திங்கள், 8 டிசம்பர், 2014

உடம்பைப் பேணிடு .

ஓடி ஓடி ஓய்வில்லாமல் உழைக்கிறான்,
காசு பணம் சேர்ப்பதிலே குறியாய் இருக்கிறான் ,
சொத்து சுகம் பார்க்கிறான்,
சொந்த சுகம் நினைக்கலை!

காசு பணம் வந்துச்சு,
கஷ்டமெல்லாம் போச்சுதா ?
கவலையெல்லாம் தீர்ந்துச்சா?
உடம்பிலே சீக்கு வந்து சேர்ந்தது தான் மிச்சம் !

உடம்பை பாக்கமலே காசு சேத்தவன்,
சேத்த  காசு இப்ப சீக்கப் போக்கவே சிலவாகுது!
சீக்கும் வேண்டாம் ,சிலவும் வேண்டாம்,
தேவைக்கு உழைத்திடு.

சிக்கனமாய் இருந்திடு.
உடம்பைப் பேணிடு .
உயர்வாய்  வாழ்ந்திடு .

வியாழன், 4 டிசம்பர், 2014

மாமன் மகள்

மாமன் மகள்

வெட்ட வெளி தனில்
பற்றவைக்கும் வெயில்தனில்
சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாய்
கிட்ட  நெருங்க ஆசை கொண்டேன்
ஒதுங்கி ஒதுங்கியே நீ சென்றாய்

மாந்தோப்பு நிழல் அருமை என்றேன்
மருங்கும் நேரம் மயக்கும் பார்வை தந்தாய்
மாலை நேரம் வரக் காத்திருக்க
மன்மத நேரம் கூடிவர
மறக்காமல் வந்து  விடு
குறையாமல்  சுகம் தந்து விடு

மாமன் மகள் நீ
மஞ்சங் கிழங்கு நீ
பெருவது நான்
தருவது நீ
காத்திருப்பேன் கல்யாணக் காலம் வரை.







புதன், 3 டிசம்பர், 2014

உன் தன்மை உனதருமை

உண்மை உணர்வோடு,
என்றும் நன்மை செய்து,
பொல்லாங்கு பேசமால்,
உதவிடும் மனம் கொண்டு,
இருந்திடும் காலத்திலும்,
இல்லாத போதும்,
பெயர் நிலைக்க  வாழ்ந்திடல் வேண்டும்.

வாழ்ந்த விதம் ,
வளைந்து போவதல்ல ,
வளர்ந்து சிறப்பதே .

சொல்லால் , செயலால் ,
பொருளால், பொறுமையால் ,
உதவிடுதல் வேண்டும்.
உன் தன்மை ,உனதருமை .

புவிதனிலே வாழ்ந்து சென்றவர்கள்
பெயரெல்லாம் நினைவிலுண்டா ?
நிலத்ததுண்டா ?

செயற்கரிய செயல் என்பதல்ல ,
சமூக நலம் காத்தல் ,
உதவிதனை உறுத்தாமல் செய்தல் ,
நினைவில் நிறுத்தும் ,
பெயர் நிலைபெறும். 

செவ்வாய், 2 டிசம்பர், 2014

என் பயணம்

என்  பயணம்
விழியோரம் வழியும் கண்ணீர்
மழைத் தூரல் மறைத்திடும்
தனி ஆளாய் நான் போகும் பாதை
சரியென்றே மனம் சொன்ன நேர்மை

உறவுகள் நோகடிக்க
உண்மைகள் உறங்கிக் கிடக்க
உயர்வுகள் ஒழிந்திருக்க
பொறுமையே சரி என்று
ஒதுங்கிப் போகிறேன்

செல்வமும் செழிப்பும் பார்தரிந்தேன்
பணமே பிரதானம் என்பாரின்
பண்பாடும் உடன் அறிந்தேன்
புறம் பேசி வரம் கொடுக்கும் வள்ளல்கள்
வாழும் விதம் நான் அறிவேன் 

அரசன் அன்றே கொல்வான் 
தெய்வம் நின்று கொல்லும் 
தமிழன் சொன்ன வேதம் 
எல்லாம் தனக்கில்லை பிறர்க்கே 
என்பது அவரவர்  சொல்லும் பாடம் 

உண்மைக்கு உயர்வுண்டு 
உயர்வுக்கு வழியுண்டு 



சிறப்பின் சிறப்பு


ஓவியத்தின் தனித்தன்மை
ஓவியனின் உன்னதம்

காவியத்தின் தனிச் சிறப்பு
கதை தரும் கருத்து

சிலையின் முழு அழகு
சிற்பியின்  கை வண்ணம்

படைப்பின் ரகசியம்
பரவசத்தின் உச்சம்

எண்ணங்களின் கோர்வை
எழுத்தின் பிறப்பு

மன்னிக்கத் தெரிந்த மனசு
மறுக்கமுடியா உன்னதம்

மழலை தரும் மகிழ்ச்சி
வற்றாத ஜீவநதி

வெள்ளி, 28 நவம்பர், 2014

புது வசந்தம்


பணிவான சொல் வேண்டும், 
பகட்டான வாழ்வு வேண்டாம் . 

நேரான பார்வை வேண்டும் , 
நிலை தடுமாறும் செயல் வேண்டாம். 

உண்மை பேசிடல் வேண்டும் , 
புறம் கூறித் திரிதல் வேண்டாம் . 

சுகம் மனதினில் வரித்திடல் வேண்டும், 
சோகம் மனதாலும் நினைத்திடல் வேண்டாம் . 

உழைப்பின் உன்னதம் உணர்ந்திடல் வேண்டும், 
பலன் கருதி பாசாங்கு செய்திடல் வேண்டாம் . 

உதவிடும் எண்ணம் வேண்டும், 
பெருமை பெற நினைத்திட வேண்டாம். 

இவை நினைவில் கொண்டு வாழ்ந்து பார்த்து விடு, 
புது வசந்தம் வாழ்க்கையில் நிலைத்துவிடும் .

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

வாழ்க்கையின் பலம்

பிறப்பது ,பெருமையல்ல ,
பிறந்த பிறப்பு ,அருமை கருதி
அருமை காத்து ,சிறப்பு பெறுவதே
பெருமை.

வாழ்க்கையின் நலம் ,
நல்லவன் என்பதும் ,
வாழ்க்கையின் சுகம் ,
பிறர்க்கு உதவுவதும் ,
வாழ்க்கையின் பலம் ,
நேர்மை பேணுவதாகும்.

பணமும் ,வசதியும் ,
வரும் போகும்.
நிம்மதி பெற ,
நினைத்திடவேண்டும் ,
உனக்கும் கீழே ,
ஆயிரம் கோடி .

பணமும் ,வசதியும் ,
வரும் போகும்.
நின்று காத்திட ,
செய்திடவேண்டும்,
நிலையான தர்மங்கள் பல .



  

சனி, 30 ஆகஸ்ட், 2014

திருமண பதிவு செயலாக்கம்

                                               திருமணப்  பதிவு செயலாக்கம்


நான் புரிந்து கொண்ட அளவில்,

1வது நபராகிய திரு. _________________________________________________  , தாங்களும்,
2வது நபராகிய திருமதி .__________________________________________________ தாங்களும்,

உங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில்கணவன் - மனைவியாக
வாழ்க்கையில் இணையும் நோக்கத்தில் வந்துள்ளீ ர்கள் .

உங்களுக்கு தெரியப் படுத்துவது  என்னவென்றால், இந்த திருமணப்  பதிவு செயலாக்கத்தின் படி , உங்களுடைய  திருமணம், இங்கு வந்திருக்கும் சாட்சிகளின் முன்பாகவும் , சட்டப்  படியும் ,உங்கள் சம்மதப் படியும்,
நீங்கள்  இருவரும் சட்டப் பூர்வமாக திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை
முழுதும் இணைந்திருப்பீர்கள் என்று ஒப்புக் கொள்வதாகும் .

இந்த திருமணமானது, செல்லத்தக்க நீதிமன்ற தீர்ப்பாணையின் பிரகாரம் அன்றி    உங்கள் வாழ்க்கை காலத்தில் கலைக்கப்படக் கூடியதல்ல.

உங்கள் வாழ்க்கை காலத்தில்,  இந்த திருமணம் நடை முறையில் இருக்கும் காலத்தில், உங்களில் ஒருவர் , எந்த சூழ்நிலையிலாவது      மறு திருமணப் பதிவு செயலாக்கம் செய்தால், உங்கள் செயல்  சட்டத்திற்கு எதிராக
குற்றம் செய்ததாகக்   கருதப்படும்.

தாங்கள், திரு ___________________________________________________________
திருமதி._____________________________________________________________அவர்களைஉங்கள் மனைவியாக சட்டப் பூர்வமாக  ஏற்றுக் கொள்கிறீர்களா?

