வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

பாடுவார் தந்த அஷ்ட லெட்சுமி பாடல்கள்

பாடுவார் தந்த அஷ்ட லெட்சுமி  பாடல்கள் (அருணாசலம்  சோமசுந்தரம் )

பாடுவார் முத்தப்பா செட்டியார் 18 ம் நூற்றாண்டில்,கீலச்சிவல்பட்டி ஊரில், நகரத்தார் இனத்திலே தோன்றியவர். நேமம் கோவிலைச் சார்ந்தவர்கள்.தந்தையார் திரு.அழகப்பா செட்டியார், தாயார் திருமதி லெட்சுமி  ஆச்சி.

இவர் பாடிய பாட்டெல்லாம் பலிதமாகியது, சத்தியமாகியது. இச் சிறப்பு அவரது பிறப்பின் சிறப்பு,அவரது இனத்தின் சிறப்பு.

"காடுவெட்டிப் போட்டு கடிய நிலந் திருத்தி                 
வீடு கட்டிக்கொண்டிருக்கும் வேள் வணிகர் வீடுகட்க்கு 
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே 
என்றைக்கும் நீங்காதிரு" 

இந்த பாட்டினைத் தெரியாத நகரத்தார்கள் இருக்க மாட்டார்கள். இதனை தினம் பிரார்த்தனை செய்யாத நகரத்தார்களும் இருக்கமாட்டார்கள்.இதனை எழுதியவர் பாடுவார் முதப்ப செட்டியார் தான்.

இந்த பாட்டின் சிறப்பு, திருமகளாம் இலக்குமியை, நம் நகரத்தார் வீட்டுப் பெண்ணாக, நம்மையெல்லாம் காக்கும் தாயாக சொந்தம் கொண்டாடுகிறார்.

அஷ்ட லெட்சுமியை வரிசைப் படுத்துகின்ற போது,

1 . ஆதி லெட்சுமி         
2 . தானிய லெட்சுமி 
3 . தைரிய லெட்சுமி 
4 . கஜ லெட்சுமி 
5 . சந்தான லெட்சுமி 
6  .வித்யா லெட்சுமி 
7 . விஜய லெட்சுமி 
8 .  தன லெட்சுமி  

என்று வரிசைப் படுத்திச் சொல்லுவார்கள். இந்த வரிசையிலே பாடுவார் முதப்ப செட்டியாரும் அஷ்ட லெட்சுமியைப் போற்றி எட்டுப் பாடல்கள் பாடியுள்ளார்கள்.மேலே பார்த்த பாடல், அவர் தன லெட்சுமியைப் போற்றிப்  பாடிய எட்டாவது பாடலாகும். 

வீடு கட்டுவது என்பது செல்வத்தின் செழிப்பு.தானமும், தர்மமும் என்றென்றம் செய்து வருகின்ற நகரத்தார் இல்லமெல்லாம் லெட்சுமி தாயாக நீங்காதிருக்க வேண்டும், தனமாகிய செல்வம் என்றென்றும் தங்க வேண்டும் என்று பேராசை கொண்டு தாய் லெட்சுமிக்கே கட்டளையிடுகிறார். 

1 .ஆதி லெட்சுமி 

"நின்மேலும் ஆணை, நின் மா கொழுநன் தன் மேலும் ஆணை 
தமிழ் மேலும் ஆணை , தவ வணிகர் சின்னஞ் சிறுவர் 
தெரியாத காளையர் என் செய்யினும் பின்னும் 
பொறுத் திருப்பாயே பெரிய இலக்குமியே "

மகா லெட்சுமியை , மகா விஷ்ணுவை , தனிகரில்லா செம்மொழியாம் தமிழ் மொழியையும் துணைக்கு அழைத்து, நகரத்தார் இனத்துப் பிள்ளைகள், சிறுவர்கள், தெரிந்தும்,தெரியாமலும் செய்த தவறுகள், பிழைகள் அனைத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.          

2 .தானிய லெட்சுமி 

" புல்லை விதையாக்கி பூமியிலே நட்டாலும் 
நெல்லாக மாற்றும் நிறமுடயாய்
கல்லெல்லாம் ஆக்கிப் புசிக்கும்
அருமை உணவாக்கி வாய்க்குத் தருவாய் வரம் "

நெல் பயிருடுகின்ற போது, நெல்லோடு வளரும் களைப் பயிராம் புல்லும் நெல்லாக மாறவேண்டும்.அரிசியோடு கலந்து விடும் கல்லும் அருமையான உணவாக வேண்டும், செரிக்க வேண்டும் என்கிறார். இது பொது மனித சிந்தனை, சமுதாய சிந்தனை.

3 . தைரிய லெட்சுமி 

"பஞ்சான கையால் படைக் கருவி ஏந்தாமல்
எஞ்கான்றும் வெல்லும் இயல்புடையாய் 
அஞ்சாமல் நேர்மைப் படையால் நெருங்கும் 
பகை வெல்லும் கூர்மை எமக்குக் கொடு "

படைக் கருவிகளான ஆயுதங்களை, பஞ்ச பூதங்களை வணங்கும் மிருதுவான  கைகளால் எடுக்க வேண்டாம். பிரச்சினைகள், பகை, என்று வந்த போதும், அதனை எந்த தருணத்திலும் வென்று வருகின்ற சிறப்பு,நேர்மை,  பயமின்மை,அறிவு, ஆற்றல், திறமை, ஆகிய சிறப்புக் குணங்களை நகரத்தார்களுக்கு கொடுக்கவேண்டும் என்கிறார் .

