே அறியும் .

தேவகோட்டை நகரத்தார் திருப்பணிகள்.

1. இராமேசுவரம் :
நகரதார்களில் இராமேசுவரம் கோவிலுடன் முதலில் தொடர்பு கொண்டவர்கள் தேவகோட்டை சமீன்தார் குடும்பமாகும் .தொடர்பு ஏற்பட்ட காலம் 1897.
1897 - 1904 இடையே தேவகோட்டை அள .அரு ( சமீன்தார் குடும்பம் ) ஒன்பது நிலைகளை உடைய 126 அடி உயரமான கிழக்கு கோபுரத்தைக்  கட்டி முடித்தனர்.
1907-1925 இடையே இக்குடும்பத்தினரே முதல் பிரகாரத்தை திருப்பணி செய்து வெளிச்சம், காற்று வசதி உண்டாகும்படி செய்தார்கள். 06.02.1925 திருக்குட நன்னீராட்டு விழாவை நகர்த்தார்கள் நடத்தி வைத்தார்கள்.

2. காளையார் கோவில்
சிவகங்கை அரசர்களும் சமீன்தார் குடும்பத்தாரும் சேர்ந்து காளையார் கோவிலில் திருப்பணி செய்துள்ளார்கள்.

3. திருவையாறு
உ.ராம .மெ .சுப .சேவு.குடும்பத்தார் சிவன்கோவில் திருப்பணி செய்துள்ளார்கள்.

4. திருவிடைமருதூர்
மெ .லெ.மெ .நா .இராமநாதன் செட்டியார் சிவன்கோவில் திருப்பணி செய்துள்ளார்கள்.

5. திரு உத்திரசகோசமங்கை
அழ . சித.லெ.இராம.குடும்பத்ரார்கள் மங்கள சுவாமி கோவில் திருப்பணி செய்துள்ளார்கள் .
அள .அரு .அள .சித .லெ , அள .சுப .சு . ராம .அரு .மற்றும் சித .லெ .ராம ஆகிய குடும்பத்தினர் சிவன் கோவில் திருப்பணி செய்துள்ளார்கள்.

6. திருச்சுழி
தி .ஆ .சு .அண்ணாமலை செட்டியார் சிவன்கோவில் திருப்பணி செய்துள்ளார்கள்.

7. திருக்குற்றாலம்
வி.கரு .சித .சோம . மற்றும் பிச .அரு குடும்பத்தார் சிவன் கோவில் திருப்பணி செய்துள்ளார்கள்.

8.திருவான்மியூர்
முரு .கி .இராமநாதன் செட்டியார் சிவன் கோவில் திருப்பணி செய்துள்ளார்கள்

9.திருஏடகம்
உ .ராம .மெ .சுப .பெரிய சேவுகன் செட்டியார், அவர்தம் சகோதரர்கள்
உ .ராம .மெ .சு.சே .சின்ன சேவுகன் செட்டியார், உ .ராம .மெ .சு.மெ .மெய்யப்ப செட்டியார் சிவன் கோவில் திருப்பணி செய்துள்ளார்கள்.

10. திருவெண்ணைமலை
தி .சு .பழ .சுப .முத்துக்கருப்பன் செட்டியார் சிவன் கோவில் திருப்பணி செய்துள்ளார்கள்.

11.திருவெண்காடு
மு.ராம.சுப .குடும்பத்தினர் சிவன் கோவில் திருப்பணி செய்துள்ளார்கள்.

12.கோடிக் குழகர்   (வேதாரண் யம் அருகில்)  மற்றும் வேதாரண்யம்
சத்திரம் சோம.குடும்பத்தினர் திருப்பணி செய்துள்ளார்கள்.

13.திருப்புவனம்
உ.மு .குடும்பத்தினர் திருப்பணி செய்துள்ளார்கள்.

14. கோட்டூர்
தி .வெ .மாயாண்டி செட்டியார் திருப்பணி செய்துள்ளார்கள்,

15. மதுரை
இம் மையில் நன்மை தருவார் கோவிலில் மெ .ராம .அ .குடும்பத்தார் , மற்றும் 
பள .சு .அருணாசலம் செட்டியார் குடும்பத்தார் சிவன் கோவில் திருப்பணி செய்துள்ளார்கள்.
 
16.மயிலாடுதுறை.
அழ .வீர .பெ .வீர .வெங்கடாசலம் செட்டியார் சிவன் கோவில் திருப்பணி செய்துள்ளார்கள்.

17.ஐந்து தேவாரப் பாடல் பெற்ற திருக்கோவில்களில் திருப்பணி செய்து வைத்த சிறப்பு ராம. மெ. சித குடும்பத்தார்களை சாரும். 
1) அக்னிபுரிஸ்வரர் கோவில் - அன்னியூர், கும்பகோணம் அருகில்.
2) வெண்மணி குரும்பேஸ்வரர் கோவில் - கோவில் வெண்ணி, தஞ்சாவூர்-நீடாமங்கலம் நெடுஞ்சாலையில் உள்ளது. 
3) அருள்மிகு தாளபுரிஸ்வரர்- ஓசைநாயகி அம்மன் கோவில் - திருக்கோலக்கா, சீர்காழி. 
4) வீரட்டானேஸ்வரர்-சிவானந்த வள்ளி கோவில் - கீழையூர், திருக்கோவிலூர், திருவண்ணமலைஅ ருகில். 
5)ரத்தினபுரிஸ்வரர்-அமோதள நாயகி அம்மன் கோவில் - திருமருகல்,
திருவாரூர் அருகில்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிப் பதியில் மலை மேல் ராம .மெ .சித.குடும்பத்தாரின் தண்ணீர்பந்தல், அவர்களுக்கு பாத்தியப்பட்ட சொந்த கட்டிடத்தில் உள்ளது. 


 
கட்டுரை ஆக்கம்
மா.அரு.சோமசுந்தரம்.தேவகோட்டை.