தாங்கள், திருமதி  ___________________________________________________________
திரு._______________________________________________________________அவர்களை
உங்கள் கணவனாக  சட்டப் பூர்வமாக  ஏற்றுக் கொள்கிறீர்களா?

இருவர் சம்மததையும் ஏற்று ,நான் இப்பொழுது உங்கள் இருவரையும் கணவன் - மனைவி என்று அறிவிக்கிறேன்.வாழ்த்துக்கள் .


 

சனி, 23 ஆகஸ்ட், 2014

கேள்விகள்


எடுப்பதும் தொடுப்பதும்
வினையென்றால்
நினைப்பதை என்னவென்பது

பார்ப்பதும் நடப்பதும்
செயலென்றால்
மகிழ்வதை என்னவென்பது

படைப்பதும் காப்பதும்
மரபென்றால்
மரணத்தை என்னவென்பது

கொடுப்பதும் பெறுவதும்
தர்மமென்றால்
நேயத்தை என்னவென்பது

தொழுவதும் எழுவதும்
பக்தி யென்றால்
பணிவை என்னவென்பது

பொறுமையும் ,நயமான பேச்சும்,
அன்பென்றால்,
அரவணைப்பை என்னவென்பது ?






நல்லவை நடக்கும்


வேறான செய்திகள் மாறாக வந்து சேர,
வெந்து போகுது மனம்.
தவறான செய்கைகள் தடம் புரண்டு ஓட,
மனம் தத்தளிக்குது தினம்.

கூட இருந்தே, கெடுதல் செய்வார் செயல்,
கசந்து போகுது மனம்.
பணத்தாசையின் உச்சம் பரிதவிக்குது,
மாற்ற முடியாத  குணம்.

உண்மைக்கு மாறாக  நடப்பார்,
நன்மையே அறியாத பலர்.
வெளி வேஷம், பகட்டு ,
பொய், பித்தலாட்டம்,
கூடி நின்னு ஒன்னா நிக்குது.

ஒதுங்கி நின்னு பார்க்கும் கூட்டம்,
கை கட்டி சும்மா பார்க்குது .
தினம் நடுக்குது நாட்டிலே ,
மாற்ற நினைக்க யார் உளர்.

உண்மைக்கு கை கொடு,
உயர்வுக்கு தோள்கொடு,
தவறு கண்ட இடத்தில் தட்டி கேட்டிடு,
 எட்டி நின்று பார்க்கும் கூட்டம்,
உன்னதம் அறிந்து உன்னை உயர்த்தும். 

உன்னளவில் நீ உயர்ந்தால்,
நல்லவை  நடக்கும் நாளைய உலகில்.

புதன், 13 ஆகஸ்ட், 2014

தேசப் பிதாவே.

தேசப் பிதாவே,
நீ கால் பதிக்காத நாடு
அமெரிக்கா!
அயல் தேசம் என்றளவில்,
 உன் தபால் தலையை முதன்மையாய் ,
வெளியிட்டது அந்நாடே !

தேசப் பிதாவே ,
இருக்கும் காலத்தில்,
உனக்கு என்று பணம் ஏதும் சேர்க்கவில்லை ,
வங்கிக் கணக்கும் உன் பெயரிலில்லை ,
ஆனால் இன்று  ,
இந்திய தேசத்தின் பணத்தாளிளெல்லாம் ,
உன் படமே !

தேசப் பிதாவே !
இந்தியத் திரு நாட்டின்
விடுதலைக்கு வித்திட்டவன் ,
ஆயுதமேந்தாமல் ,அறப்போராட்டம்
நடத்தி அமைதி கண்டவன்
நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தவன். 

நோபெல் பரிசு ,
உலகின் தலையாயப் பரிசென்பார்.
உனக்கு நோபெல் குழு ,
அமைதிக்கான நோபெல் பரிசு
இருக்கும் போதும் வழங்கவில்லை
இறந்தபின்னும் வழங்கவில்லை.
உன் கள்ளமில்லா பொக்கை வாய்
சிரிப்பிற்கு ஈடாகுமா எந்தப் பரிசும்.

உன் ஆயுதமேந்தா அறவழியில்
உன் வழியே  எங்கள் வழியென்று
உன்னைப் பின் பற்றிய ஐய்வர்
பெற்றார் அமைதிக்கான நோபெல் பரிசினை!
காந்திய வழியை பின்பற்றியதால் பெற்றோம்
பரிசு என்பது அவர்தம்  கூற்று.

(அந்த ஐவர்
1.மார்டின் லூதர் கிங்     -அமெரிக்கா .
2.தலாய் லாமா                - திபெத்.
3.ஆங் சான் சூகி              - மியான்மர்.
4.நெல்சன் மண்டேலா - தென் ஆப்ரிக்கா. (jointly with Frederik William of  SA )
5.அடால்ப்போ பெரோஸ் எ ஸ்க் யூ வெல் - அர்ஜென்டினா .)    










ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

உன் விரலுக்குள் என் வாழ்வு....... 
எனது நடை வண்டி நீ..... 
கரிசன களிம்புக்காரன்..நீ . 
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்.....

தவழ்ந்தவன், தடுமாறி எழுந்தவன், 
அன்று நடை தடுமாறாமல் கை கொடுத்தாய் .
பின்பு தடை வாரா  வாழ்வு தந்தாய் . 
நீயே தாயே ! 

அன்று உங்கள் விரல்களே என் முதல் 
நடை வண்டி..
பின்பு தான் கண்டேன்  மர நடை வண்டி.
தந்தது தாயே நீயும் அப்பாவுமே .

எல்லாமும் தந்தீர் ,
என்னை ஆளாக்கினீர். 
என்னை உருவாக்கினீர் .
கரிசனமும் கண்டேன் .
கண்டிப்பும் கண்டேன் .
களிப்போடு நிற்கிறேன் .

தவறுகள் கண்ட போது 
மறவாமல் கண்டித்தீர்கள் ,
தண்டித்தீர்கள் ,
கண்ட பலன் உயர்வான வாழ்வு.

அன்பு, பாசம் ,அடக்கம், 
ஆண்றோர்  சொல் கேட்டல் ,
நற்சிந்தனை, நயமான பேச்சு ,
அத்தனையும் கண்டேன். 

பெற்றது ஒன்றல்ல ,
பெருமைகள் பல .
பெருமையோடு சொல்வேன்,
மறு பிறப்பிலும் நீயே என் தாயாக வேண்டும்.  




புதன், 6 ஆகஸ்ட், 2014

ஆறடியில் அருமை


என்னடி பெண்ணே, என்னடி பெண்ணே,
ஏனிப்படி இருக்கிறாய் !
சொல்லடி பெண்ணே, சொல்லடி பெண்ணே,
சொல்லவருவதை, சொல்லிவிடு!
கூறடி பெண்ணே, கூறடி பெண்ணே,
குறிப்பறிந்து,  பேசிவிடு !

குற்றம் பார்க்காதே,
குறைகள் பேசாதே,
வாழ்கைச்  சக்கரத்தில்,
சூட்சமங்கள் அதிகம் .
சாத்திரங்கள் அதிகம்.
சம்பிராதயங்கள் அதிகம்.
சார்ந்திருந்து வாழ்ந்து விடு ! 

இயல்பான வாழ்கை,
எற்றமுடன் பெற்று,
பொறுமை பேணி காத்து,
பேரிடர்கள் தவிடாக்கி ,
பெருமைகள் சேர்த்திடுவாய் .

ஆறடியில் அருமை இருக்கு .
அதனை அனுதினமும் நினைத்திடுவாய் .

ஓரடியில்  பெயரும்
ஈரடியில்  வாழ்வும்
மூன்றடியில் நினைவும்
நாலடியில்  நலமும்
ஐந்தடியில் வளமும்
ஆறடியில்  மண்ணும்
யாவும் பெற்று வாழ்வு சிறக்க
வாழ்ந்திடுவாய் !

(ஓரடி      - ஒழுக்கம்.
ஈரடி         - குறள் போற்றி வாழ்தல்.
மூன்றடி - அறம், பொருள்,இன்பம்.
நாலடி     - நான்கு திசைகள்.
ஐந்தடி     - ஐய்ந்து வகை நிலம்.
ஆறடி      - வாழ்வின் முடிவு. )

வெள்ளி, 25 ஜூலை, 2014

மனம் மலராகும்

உடல் அழுக்கு வெளியேற
வாய்கள் ஒன்பது உண்டு

மன அழுக்கு வெளியேற
வழி தான் உண்டா ?
முறை தான் என்ன?

