சனி, 25 ஜனவரி, 2014

கட்சித் தொண்டன்

விதி என்றே ,
துதி பாடி ,
சதி செய்து,
நிதி தேடி ,
மதி மறந்து ,
கதி என்று ,
வீதி அலையும்,
கட்சித் தொண்டன் நான்.

காட்சிப் பொருளாகும்,
உயுருள்ள  ஜீவன் நான்.

கடமை என்பேன் ,
மடமை என்பார்,
உடமை தொடர ,
வறுமை சேர ,
பொறுமை தள்ளி ,
பெருமை பேசா ,
வெறுமை கண்ட ,
திறமை அற்ற ,
கட்சித் தொண்டன் நான்.

கட்சித் தலைவனை,
நேரில் பார்க்காதவன் நான்.  
துள்ளும் மனசு
துவளும் மனசு

ஏங்கும் மனசு
ஏமாறும் மனசு

பதறும் மனசு
பரபரக்கும் மனசு

மறக்கும் மனசு
மன்றாடும் மனசு

நினைக்கும் மனசு
நிந்திக்கும் மனசு

கொடுக்கும் மனசு
கொடுமை மனசு

இத்தனையும்  ஒரு மனசுக்கு
தினம் தினம் வந்து போக
நிலை தடுமாறுது   மனசு

தப்பும் இல்லை
தவறும் இல்லை

உண்மை உணர்ந்து
செயல்படு
வாழ்க்கை உனக்கு
புரிபடும்
எண்ணங்கள்
மாறுபடும்

மனசு நிலைப்  படும்


ஞாயிறு, 19 ஜனவரி, 2014

தங்கத் தமிழ்

வாசமெல்லாம் மலருக்குச்  சொந்தமா ?
வளரும் பயிரெல்லாம் பூமிக்குச் சொந்தமா ?
தேனிருக்கும் பூவெல்லாம்  தேன் ஈக்கு  சொந்தமா?
திகட்டும் பாலிருக்க,
திகட்டாத தமிழிருக்க,
தேனினும் இனிய  தமிழ் யாருக்குச் சொந்தம் ?

தெள்ளு தமிழ் பாட்டால்,
தினம் தினம் சொல்லங்காரம் கண்டு,
கூடிடும் இளமையும்,
கூடும் சுவையும்,
கரை புரண்டோடும்,
காவியங்கள் ,காப்பியங்கள் ,
கண்ட சீரிளம் மொழியே ! 

மங்காத புகழும், மறவர் பெருமையோடு ,
மதித்து வாழும் நிலமே,
கொடுத்துச்  சிறக்கும்  மனமே,
தமிழர் என்ற இனமே,

சீரோங்கும்  தமிழும், 
சிறப்பொக்கும் மொழியும்,
பண்பாட்டு  படியும்,
தெளிந்த நல் அறிவும்,  
நாளும்  வளரும் நாடாம்,  
நாடு, தமிழ் நாடு.

தமிழ் நாட்டுத்  தமிழருக்கே,
சொந்தம் தங்கத் தமிழ்.  

சனி, 18 ஜனவரி, 2014

நிதர்சனமாய் இரு மனமே.


பணம் என்றபோதும்,
பரிசு என்றபோதும்,
மலரும் மனமே !

சுகம் என்றபோதும்,
சுவை என்றபோதும்,
குதூகலிக்கும்  மனமே !

உன்பெருமை பேசுகின்ற  போதும்,
நீயே எல்லாம் என்று துதிபாடும் போதும்,
உள்ளம் மகிழும் மனமே !

தவறு என்றபோதும்,
தகராறு  என்றபோதும் ,
தவிர்த்திடும்   மனமே !

பகை என்றபோதும்,
பிறர் பரிகசிக்கும் போதும்,
நிலை தடுமாறும் மனமே !

உயர்வு பிறருக்கு என்றபோதும்,
உண்மை என்றபோதும்,
உருமாறும்  மனமே !

நாளும் மாறும் வாழ்க்கை ,
நம்மிடமில்லை என்று ,
நடுநிலை நின்று நிதர்சனமாய்
இரு மனமே. 

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

மனிதன் மாறவில்லை


ஆளுயுர வானொலிப் பெட்டியில், 
ஆனந்தமாய் கச்சேரி கேட்ட காலம். 
சென்ற இடமெல்லாம் தூக்கிச் சென்று, 
டிரான்ஸ்சிஷ்டரில் பாட்டு  கேட்ட காலம்.
கை அடக்கமாய் சின்ன ரேடியோவில், 
சினிமா பாட்டு கேட்ட காலம்.  
நடக்கும் வழியெல்லாம் வாக்மான் மாட்டி, 
கானம் கேட்ட காலம். 
நகமளவு sd  கார்டில், ஆயிரமாய்  பாட்டு,  
பதிவிறக்கம் செய்த  காலம்.  
பல நூறு பக்கங்கள்  ஞாபகத்தில் நிறுத்திக் கொண்ட, 
மேஜை நிரைக்கும் கணணி  காலம்.   

இவையெல்லாம் மாறி  ............... 

நக நுனிஅளவு  ஒரு பொட்டு, அதிலே 
பத்தாயிரம் பாட்டு பதியும் சிறப்பு 
கையில் அடக்கமாய் பல்லாயிரம் யோசனைகளை, 
சேமிக்கும் தகட்டுப்  பலகை. 

தனி மனிதன் உபயோகிக்கும் பொருளெல்லாம் 
சின்னதாய் சிறுத்துக் கொண்டே போகிறது
சிறுக சிறுக பெரும் மதிப்பும் பெருகிறது.      

கார் என்றால்  இரண்டு பேர் பயணிக்கும்  நிலை மாறி, 
ஏழு பேர் அமரும்  MUV என்றாகிவிட்டது. 
என்பது பேர் பயணித்த விமானம், 
போயிங் என்று அறநூறு பேரை சுமந்து செல்கிறது. 

பொது மனித உபயோகப் பொருளெல்லாம், 
சிறிதிலிருந்து பெரிதாகி பெரும் சிறப்பாகிறது .

எல்லாம் மாறி மாறி  பயன் மாறுகிறது. 
காலம் செல்லச் செல்ல நிலை மாறுகிறது. 

மனிதன் மட்டும் மாறவில்லை, 
அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் .