4 . கஜ லெட்சுமி 

"ஆணை இருபுறம் அள்ளிச் சொரிபுனல் போல் 
தானம் கொடுக்கும் தவப் பயனே 
ஈனம் எனும் இப்பிறவி இனிமேலே போய் ஒழிய 
துந்திக்கை தருவாய் துணை "

தனம் கொடுப்பவள் மகா லெட்சுமி.கிடைத்த தனத்தைக் கொண்டு, தானம், தர்மம் செய்யவேண்டும். வாழும் நாளில் நற்காரியங்கள் செய்வோர்க்கு மறுபிறப்பு என்பது இல்லை.இந்த நம்பிக்கையை மனதிலே நிலை நிறுத்த வேண்டும். அன்னையவள் துணை புரிய வேண்டும் என்கிறார். 

5 . சந்தான லெட்சுமி 

"கல்லூரும் வாயால் கனி மழலை பேசுகின்ற 
பிள்ளை வரம் அருளும் பேரன்பே 
எல்லோரும் நல்லவரைப் பெற்றிடவும் 
நாடு சிறந்திடவும் வல்லவளே ஈவாய் வரம்"  

ஈடு இணையற்ற செல்வமாம் பிள்ளை செல்வத்தை தந்தருளும்  அன்பு மிகுந்த தாயே, குணம், நலம் நிறைந்த பிள்ளைகள் எல்லோருக்கும் பிறந்திட வேண்டும். நல்லவர்களைக் கொண்ட நாடு சிறந்து செழிப்புறும்.அப்படியான நல்ல வரம் நாங்கள் பெற வேண்டும், தர வேண்டும் என்கிறார்.

6  .வித்யா லெட்சுமி 

"வெற்றித் திருவே விளக்கேற்றிக் கும்பிடுவார் 
கற்றுச் சிறந்திடவும் கல்வியுடன் மற்றவையும் 
உற்றுச் சிறந்திடவும் உண்மை நிமிர்திடவும் 
ஏற்றிடுக எங்கள் இடர் "

வெற்றித் திருமகளாம் மகா லெட்சுமித் தாயை தினம் விளக்கேற்றிக் கும்பிட வேண்டும். வணங்கு வோரெல்லாம் மேலான கல்வி பெற்றிட வேண்டும்.கல்விச் செல்வத்தோடு, மற்ற எல்லாச்   செல்வங்களையும்   உயர்வோடு பெற்று சிறக்க வேண்டும். உண்மை நிலைக்க வேண்டும். துன்பம் எல்லாம் நீக்கி காத்திட வேண்டும் என்கிறார்.

7 . விஜய லெட்சுமி 

"நீங்காத நின் மகளும் நீண்ட திருமாலும் 
பாங்காக அன்று வந்த பாற்கடல் போல் 
தேங்காமல் நீ இருந்து நாளும் வளம் பெருக்கி 
என்றைக்கும் நீங்காதிரு" 

செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாகிய திருமகளாம் மகா லெட்சுமி தாயே, மூன்று உலகிலும், அடியும், முடியும் காணமுடியாத நீண்ட திருமேனி கொண்ட  மாலவனே, எங்கள் இல்லத்தில்  என்றென்றும் குடி கொண்டிருக்க வேண்டும்.பரவி, விரிந்த பார் கடல் போன்று வளம் யாவும் பெருக வேண்டும்  என்று வேண்டுகிறார்.

நகரத்தார் இனம் சிறக்கப் பாடியவர். அப்பெருமகனாரை நகரத்தார் பெருமக்கள் என்றென்றும் நினைத்துப் போற்ற வேண்டும், வணங்க வேண்டும்.

இரு உள்ளங்கையை சேர்த்து வைத்துப் பார்த்தால், கடைசியாக இருக்கும் இரண்டு கட்டை விரல்களும், இரு பக்கமும் யானைகள் தும்பிக்கையை நீட்டிக் கொண்டிருப்பது போன்றும், நடுவிலே உள்ள எட்டு விரல்களும் அஷ்ட லெட்சுமியையும் குறிப்பதாகவும்  சொல்லுவார்கள்.  இது குறித்து வட மொழியில் மந்திரம் ஒன்று உண்டு. அந்த மந்திரம்,

"கர கிரக வரத லெட்சுமி      
கர மத்ய சரஸ்வதி 
கர மூலதே கோவிந்தா 
பிரபதே கர தர்ஷனம் "

கைகளின் விரல்களில் லெட்சுமியும், மையப் பகுதியில் சரஸ்வதியும்.கீழ் பகுதியில் கோவிந்தனும் (மகா விஷ்ணு ) வாசம் செய்வதாக நம் புராணங்கள் கூறுகின்றன.

இதன் காரணமாகத்  தான், காலை எழுந்தவுடன், இரு கைகளையும் சேர்த்து வைத்து உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்று நம் பெரியவர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள்.பார்க்கும் பொழுது மகா லெட்சுமியை நினைக்கிறோம், திரு மகளின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை தான் வாழ்க்கை.

நல்லவனவற்றை நினைக்க வேண்டும், சொல்ல வேண்டும், செய்ய வேண்டும்.நமக்கு கிடைப்பதும், நாம் கொடுப்பதும், அத்தனையும், அன்னையவள் திருமகளாம் மகா லெட்சுமி நமக்கு கொடுத்தது.

நன்று பல செய்து, நலம் பல பெற்று வளர்வோம், வாழ்வோம்.