ஒன்பது வாசல்கள் வேண்டாம்
உயர்வான எண்ணம் ஒன்று போதும்

நிதர்சனத்தின் நிகரென்று
நிம்மதியாய்  வழியுண்டு

உதவிடும் எண்ணம்
உடன் செய்திடல் 

ஊருக்கு உழைத்திடல்
உண்மை பேசிடல்

நன்மை செய்திடல்
தவறேதும் செய்யாதிருத்தல்

உன் வழி இதுவென்றால்
உனக்கு நிகர் எவருண்டு

மனம் மலராகும்
இருந்து பார்
வாழ்ந்து பார்
இழப்பது ஒன்றுமில்லை

வியாழன், 24 ஜூலை, 2014

என் மனதில் ஒரு கேள்வி

தோட்டத்தில் நடை பயிற்சி
நடக்கின்ற போது  கண்ட காட்சி
கட்டெறும்பு இரண்டு
இரண்டு மட்டும்  செல்ல
ஒன்றின் தடம் மாறாமல்
மற்றொன்று அதனை இணைந்து
பிணைந்து செல்ல
என்  மனதில் ஒரு கேள்வி
கட்டெறும்பு இரண்டும்
கணவன் மனைவியா?
காதலன் காதலியா?
அண்ணன் தம்பியா?
அக்கா  தங்கையா?
அண்ணன்  தங்கையா?  

வெள்ளி, 18 ஜூலை, 2014

எண்களுக்காண தமிழ் எழுத்துக்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள

எண்களுக்காண  தமிழ் எழுத்துக்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள

1.   -        ------       ஒரு    டையில்

2.   -    உ  -----  இரண்டு றவினர்கள்

3.   -    ங்  -------  மூன்று  சங்கிலிகள்

4.   -     ச  ------  நான்கு   லங்கை

5.   -     ரூ -----   ஐந்து   ரூபாய்க்கு

6.   -     சு ------   ஆக      சுத்தமாய் 

7.   -     -------  எது எது  ப்படியோ 

8.   -        -------அது அது  ப்படியே

9.   -     கூ ------ வாங்கி கூத்தாடினார்கள்



சனி, 12 ஜூலை, 2014

கற்றவை, பற்றவை



அறிவு தருவது ,
அ றம் வளர்ப்பது ,
அன்பு காப்பது  ,
அதுவே  கல்வி.

கற்றவை கடுகளவே ,
கற்றவை காத்திடும்,
கற்றவை நிலைத்திடும் ,
கற்றவை உயர்த்திடும் .

தரம் பிரித்து ,
தகுதி வளர்த்து ,
தரணியில் சிறந்திடு ,
தந்திடும் கற்றவை.

 உன்னால் உதவி ,
ஊருக்கு நலமே .
கொடுப்பது தர்மம் ,
காத்திடும் தலைமுறை.
தூண்டுதலே பற்றவை .

விளக்கு ஒன்று ,
ஏற்றலாம் பல .
சாற்றிடும் மந்திரம்,
போற்றிடும் வித்தைகள் ,
மாற்றிடும் பாதைகள் ,
தருவதோ தூண்டுதல்.

கை  காட்டுதல் ,
காசு கொடுத்தல்,
நிலைக்காது என்றும் .
நிலையான செயல்,
கொடித்திடு  அறிவை .
குறையாது உனக்கு,
கொண்டாடிடுவர் தினமும்.














வியாழன், 10 ஜூலை, 2014

வாழ்க்கை நியதி -2



காலம் எனும் கண்ணாடி
காட்டும்  காட்சி
மாறாதது மனசாட்சி
பெற்றதும் உற்றதும்
மாறிவிடும் வீழ்ச்சி

நல் நினைவு  உன் மனம்
நினைக்கட்டும் தினம்
மலரட்டும் மகிழ்ச்சி
தளரட்டும் அயர்ச்சி

உற்றவர்கள் உயர்ந்து
உரியவர்கள் நிமிர்ந்து
பகை என்பது பரிசானால்
தொகை யறிந்து நடந்தால்
முறையாகும் பாதை .

வேரோடு வெட்டிச் சாய்த்த போதும்
ஈரமென்ற வீரம் சேர்த்து
வெற்றி என்ற உறுதி  நினைத்து
பெற்றிடல் வேண்டும்
துளிர்க்கும் ஆர்வம் .

பரிகாசங்கள் தேடி வர
பாசாங்குகள் நாடி வர
உண்மை  காட்டி
பண்பு நிறுத்தி
பொறுமை பேணல்
சாற்றிடுமே குணம் .







ஞாயிறு, 6 ஜூலை, 2014

பால் வியாபாரம்

பால் மாடு இல்லாமலே,
பால் வியாபாரம் நடுக்குது.
வியாபாரம் சோராய் நடக்குது .

கொள்முதல் குறைவு,
கொடுப்பதோ அதிகம்.
நூறு லிட்டர் பால் வாங்கி,
இரநூறு  லிட்டர் வியாபாரம்.

பாலில் நீர் ஊற்றி காய்ச்சுவதும் ,
பாலில் தண்ணீர் ஊற்றித் தருவதும் ,
சிரமம் குறைக்கும் செயல். 
செய்வது கலப்படமல்ல,
சமூக சேவை.

கொழுப்பில்லாத பால் குடியென்குது,
மருத்துவம்.
நீர் ஊற்றிய பால் கொழுப்பு நீக்கப் பட்டது ,
என்பது எங்கள் தர்க்கம்  .

விலையென்று பார்த்தால்
வெறும் தண்ணீருக்கு
கொடுக்கும் காசை விட
பாலும் சேர்வதால்
பாதகமில்லை என்றே நினைப்பீர் .






வாழ்க்கை நியதி


கேடுடையோர் செல்வம் ,
பரிதவிக்கும் நேரத்தில்,
பயனின்றி போய்விடும் .

நிர்ணயமில்லா வாழ்க்கை ,
நிர்மூலமாய் ஆகிவிடுதல்
நியதி .

ஒப்புக்கு உபசாரமும் ,
உதவாத கையும் , உன்
தேவைக்கு உதவாது.

அன்பெனும் வாக்கும் ,
பண்பெனும் செயலும் ,
குணமெனும் குன்றேற்றி,
கொடுத்துதவும் பொருள் தந்து ,
கோடான கோடி நலம் சேர்க்கும் .

கோபம் குறைத்து ,
குணம் நிறைத்து,
பயம் அகற்றி ,
பண்பு காத்து ,
பணிவோடு இருத்தல் ,
மேன்மக்கள் செயல்.






சனி, 5 ஜூலை, 2014

கை பேசி



இதயம் அருகே இடம் பிடிக்கிறாய்  
தொட்டு தொட்டுப் பார்த்தே   மகிழ்கிறார்  
தடவிக் கொடுத்தால்  உயிர் பெறுகிறாய்
உயிரில்லாத போதும் உணர்வாகிறாய்
உணர்வில்லாத போது மௌனமாகிறாய்

காதோரம் உனை அணைத்து
காலம் மறந்து கதை பேசுகிறார்
மணிக் கணக்காய்ப்  பேசி
மனசை இழக்கிறார்
காசும் கரைவது அறியாமல் இருக்கிறார்

பிறப்போடு நீயும் ஒரு உறுப்பாய்
இருக்கும் காலம் அதி தூரமில்லை
கை  பேசியே உன்  வளர்ச்சி
பயமாய் இருக்கிறது.

கந்தன்


நிம்மதி பெருக 
சிந்தனை சுருக்கி 
நிந்தனை மடக்கி 
வேதனைகள் மறைய 
சோதனைகள் கடந்து 
உந்தனை கந்தனிடம் 
சேர்ந்து விடு 
உன்வாழ்வு வளமாகிடும் 


கோபுரங்கள்


ஆலயக் கோபுரங்களைக் 
கண்ட கண்கள்
இப்போது
எங்கெங்கு திரும்பினும்
அலை பேசி கோபுரங்களைக்
காணுகின்றன .

ஆலயக் கோபுரங்களைப்  
புறாவும் குருவியும்
தங்கும் இடமாக்கும் 

அலை  பேசி கோபுரங்களைப்
புறாவும் குருவியும்
புறக்கணித்தே விட்டோடும்

கோபுர தரிசனம்
கோடிப் புண்ணியம்
ஆலயக் கோபுரங்கள்
கையெடுத்துக் கும்பிட
அலைபேசிக் கோபுரங்களைப்
அண்ணாந்து பார்ப் பாரும் இலர்

கண்ணிற்கு குளிர்ச்சியும்
செவி வழி  இசையின் வளர்ச்சியும்
ஆலயக் கோபுரங்கள் தந்தன .
கதிர் வீச்சு சுழற்சியும்
மாசும் தளர்ச்சியும்
மாறாமல் தருவது
அலை  பேசிக் கோபுரங்கள்.


பெற்றெடுத்த உனக்கு நாளை .

பாமரரும்   ,கிராமத்தாரும்,
பண்பு மாறவில்லை,
மனசு மறக்கவில்லை,
மறந்தும் செய்யவில்லை.

படித்தவரும்,பட்டினவாசியும்,
அவசியமென  நினைக்கின்றார்.
பெருமையோடு செய்கின்றார்.

தன் வசதி மட்டும் கருதி,
தாய் தந்தை வயது காட்டி,
தள்ளாடும், தடுமாறும், காலத்தில்
பெற்றோரை,
முதியோர் இல்லங்களில்
அடைகின்றார் .

