சனி, 28 மார்ச், 2015

கருவிழி நாயகி

கருவிழி நாயகியே ,
கருங்கூந்தல் பேரழகே,
கன்னக் குழி காந்தமே,
பல்லழகுப்   பரவசமே ,
உடலழகு உல்லாசமே,
சுவை தரும் செங்கரும்பே ,
நிறத்தில் தங்கமே ,
சுகம் தரும் சொர்க்கமே,
மணம்  பரப்பும் மாளிகையே ,
குறையாத நிலவே ,
குன்றாத ஒளியே ,
உயிர் ஓவியமே,
ஒப்பில்லாப் பெட்டகமே ,
உந்தன் முழு அழகு,
கவிக்குள் அடங்குமா ?  

செவ்வாய், 24 மார்ச், 2015

ஆசைகள்

பொன்னார் மேனியனைக் கண்ணாரக் காணவே ஆசை
தன்னார்வமாய் அவன் தாள்  பணியவே ஆசை
பண்ணோடு பதிகம் பாடி பரமன் புகழ் பேசவே ஆசை
மண்ணின் பெருமை  காத்து மாதவம் செய்திடவே ஆசை
கண்ணின் மணியாய் கருத்தாய் எண்ணம் நிறுத்திட ஆசை
வண்ண மலரெல்லாம் அடுக்கி அழகு பார்கவே ஆசை
உண்ணும்போதும் உறங்கும் போதும் உன்னினைவிலே இருக்க ஆசை
விண்ணில் தோன்றும் மதியாய் குறையில்லா நிறையாய் ஒளிரவே ஆசை
என்னில்   உன்னை நிறுத்தி நிறைவு பெறவே ஆசை
 எண்ணிலடங்கா  கருணைக் கடலே உந்தன் அருள் நித்தம் பெற்றிடவே ஆசை

வெள்ளி, 13 மார்ச், 2015

(உறவினர் பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் 12.03.2015 மறைந்த தினத்தன்று - அவர் நினைவாக...)

கற்றதை கற்பிப்பதே, என்  கடமையென
காலமெல்லாம் பணி செய்தார்.
கற்கவே  காலனும் வந்தான் போலும்.
வந்தவன் தன் கடமையைச் செய்துவிட்டான்!

கல்லூரியே வாழ்வு,
கல்லூரியே நினைவு,
கல்லூரியே மூச்சு,
என்றிருந்தவர்,
மூச்சின் முடிவும்,
கல்லூரியிலேயே முடிந்துவிட்டது.
பணியிலிருக்கும் காலத்திலேயே,
சிவன் பாதம் அடைந்தார்.

சீரான வாழ்வு,சிறப்பான பிள்ளைகள்.
அதிர்ந்து பேசாத அன்பு மனைவி.
ஆஸ்திக்கு ஒன்னு,
ஆசைக்கு  இரண்டு,
மக்கட் செல்வங்கள்.
பேரன் பேத்திகள் என்று,
அத்தனையும் கண்டு மகிழ்ந்த உள்ளம்.
நிறைவு கண்டு நெகிழ்ந்த மனம் ,
சேரட்டும் பரம பதம்.

(உறவினர் பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் 12.03.2015 மறைந்த
தினத்தன்று - அவர் நினைவாக...)




வெள்ளி, 6 மார்ச், 2015

நகரத்தார் .

நலம் செய்து ,வளம் கண்டவர்கள்  நகரத்தார் .
கொடை செய்து,  குலம் காத்தவர்கள்  நகரத்தார் .
கோடி இருந்தும், குணம் மாறாதார் நகரத்தார் .
குலப் பெருமை காப்பதில், முதன்மை நகரத்தார் .
வழி கேட்டு வந்தோருக்கும் விருந்து வைப்பார் நகரத்தார்

செய்த தர்மங்கள், எடுத்துச் சொன்னதில்லை.
செய்வித்த திருப்பணிகள் , எழுதிப் பார்த்ததில்லை.
கோயில்களுக்கு
கொட்டிக் கொடுத்த நகைகள்,வாகனங்கள்   ,
கொடுத்தவர் யார் என்று தெரிவதில்லை.
எழுதி வைத்த நிலங்கள், எண்ணில் அடங்குவதில்லை .

தனம் தேடக் கடல் கடந்தவர்கள்.
தேடிய செல்வமெல்லாம் தானத்திற்கே கொடுத்தவர்கள்.
முப்போதும் சிவன்  பாதம் மனதில் நிறுத்தியவர்கள்.

கோட்டையென  வீடும்  கட்டி,
அண்ணாந்து பார்க்கும் கோபுரங்களும் கட்டி,
அன்ன சத்திரங்கள் ஆயிரமும் கட்டி,
எழுத்தறிவுக்கு கல்விச் சாலைகளும்,
உயுர் காக்கும் மருத்துவ மனைகளும்,
கட்டிக் கொடுத்தவர்கள் ,காத்தவர்கள் நகரத்தார்கள்.

மா .அரு .சோமசுந்தரம் . தேவகோட்டை .