பணம் மட்டும் கட்டி விட்டால்
பாசம் என்ன ,
கடைச் சரக்கா  வாங்கிவிட!

ஏங்குது உள்ளம்,
எதிர்பார்ப்பது ஒரு  வார்த்தை.
கொஞ்ச நினைப்பது,
பேரப்பிள்ளைகளை.

உயிர் கொடுத்து,
கல்வி கொடுத்து,
உடனிருந்து உயர்த்தியது,
உன் பெற்றோர்.
உண்மை தெரிந்தும்,
உயர்வு அறியவில்லை.

பெற்றோருக்கு இன்று ,
பெற்றெடுத்த  உனக்கு நாளை .
உன் பிள்ளை உடனிருந்து
உன்னை கவனிக்கிறான் .




வெள்ளி, 27 ஜூன், 2014

ஆகாயம் ,காற்று,நெருப்பு,நீர்,பூமி .

ஆகாயம் ,காற்று,நெருப்பு,நீர்,பூமி .

வெட்ட வெளி வானத்தில்
எல்லையில்லா பரப்பு
எத்திசையும் ஒரு குணம் காட்ட
அண்டசரா சரத்தின்  வெளிவாசல்
ஒளிந்து கிடப்பது ஓராயிரம்
அதுவே ஆகாயம் .

காற்று எனும் கடுங் கோபக்காரி
நதியோடு விளையாடி நட்புப்பேன
மலையரசன் நடு நின்று  நலம் காக்க
வீசு தென்றலென வலம் வந்தாள்

பொறியென விதை வளர்த்து
சுடரென வெளிக்காட்டி
சுகங்கள் உள்ளடக்கி
உயிரதன்  உண்மையில் ஒளிந்து
உயிர் காப்பதும் நீர்ப்பதும் நெருப்பே !

நீர்நிலயாம் நதிப் பெண்ணவள்,
ஆவியென மாறி ,
ஆகாய வானரசனுடன் கலந்து, கூடி ,
பெற்றெடுத்தாள் மண் குளிர ,
மழைப் பெண்மகளை !


கூறு போட்டு கொத்திக் கிளறி
பிளந்து கொடுமைகள் பல புரிந்தும்
அத்தனையும் அவதரிக்க
அருமருந்தாய் அவதனிக்க
பொருத்து பொறுமை காப்பவள்
பூமித் தாய் !




திங்கள், 23 ஜூன், 2014

காய்கறிக் காரரின் காதலி

தக்காளி நிறத்துக்காரி ,
காரட் உடம்புக்காரி .

கீரைக்கட்டு கொண்டக்காரி,
புடலங்காய் கூந்தக்காரி .

கொத்தமல்லி வாசக்காரி ,.
பச்சைமிளகாய் கோபக்காரி

பச்சரிசி பல்லுக்காரி ,
சவ்வரிசி சொல்லுக்காரி .

பசப்பிப் பேசுவதில் அவள் கைகாரி ,
ஒப்பனையில் அவள் ஒய்யாரி .

ஆப்பிள் அவள் கன்னங்கள் ,
மாதுளை அவள் செவ் விதழ்கள் ,
பன்னீர் திராட்சை அவள் விழிகள் ,
வெண்டிக்காய் அவள் விரல்கள் ,
முருங்கக்காய் அவள் கால்கள்.


அவளை அருகிருந்து பார்க்கவேண்டும் ,
தொட்டு தொட்டுப்  பேசவேண்டும் ,
அறுசுவை உணவை,
உண்டபின் வரும்,  மயக்கம் கூட வரும்.

(காய்கறிக் காரர்  தன்  காதலியைப் பற்றிய விமர்சனம் )

வெள்ளி, 20 ஜூன், 2014

தேவகோட்டை காந்தி நாராயணன் செட்டியார்.

பார்த்தறியா குணம் கொண்ட மனிதரிவர்.
எளிமையே அவர் செயல்பாடு.
சத்தியமே அவர் வாக்கு .
காந்திய சிந்தனையே அவர் நோக்கு .

வாழ்ந்த காலத்தில் ,
அவர் சொல்லிச்  சென்றதெல்லாம்,
இன்று ,
பணம் கொடுத்துப் படிக்கும் பாடம் .

கோபமும், கொடுமையும் ,
கண்டவிடத்தில் கடுமை காட்டாத,
காந்தியவாதி.
வளம் யாவும், இருந்தபோதும் ,
சிக்கனத்தின் சிறப்பை ,
சிறப்பாய் பேணிய,
மா மனிதர்.

அவர்  காலத்தில் வாழ்ந்தோம் ,
உறவால் அறிந்தோம் .
மனம் பெரும் மகிழ்ச்சி.

கண்ணாரக் கண்ட காந்தி
அவரே தேவகோட்டை
காந்தி நாராயணன் செட்டியார்.


வியாழன், 19 ஜூன், 2014

நித்திலத்தில் நிரந்தரம்

நித்திலத்தில் நிரந்தரம்  என்றும் உண்டா ?
நிறங்களில் வெறுமை கண்டதுண்டா?
புற்கள் பூமணம் தந்ததுண்டா?
சொர்க்கம் புவியில் பார்த்ததுண்டா?

உறவுகள் மாறாமல் நிலைத்ததுண்டா ?
மறக்கமால் தவறுகள் நடந்ததுண்டா  ?
சிறகுகளின்றி பறவை பறந்ததுண்டா?
தருக்களின்றி மண் சிறந்ததுண்டா?

ஆடம்பரம் சிறப்பு கண்டதுண்டா ?
ஆவேசம் போற்றப் பட்டதுண்டா  ?
அன்புக்கு அவனியில் மாற்று உண்டா?
பண்புக்கு பாரினிலே தேசமுண்டா?

பாரம்பரியம் நிலை தாழ்ந்ததுண்டா ?
பாசாங்கு செய்வோர் நிம்மதி பெற்றதுண்டா ?
பாசமில்லாமல் உயரினங்கள் வாழ்ந்ததுண்டா?
பிறந்தவர்கள் மரிக்காமல் இருந்ததுண்டா ?










புதன், 11 ஜூன், 2014

எழுத்துத் தளம்

அறிமுகம் இல்லை ,
கண்ணிருந்தும் பார்க்கவில்லை,
காதிருந்தும் குரல் கேட்கவில்லை ,
ஆனால் நண்பர்கள் ,
எண்ணிக்கையோ நாற்பத்தி  நான்கு -
எழுத்துத் தளம் தந்த வெகுமதி .

மொழி படித்தேன்.
கவிதைகள்  படித்தேன் .
தமிழ் வளர்த்துக்கொண்டேன்.

காதல் உண்டு .
கற்பனை உண்டு .
சிந்தனை உண்டு .

எட்டாத நிலையும் ,
தொட்டுப் பார்க்காத
பொருளும் ,
சமூகச் சீண்டலும்,
கேள்வியும் பதிலும் ,
நகையும் சுவையும் ,
கருத்தான கட்டுரையும் ,
அருமை கண்டு ,
நேரம் போக்குவதில்,
நிம்மதி பெற்றேன்.
அறியாதன அறிந்து கொண்டேன் . 

தேர்வுகள் முக்கியமில்லை .
பரிசுகள் அவசியமில்லை .
எழுதுவது என்  கவனம் .
பண்பு காப்பது என் தனம் .
உண்மைக்கு உயர்வுண்டு.
தரத்திற்கு பரிசுண்டு .

எழுத்துத்  தளம் தரும் சுகம் ,
தினம் படித்து மகிழுது மனம்.


குறும்புப் பா


 வெளியிடத்தில்
ஆணும் பெண்ணும்
கட்டிப் பிடித்தால் -

அது

கலாச்சாரக் கெடுதல்
பாலியியல் பலாத்காரம்
      ------
திரையரங்கில்
கூட்டம் கூட்டி
ஆணும் பெண்ணும்
கட்டி உருள்வதை
திரையில் காட்டினால்  -

அது

சினிமா , கலை ரசனை.




குறுக்கு வழி வேண்டாம்


தொந்தரவுகள் நிறைந்த உலகம்,
மந்திரங்களால் மாறுமென்றால்,
மடங்களெல்லாம்,  மறுபிறப்பெடுக்கும்.
காவி வேட்டி கடை சிறக்கும் .

தந்திரங்கள் செய்வோரும்,
சாஸ்திரங்கள் பேசுவோரும்,
தனிக்கட்சி ஆரம்பித்து,
தலைவராகி விடுவர்.

உழைப்பின் உன்னதத்தை
உணராமல், ஊர் சுற்றி
வருவதே தொழில் என்பார்.
உண்மைக்கும், நன்மைக்கும் ,
உதவாது கேடு நினைப்பர் .

உடம்பு வளர்த்து, உயிர் வளர்த்து,
கை உயர்த்தி ,காரியம் செய்து ,
காசு பணம் பரித்து, கயமை புரிவது
எங்கள் கடமை என்பார் .

நன்மை பணிந்து, நயம் பயந்து ,
கண்ணியம் காத்து ,
கொடுப்பதில் சிறந்து ,
மதிப்பு பெறுவதே சிறப்பு.

குறுக்கு வழி நாடாமல்,
குற்றம் புரியாமல் ,
எற்றம் பெற்று ,
உள்ளம் மகிழ்ந்து, உயர்வோம்.







செவ்வாய், 10 ஜூன், 2014

தாபம்


கொஞ்ச வரும் நேரத்தில்
கெஞ்ச வைக்கும் நிலவே
நீ பருத்திக் காட்டில் பூத்த மலரோ
பண்ணைக் காட்டில் வளர்ந்த கொடியோ

எண்ணங்கள் ஆயிரம்
எடுத்துச் சொல்ல
அருகே வா என்றால்
தள்ளி நின்று கை சாடை செய்கிறாய்
வெள்ளரி பிஞ்சு விரலால்
பாவம் காட்டுகிறாய்

உன் கண்ணில் காதல் தெரியுது
கையும் காலும் காதல் மொழி பேசுது
கனவில் கண்ட காட்சிகள்
மனதில் வந்து நிற்குது

மலர்ந்த முகம் கொடுத்து
மஞ்சள் நிறம் அள்ளி தந்து
பள்ளிப் பருவத்து ஞாபகங்கள்
தள்ளி வைத்து விட்டு
தாலாட்டும் பாடல் பாடி விடு

உந்தன் அழகு மேனியிலே
அழகு குறிப்புக்கள்  எடுக்க வேண்டும்
அருகிருந்து  சுவைக்க வேண்டும்
அருமை விருந்து தர வேண்டும் .

வெள்ளி, 6 ஜூன், 2014

எல்லாம் அவனே


திரவியங்கள் குவிந்தபோதும்,
செல்வங்கள் சேர்ந்தபோதும்,
பதவிகள் நிறைந்தபோதும்,

கொடுத்தவன் அவனிருக்க ,
கொண்டுவந்தவன்  " நான் "என்று
நினையாதே .
"நான்" அழித்து நலம் சேர்த்தால்,
நன்மைகள் பலகூடும்.

வெருண்டபோதும்
மருண்டபோதும்
மலையெனவே அவன் பால்
சரண் புகுந்தால் 
மனமிரங்கி வந்திடுவான்
கேட்டவரம் தந்திடுவான்

அரற்றி அழுதபோதும்
அன்பு கொண்டோர்
விலகிச் சென்றபோதும்
அவன் தாள் பணிந்தால்
சஞ்சலமெல்லாம் நீக்கிடுவான் 

ஞாயிறு, 1 ஜூன், 2014

தேர்தல் முடிவுக்குப் பின்




வீராதி வீரனும் ,சூராதி சூரனும்,
இருக்கும் இடம் எங்கே என்று,
தெரியாமல் இருக்கும் நேரம் இப்போ!

பேசிய பேச்செல்லாம்,
தண்ணீரில் கரையவில்லை,
காற்றிலும் மறையவில்லை,
காணமல் போனது எங்கே!

சுற்றிச் சுற்றி ,கத்திக் கத்தி,
பேசி காசைக் கரியாக் கினார்.
போட்டகாசெல்லாம்,
பெருகி வருமென்றே,
பெருமிதத்தோடு காத்திருந்தார்.

உண்மையொன்று சொன்னாலும் ,
உள்ளம் அறிந்து சொன்னாலே ,
உன்னை ஏற்பர் .
உன்நிலை தெரியாமலே,
தன்நிலை  அறியாமலே பிதற்றினால்,
உன்னை யார் ஏற்றுக்கொள்வார் !

வந்தவரும் ,வந்தது போதுமென்று ,
இருந்துவிட்டால், வந்தவழி ,
மாற்று  வழியாகி குழியாகிவிடும் .
சேவை என்பதும், உழைப்பு என்பதும் ,
வெரும் வார்த்தையில் வேண்டாம்.
விருப்பமுடன் பணியாற்றி ,
மாற்றங்கள் தருவீர்.
 




புதன், 30 ஏப்ரல், 2014

ஆறடி மண்



ஆடை ,அலங்காரங்கள்,
அரு மருந்து ,வாசனைத் திரவியங்கள் ,
அத்தனையும் எதற்கு ?

மேடையிலே, எதுகை, மோனையோடு
ஒன்றுக்கும், உதவாத ,உண்மைக்கு, மாறான
பேச்சும் எதற்கு ?

கூட்டாக நண்பர்கள் கூடியிருந்து,
கும்மாளம் போடுவதும் எதற்கு ?

கட்டுக்   கட்டாக பணம் காட்டி
பகட்டாக வாழ்வதும்  எதற்கு ?

ஒரு ஜான் வயிற்றிற்கு ,
இரு கை விரல்களும் ,
வாய் ஜால வார்த்தைகளும் ,
செய்யும் வித்தைகளும்  எதற்கு ?

கடைசியில்,
ஆறடி மண்ணும்
அருகிருந்து உன்னோடு
உடன் வாராது காண் .

  

சனி, 26 ஏப்ரல், 2014

நாம் தானே !


சொல்லாமல் போனாலும்
சோர்வாக இருந்தாலும்
இல்லாமல் போவதும்  நாம் தானே !

இருப்பதை விட்டு
இல்லாததை நினைத்து
ஏங்குவதும் நாம் தானே !

சுகம் என்று சொன்னாலும்
சோகம் என்று பார்த்தாலும்
உடன் படுவது நாம் தானே !

உயர்வுகள் ஒரு நிமிடம்
என்ற போது
எக்காளமிடுவதும்
தளர்வுகள் வந்த போது
தள்ளாடுவதும் நாம் தானே !

உறவுகள்  நினைக்க
உண்மைகள்  நிலைக்க
வரும் பொருள் காக்க
வளர்ந்தோங்கும் வாழ்வு சிறக்க
வரும் காலம் நலமென்றே
நமதென்றே பார்த்திருப்பது
காத்திருப்பதும் நயமாகும்.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா மதுரையிலே ,
எத்திசையும் மக்கள் கூட்டம் .

அழகர் பச்சை பட்டு டுத்தி குதிரை
வாகனத்தில்,
ஆற்றில் இறங்குகிறார் .

பக்தர்கள் பலரும் அழகர்
வேஷத்தில் ,
அலை மோதும் கூட்டத்தில்,
அவன் பெயர் சொல்லியே அழைக்கின்றார்.

தினம் காத்திடுவான், என்றே நினைக்கின்றார்.
மனம் ஒன்றி வணங்கிடுவோர்,
மலரும் வாழ்வு கண்டிடுவார் .
மறவாமல் தந்திடுவான்.

காத்திடுவான் உள்ளத்தை.
கலைந்திடுவான்   கள்ளத்தை .

அலை மோதும் கூட்டம் கண்டு ,
அழகருக்கு ஆனந்தம்.

வாழ்வு மலர ,வாக்கு மலர,
வாழும் பூமியும் மலர,
வணங்குவோம் அழகரையே !
ஆனந்தம் தந்திடுவான் .



திங்கள், 14 ஏப்ரல், 2014

ஜய ஆண்டு பேசுகிறது

ஜய ஆண்டு பேசுகிறது.

உடன் பிறந்தோர்
அறுபது பேர்,
பிள்ளைகள்
பன்னிரண்டு,
பேரப் பிள்ளைகள்
ஐம்பத்திரெண்டு ,
கொள்ளுப்  பேரன்
பேத்திகள்
மூன்னூற்றி அறுபத்து ஐய்ந்து.

உடன் பிறந்தாரிடையே
ஒற்றுமை உண்டு.
ஆண்டுக்கு ஒரு முறை
ஒருவருக்கு முன்னுரிமை.

எங்களுக்கு ஓய்வு இல்லை,
ஒழிவில்லை,
ஒழுங்காய் எங்கள்
தொழிலைச்  செய்கிறோம்.

மானிடர் செய்த மாற்றம்,
மாற்றி நடக்குது எல்லாம்.

மழை  இல்லை,
விளைச்சல் இல்லை,
விலை வாசி  வெருட்டுது என்று,
பழியெல்லாம் எங்கள் மேல்.

செய்வதை செய்யாமல்,
செய்யக் கூடாததை செய்துவிட்டு,
பொருமுவது எங்கள் மேல்.

மானிடரே மமதை விட்டு.
இயற்கையோடு இயந்து வாழுங்கள்,
இனிவரும் காலம் நலமாகட்டும்.

சித்திரை முதல் நாள், முதல்
என் ஆட்சி .
மங்கலமாய் ஜெயத்தை
மறுக்காமல் தருபவள் நான்.

என்  ஜய ஆண்டில்,
தமிழ்மகள் புகழ் மேலும்
பரவட்டும்.
தமிழ்மக்கள் சிறப்பு நிலை
சிறக்கட்டும்.
மகிழ்ச்சி எல்லையில்லாமல்
எங்கும் நிறையட்டும் .

என் பிறப்பில்,
எல்லோரும் உங்களுக்குள்,
புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல
புத்தாண்டாகிய நான்,
தமிழ்கூறும் நல்லுலகிற்கு,
புத்தாண்டு வாழ்த்துக் கூறி,
விடைபெறுகிறேன். 

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள் !


நாட்கள் ஓட ,
நாமும் ஓட,
வருஷம் ஒன்று முடிகிறது.

வரும் வருஷம்,
ஜய வருஷம் ,
பஞ்சாங்கம் நல்ல
செய்தி சொல்லுகிறது.

ஜகமெல்லாம்
நலமாக வேண்டும்
செழிப்பம் நிலைக்க வேண்டும்
நீர் நிலை மகிர வேண்டும்

உண்மை நிலைக்க
உறவுகள் நிலைக்க
பண்புகள் நிலைக்க
பாரதம் செழிக்க
ஜய  ஆண்டே வருக

புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி
நாம்  வரவேற்க 
புத்தாண்டு புகழ் மனம் சேர்க்கட்டும்
புதிய சிந்தனை மலரட்டும் .

புத்தாண்டு
வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள் !

புதன், 2 ஏப்ரல், 2014

மழை வேண்டும்

மழை வேண்டும்
மழை வேண்டும் தாயே!

ஆறு குளம் கம்மாய் நிறைக்க
மழை வேண்டும்!

கழனி காடு செழிக்க
மழை வேண்டும்!

மண் வாசனை வர
மழை வேண்டாம்.
மனம் நிறைக்க
மழை வேண்டும்!

பெண்ணவள் கரு தரித்தால்,
பிள்ளயொன்று பிறக்குது .
மேகமது கருக்கொண்டு,
மழையது  கொட்டவேண்டும்.

நிலத்தடி நீரும் இல்லாமல்,
நீர்வளமும் இல்லாமல்,
நீர்பிடிப்பு இடமெல்லாம்,
நீக்கி விட்டோம்.

நிலமெல்லாம் துளைபோட்டு,
நீரெல்லாம் உரிஞ்சிவிட்டோம்.
நாளைக்கு நீரென்பது 
வெட்டி எடுக்கும் தங்கம்.
நீர் எடுக்க நிலம் வேண்டும்.

செடிகொடிகள் காயுது ,
பச்சைப் புல்லும் கருகுது ,
தவிக்கும் வாய்க்கும்  தண்ணீரும்,
காசு கொடுத்தாலே கிடைக்குது .,

வரப்பு வெட்டி வாய்க்கால் ,மாற்றி
வளம் கண்ட நாளெல்லாம்
ஏட்டில் மட்டுமே .

கயவர் சிலர் செயல் கண்டு
எங்கள் கண்ணிலும் கண்ணீர்
வற்றிவிட்டது .

புதன், 26 மார்ச், 2014

"தாம் பத்தியம்"

"தாம் பத்தியம்" 

சொல்லாமல் கொள்ளாமல்
நானிருக்க
சொல்லவருவதை சொல்லாமல்
நீயிருக்க
வாழ்வது  வாழ்கை
வருடங்கள் தேய்ந்து
மறைந்த போதும்
பிரச்சினை இல்லை
பிக்கு இல்லை

நினைப்பதெல்லாம் நடந்தன
நினைவெல்லாம் மலர்ந்தன
என்ன சுகம் பெறவில்லை
எடுத்துச் சொல்ல யாருமில்லை

கைகோர்த்து களித்திருப்பது
மட்டும் வாழ்க்கையில்லை
கை பிடித்தவள் கலங்கா  திருக்கவேண்டும்

தாம்பத்தியத்தில்
"பத்தியம்" உண்டு

விட்டுக் கொடுக்க வேண்டும்
நீ பெரிது நான் பெரிது
எக்காளம்  வேண்டாம்
எடுத் தெறிந்து பேசாமல்
எது வந்த போதும்
இணைந்திருபோம்
என்று சத்தியம் கொள்ளல்
அதுவே பத்தியமாகும் 

பெண்ணே, பெண்ணே ,


பெண்ணே, பெண்ணே ,
கடவுள் படைத்த பொன்னே !
பொறுமையின் மறு பெயரே !
மறுப்பேதும் சொல்லாமல்,
மலரும் மருந்தே !

கொடுப்பதும் ,பெறுவதும்,
முறையென்ற  போதும் ,
கொடுப்பது மட்டுமே,
உன் சிறப்பல்லவா !

காப்பதும் ,அளிப்பதும்,
சிறப்பென்ற போதும் ,
மறுப்பின்றி அதனைச்
செய்வது உன்னழகல்லவா !

பெண்ணென்று பிறந்து ,
குடும்ப பெருமை போற்ற ,
ஒளிர்ந்திடும் உயர்வே ,
உவந்தளிக்கும் தருவே .

கண்ணென்றே கணவனையும் ,
கண்ணின் மணியென்று பிள்ளைகளையும் ,
நாளும் போற்றிக் காத்திடும்
நடமாடும் தெய்வமே ! 

அன்னையவள் அன்பிற்கு,
அவனியில் ஈடு இணையுண்டா ?
படும் பாடு சொல்லாமல்,
படுவதே சுகமென்று ,
பார்த்தறிந்த மனமே .

கரு காத்து , உரு தந்து,
உயிர் கொடுத்த உன்னதமே !,
உன்மொழியில்  உன்பெருமை
அள்ளி எடுத்து அருமை
முத்தம், தருவதும்
பெறுவதுமே உன் சிறப்பு.


செவ்வாய், 25 மார்ச், 2014

மனம் மகிழ்ந்து நிலைக்க .......



கண்ணில் காண்பவை காட்சிகளாக
மனதில் நினைப்பவை நினைவாக
மறக்க நினைப்பவை மறுதலிக்க
மனம் மகிழ்ந்து நிலைக்க நிலையென்ன?

நடப்பவை நலமென்றால்
மகிழும் மனம்
மாற்றி நட்டக்க
தடுமாறுதே தினம்

வருவது எதிர்கொண்டு
துணிவதனை கைகொண்டு
மலர்ச்சி உன் வசமென்று
உணர்ந்துவிடு நலமாகும்

எண்ணத்தில் உண்மை
செயல்திறனில் எளிமை
உதவும் மனதில் வளமை
பண்பான சொல்லில் இனிமை
பழகிக் கொண்டால்
பரவசமாகும் வாழ்க்கை 

ஞாயிறு, 16 மார்ச், 2014

இன்றைய உலகம்



திரும்பிய பக்கமெல்லாம்,
அநியாயம்,  அவலக் காட்சிகள் .

ஏன் இப்படி என்று கேட்டால் ,
இதை மாற்ற உன் முயற்சி
என்ன என்கிறார் ?

என் நிலையும், 
எழுத்தறிவித்தவன்
நிலையும், ஒன்றே
என்றேன் .

எழுத்தறிவித்தவன்,
சொல்லிக் கொடுத்தபின் ,
என்னை நினைப்பதில்லை,
கூட வருவதில்லை .

நானும்  அவலக் காட்சிகள் ,
பார்த்த பின் அதைப்
பற்றி நினைப்பதில்லை .

குறும்பு பா -2


பதவி சுகம் கண்டவரிடம்
பாதி சுகத்தில் பரித்துவிட்டால்
பரிதவிக்கும் அவர் உள்ளம்

           ***************

எல்லாம் தெரியும் என்று
இருமாந்திருப்பவரும்
எழுதி கூட்டி  பார்த்துப்
படிப்பதிலும் தப்பும்
தவறுமாய் படிக்கிறார்

          ****************

பிள்ளையார் கோவிலில்
உக்கி போட்டு
நெடுஞ்சான் கிடையாய்
விழுந்து கும்பிட்டு
பழகியதன் பலன்
தேர்தலில் தாய்
கட்சியில் சீட்டு.

           *****************

போலீஸ் DGP  வீட்டிலும்
செக்குயுரிட்டி அலாரம் ,
இன்டெர்னல்  செக்குயுரிட்டி
காமிரா
பாதுகாப்புக்காக

          ******************

வியாழன், 13 மார்ச், 2014

தோற்றம்

தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில்  ,
தொகுப்பாளர்கள் ஆணும் பெண்ணும்  .

பெண்களெல்லாம் நல்ல உடை உடுத்தி
தோற்றத்திலும் நேர்த்தியாய்
மலரும் வதனமாய் வளம் வர,

ஆண்கள் மட்டும் ,

கோணல் சட்டையும்,
கசங்கிய பேண்ட்டும் ,
தேவையில்லாத கோட்டும் ,
வாராத தலைமுடியும் ,
சேவ் செய்யாத முகமாக வந்து
கலவரப் படுத்துகிறார்கள் ,

ஏன் ? ஏன் ?

யார் சொன்னால்
மாற்றுவார்கள் !

செவ்வாய், 11 மார்ச், 2014

கண்ணே, கற்கண்டே !

கண்ணே, கற்கண்டே !

கொஞ்சும் விழித்திரை பார்த்தேன்.
நெஞ்சம் மகிழ்ந்திருந்தேன்.
மஞ்சம் நிறைந்திருந்தேன்.

தஞ்சம் என்றே கண்டேன் .
விஞ்சும் தமிழ்  கேட்டேன்.
கெஞ்சும் மொழி  தந்தேன் .

வஞ்சம் இல்லா முகம் தந்தாள் .
அஞ்சும் நடை பயின்றாள் .

அள்ளி அணைத்தேன்  ,
எனதருமை,
இரண்டு வயது மகளை !

(மகள் இல்லாத குறையை
மனத்தால் நிவர்திக்கின்றேன் )

குறும்புப் பா - 1


சூரையாடும் கூட்டத்தில்
சூரப் புலியாய் இருப்பதில்
என்ன பெருமை ?
     
         //////////////////////////////////////

தவறுகள் செய்தபோதும்
தண்டனை இல்லாதபோது
தவறுக்கு என்ன பெயர் ?

          ////////////////////////////////////

சுகவீனம் என்று மருத்துவ மனை
சென்று சுகம் கண்ட பின்
மருத்துவச் சிலவு பார்த்து
மறுபடியும் சுகவீ னமானால்
என்ன செய்வது ?

          /////////////////////////////////////

தன்  மகன் மருத்துவம் படிக்க
பெரும் பணம் கட்டி
படிக்கவைத்தார்
தன் வியாதி குணமாக
வெளி நாடு சென்று
மருத்துவம் பார்த்தார்

         ////////////////////////////////////////






திங்கள், 10 மார்ச், 2014

நிகழ்வுகள் மாற வேண்டும் .

ஒன்றல்ல இரண்டல்ல
குடும்பங்கள் உறவுகள்
ஒற்றுமை குறைந்து
திசைமாறிப்   போயின

சொத்தும் சுகமும்
நினைத்திருக்க
சொந்தம் மறந்திருக்க
என்  வசம் இருப்பதும்
எல்லாமும்  எனக்கு என்றே
மனக்கணக்கு போடுகிறார்

உடன் பிறந்தோரை 
நினைப்பதில்லை
உண்மை தெரிவதில்லை
சேர்த்து வைத்த காசெல்லாம்
செழுமை தருவதில்லை

நடுநிலை என்பது
நடுவீட்டில் மட்டும்
இருக்கும் காலம்
நிலையென்றால்
இல்லாது  போவது
எப்போது?

தெய்வத்தின் மீது
நம்பிக்கை
தினம் பார்க்கும்
நடவடிக்கை
தெளிவு கொடுக்க
மனம் மாற
நிகழ்வுகள்  மாற வேண்டும் .

(இன்று பல குடும்பங்களில்,   மூத்த சகோதரர் , சகோதரர்கள்,
உடன் பிறந்தவர்களுக்கு   கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் - அதனை கருத்தில் கொண்டு வடித்த வரிகள் ) 

வெள்ளி, 7 மார்ச், 2014

தேவலோகக் கன்னி

வயல் வரப்பின் ஓரத்திலே,
தையல் ஒருத்தி நடந்துவர,
சாயல் அறியக் கண்டேன்,
மையல் கொண்டே பின் சென்றேன்.

பையவே பையவே, நடக்கிறாள் ,
பார்த்து பார்த்து ,சிரிக்கிறாள்,
கண்கள், மலர மலர, பார்க்கிறாள்,
கை தட்டி தட்டி, இசை சேர்கிறாள்.

கால்,  கொலுசுகள் சிணுங்க,
கைவளையல்கள் , குலுங்க,
நீண்ட பின்னல்  உஞ்சலாட,
தாவணியை இழுத்துப்
பிடித்து நடக்கிறாள்.

கன்னக் குழி அழகும் ,
சிங்காரக் கண்ணழகும் ,
செம்பருத்தி இதழழகும்,
சேர்த்து வைத்துப் பார்க்கையிலே ,
சிந்தை முழுதும் கிரங்குதைய்யா !

சொக்கத் தங்க நிறத்திலே ,
போட்டிருக்கும் தங்கம் தெரியலே ,
கூப்பிடும் குரல் அறிய ,
அருகே செல்ல ,
குயிலோசையே கேட்குதைய்யா !
 
இவள் நடமாடும் நந்தவனம் ,
மனதிலே  நிற்கும் பிருந்தாவனம் ,
இதம் சேர்க்கும் சங்கராபரணம் ,
இவள் தேவலோகக்  கன்னியோ ?




புதன், 5 மார்ச், 2014

நல்லோர் வார்த்தை


உள்ளத்தால் உயர்ந்து ,
செயலில் சிறந்து,
உதவிடும் குணம் கொண்டு,
நலம் காப்பது ,
நல்லோர் வாழ்வு .

கோபம் என்ற போதும் ,
குறிப்பறிந்து தன்  நிலை காத்து ,
தகாத வார்த்தை தள்ளி ,
பொறுமை காப்பது ,
நல்லோர் குணம் .

பொறுமை தாண்டி,
குணம் தாண்டி,
தத்தளிக்கும் நேரத்தில்,
கொப்பளிக்கும் வார்த்தைகள்,
கொட்டித் தீர்த்தாலும்,
கேட்டவருக்கு ஒன்றும் ஆகாது.
நல்லோர் வார்த்தை தாக்காது.



செவ்வாய், 4 மார்ச், 2014

திரு கரு.வள்ளியப்ப செட்டியார் முத்து விழா வாழ்த்து.


பெரும் குணத்துச் செம்மல் ,
பிறையாயிரம் கண்ட அண்ணல் .
சிந்தனையும் சிரிப்பும் ,
தினம் கண்ட நல்ல உள்ளம் .

எம் தந்தையிடம் காட்டிய  அன்பு ,
தவறாமல் பிள்ளைகளிடமும் ,
காட்டியது  பெரும்  பேறு.
அதுவே உங்கள் சிறப்பு.

அழகு தமிழ் கவிதை ,
ஆனந்தமாய் படைக்கும் ,
ஆற்றல்,வித்தகம்  புரியும்
வித்தகர் .

குணப் பொருத்தம் ,
பெயர் பொருத்தம் ,
உடையவர் என்றே ,
ஊர் சொல்லும், உடையம்மை ஆச்சி .

அருமை மிகு பிள்ளைகள்,
பெருமை சேர்க்கும் செல்வங்கள்.
பொறுமை  காத்து,
நேர்மை கண்டவர்கள் .

ஆயா,அப்பத்தா ,ஐயா என்று
பேரன் பேத்திகள் கூடியிருந்து,
குதுகலிக்கும் நேரமிது,
குடும்பத்துச் சிறப்பு இது .

அலுவல் காரணமாய் ,
இங்கு இல்லா காரணத்தால் ,
வந்திருந்து வாழ்த்தினைப்,  
பெற இயலவில்லை .

நேரில் நிகழ்ச்சிக்கு ,
வராத போதும், 
நினைவில் நின்றது , 
நினைந்தது மனது ,
மலர்ந்தது மகிழ்ச்சி .

வரும் காலங்கள் ,
வளம் சேர்க்கட்டும் ,
நலம் கூடட்டும், 
நன்மை பெருகட்டும்.

அருமை பெருமையோடும் ,
ஆச்சியோடும் , அமர்ந்திருந்து ,
அகம்  மகிழ்ந்து, ஆசி நல்க, 
மனம் குளிர்ந்து கேட்கிறேன் .

வாழ்த்துங்கள் !
வளம்பெற ,
வாழ்த்துங்கள் !




வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

   சித்திரா பௌர்ணமி திருவிழாவின் சிறப்பு.


மா.அரு.சோமசுந்தரம்   
நடப்பு கரியாக்கரர். 
அருள்மிகு தெண்டாயுதபாணி சுவாமி கோவில்.
தெலுக் இந்தான்    



சித்திரா பௌர்ணமி திருநாளின் சிறப்பு, எம தர்ம ராஜாவின் பிரதம கணக்கப்பிள்ளை சித்திர குப்தரின் பிறந்தநாள் .சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் கைலாயத்தில் உமா தேவியாரால் சித்திரமாக வரையப்பட்டு பின் சிவபெருமானால் உயிர் கொடுக்கப்பட்டவர்.பிறக்கும் பொழுதே கையில் எழுத்தாணியும், ஓலைச்   சுவடியும் இரு கைகளிலும் கொண்டு பிறந்தவர்.ஆக இவர் முருகன் மற்றும் பிள்ளயாரப்பனின்  சகோதரர் . 

இவர் எமதர்மராஜனின் நேரடி உதவியாளர்.எமதர்மராஜன் நிர்ணயிக்கும் கால பிரமாணக் கணக்கை சரிவர நிர்ணயித்து மனிதர்கள்,மற்றும் எல்லா உயிர்வாழும் உயிரினங்களின்  
புண்ணிய, பாவங்களுக்கு சரியாக கணக்கு வைத்துக்கொள்வது இவரது முக்கிய வேலை. 

சித்திரா பௌர்ணமி தினத்தன்று இவரால் ஒருவரின் பாவ,புண்ணியங்கள் சரி பார்க்கப்பட்டு 
பாவ,புண்ணியங்களின் படி அவர்களுக்கு நல்லது செய்யுமாறு எமதர்மனுக்கு எடுத்துச் சொல்பவரும் இவரே.     

சித்ர குப்தரை நிறைந்த மனதோடு வணங்க வேண்டும்,நல்ல பாடல்களைப் பாடி துதிக்கவேண்டும், நல்ல அன்னம் படைத்தது,பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கவேண்டும். இவையெல்லாம் அவர் விரும்புவது.                             

கணக்குகளில் தவறேதும் நேராமல், காலக் கணக்கும் தப்பாமல் எல்லாம் சரிவர நடப்பதற்கு நாம்  சித்திர குப்தரை வணங்க வேண்டும்.வேல் கொண்டு வேளை தவறாமல் காத்திடும் முருகக் கடவுளை ,தெண்டாயுத பாணி சுவாமியையும் வணங்க வேண்டும். இவ்வளவு சிறப்புமிக்க சித்ரா பௌர்ணமி நாளில் முருகக் கடவுளை, தெண்டாயுத பாணி சுவாமியை திருவிழா எடுத்து சிறப்பாக வணங்கினால், காலமும், நேரமும் நன்றாக இருக்கும், முருகன் தெண்டம் கொண்டு தினம் காப்பான், கால தேவனின் கவனம் நம் பக்கம் வாராமல், சித்ர குப்தர் காத்து அருள்வார்  .

தேவர்களுக்கு முதல்வன் இந்திரன். இந்திராதிபதியின்  ராஜ குரு பிரகஸ்பதி .பிரகஸ்பதியின் சொல் கேட்காமல் இந்திரன் பாவ காரியங்களில் ஈடு பட்டான்.  பூ லோகத்தில் தவம் இருந்தால்  தான் செய்த பாவங்களிருந்து  மீண்டு, இந்திரப் பதவி நிலைக்கும் என்று அறிந்து, அதன் படி தவம் இருந்து தன்  பாவங்களைப் போக்கிக் கொண்டான். இந்திரன் தவம் இருந்த இடம் கடம்பவனம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மதுரையம்பதி ஆகும். மதுரையம்பதியில் இந்திரனுக்கு சிவலிங்கம் ஒன்றும், தங்கத் தாமரையும் சொக்கேசப் பெருமானால் கிடைக்கப்பெற்றது. கிடைக்கபெற்ற நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும்.  இன்றும்  சித்திரா பௌர்ணமி நாளன்று,மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேவேந்திரன் பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

தமிழகம்,கேரளா மாநிலங்களுக்கு அருகில்,குமிளி , இடுக்கி மாவட்டத்தில் உள்ள "மங்களா தேவி "ஆலயம் உள்ளது. இது சிலபதிகாராத்து நாயகி கண்ணகியின் பொருட்டு பாண்டிய மன்னனால் கட்டப் பட்ட கோவில் . இந்த கோவில் சித்திரா பௌர்ணமி நாளில் மட்டுமே திறக்கப் பட்டு பூஜைகள் நடத்தப்படும்.

காஞ்சிபுரத்தில் சித்திர குப்தருக்கு தனி கோவில் உள்ளது.

கும்பகோணம்,மயிலாடுதுறை வழியில்,திருகோடிக் காவல் ஊரில் திருகோட்டீஸ்வரர் கோவிலில், சித்திரகுப்தருக்கும்,எம தர்மருக்கும் தனிச் சன்னதிகள் உள்ளன. இங்கு சித்திரா பௌர்ணமி திரு விழா,சித்திரா பௌர்ணமியன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். 

இந்தியாவில் எட்டுக்குடி முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்
           

நகரத்தார் பெருமக்கள்,' திரை கடலோடியும் திரவியம் தேடு'  என்ற முது மொழிக்கேற்ப வியாபாரம் நிமித்தமாக தூரக்கிழக்கு நாடுகளான வியட்நாம்இந்தோனேசியாசிலோன்,பர்மா,சிங்கப்பூர்,மலேயா ஆகிய நாடுகளுக்கு 200 -250  ஆண்டுகளுக்கு முன்பே பாய்மரக் கப்பல்லில் துணை வேண்டிசிறு கூட்டமாகசிறு 

குழுக்களாகப்  பயணப்பட்டனர்.அத்தனை பெரும் ஒரே தேசத்தை நினைக்காமல் பல்வேறு

 தேசங்களுக்கு பயணப்பட்டனர்.அத்தனை பேர் மனதிலும் ஆழமாக இருந்தது 

'செட்டிக்கப்பலுக்கு செந்தூரன் துணை
என்றஅசைக்கமுடியாத  நம்பிக்கையும்கடவுள் பக்தியும்.


ஆரம்ப காலத்தில் அதிகமாக நாகப்பட்டினம்  துறை முகத்தின்  வழியாக கடல் பயணம் மேற்கொண்டதால், எட்டுக்குடி  முருகனின் வழிபாடும், அருளாசியும் அவசியமாக இருந்தது. செட்டிநாட்டின் மையத்தில் குடி கொண்டு நகரத்தார் இல்லங்களிலும்,உள்ளத்திலும் குடி கொண்டு,இன்றும்,என்றும்   இருப்பவர் குன்றக்குடி முருகன். ஆக வேல் இருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான் என்ற கருத்திலே 'வேலை'  துணையாக கடல் பயணத்தில்    உடன் கொண்டு சென்றார்கள், தவறாது வழிபட்டு வந்தார்கள்.எட்டுக் குடி முருகன் கோவிலில் 

கண்ட" சித்திரா பௌர்ணமி திரு விழா " சிறப்பெல்லாம் இங்கு  மலேசியா நாட்டிலும் காணவேண்டும் என்ற பரந்த எண்ணமே  இங்கு தெலுக் இந்தான் நகரிலும் கண்டு சிறப்புச் சேர்த்தார்கள்.   


மலாயா நாட்டிற்கு வந்த நகரத்தார்கள்,மூவார், ,மலாக்கா,சிரம்பான்,கோலாலாம்பூர்,

பினாங்கு,  அலோர்ஸ்டார், தைபிங்,ஈப்போ, தெலுக் இந்தான் என்ற ஊர்களிலும், மற்ற முக்கிய ஊர்களிலும் தங்கள் தொழில் நிறுவனங்களை நிறுவி தொழில் செய்து வந்தார்கள்.கோவில் அமைத்த ஊர்களிலெல்லாம், ஒவ் வொரு கோவிலுக்கும் ஒரு திருவிழா என்று ஒற்றுமையாய் சிறப்புச் சேர்த்தார்கள்.




தை மாதம்             - தை பூசம்         - பினாங்கு .
மாசி மாதம்           - மாசி மகம்        - அலோர் ஸ்டார் மாலக்கா.
பங்குனி மாதம்   - பங்குனி உத்திரம்  - கோலாலம்பூர் .
சித்தரை மாதம்     - சித்ரா பௌர்ணமி.  - தெலுக் இந்தான்.
வைகாசி மாதம  - வைகாசி விசாகம் .- ஈப்போ.
ஆடி மாதம்            - ஆடி வேல்.              - தைப்பிங்.                                                                        
ஆவணி மாதம்   - விநாயகர் சதுர்த்தி - சிரம்பான். 
கார்த்திகை மாதம் - திருக் கார்த்திகை.  - மூவார்.     

                 
நாள் என் செய்யும் ?வினை தான் என் செய்யும்? 
எனை நாடி வந்த
கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? 
குமரேசர் இரு 
தாளும் சிலம்பும், சலங்கையும் தண்டையும்
சண்முகமும் 
தோளும், கடம்பும் எனக்கு முன்னே 
வந்து தோன்றிடினே. (கந்தரலங்காரம்) 


அருணகிரிப் பெருமான் இந்த பாட்டிலே 27 நட்சத்திரங்களை உள்ளடக்கி முருகப் பெருமான் தன் உடல் உறுப்புக்களாலும் அணிகலன்களாலும் அவன் தாள் பணிவோரை காத்து   அருள்வார் என்பதை சொல்கிறார்.

 தாள்        - 2 
சிலம்பு     - 2
சலங்கை - 2
தண்டை  - 2 
முகம்      -  6 
 தோள்          -  12
 கடம்பு          -   1  

பேரா தெண்டாயுத பாணி சுவாமியின் அருளாசி பெற்று உயர்ந்திட அவன் தாள் பணிவோம்.