சனி, 5 ஜூலை, 2014

கை பேசி



இதயம் அருகே இடம் பிடிக்கிறாய்  
தொட்டு தொட்டுப் பார்த்தே   மகிழ்கிறார்  
தடவிக் கொடுத்தால்  உயிர் பெறுகிறாய்
உயிரில்லாத போதும் உணர்வாகிறாய்
உணர்வில்லாத போது மௌனமாகிறாய்

காதோரம் உனை அணைத்து
காலம் மறந்து கதை பேசுகிறார்
மணிக் கணக்காய்ப்  பேசி
மனசை இழக்கிறார்
காசும் கரைவது அறியாமல் இருக்கிறார்

பிறப்போடு நீயும் ஒரு உறுப்பாய்
இருக்கும் காலம் அதி தூரமில்லை
கை  பேசியே உன்  வளர்ச்சி
பயமாய் இருக்கிறது.

கந்தன்


நிம்மதி பெருக 
சிந்தனை சுருக்கி 
நிந்தனை மடக்கி 
வேதனைகள் மறைய 
சோதனைகள் கடந்து 
உந்தனை கந்தனிடம் 
சேர்ந்து விடு 
உன்வாழ்வு வளமாகிடும் 


கோபுரங்கள்


ஆலயக் கோபுரங்களைக் 
கண்ட கண்கள்
இப்போது
எங்கெங்கு திரும்பினும்
அலை பேசி கோபுரங்களைக்
காணுகின்றன .

ஆலயக் கோபுரங்களைப்  
புறாவும் குருவியும்
தங்கும் இடமாக்கும் 

அலை  பேசி கோபுரங்களைப்
புறாவும் குருவியும்
புறக்கணித்தே விட்டோடும்

கோபுர தரிசனம்
கோடிப் புண்ணியம்
ஆலயக் கோபுரங்கள்
கையெடுத்துக் கும்பிட
அலைபேசிக் கோபுரங்களைப்
அண்ணாந்து பார்ப் பாரும் இலர்

கண்ணிற்கு குளிர்ச்சியும்
செவி வழி  இசையின் வளர்ச்சியும்
ஆலயக் கோபுரங்கள் தந்தன .
கதிர் வீச்சு சுழற்சியும்
மாசும் தளர்ச்சியும்
மாறாமல் தருவது
அலை  பேசிக் கோபுரங்கள்.


பெற்றெடுத்த உனக்கு நாளை .

பாமரரும்   ,கிராமத்தாரும்,
பண்பு மாறவில்லை,
மனசு மறக்கவில்லை,
மறந்தும் செய்யவில்லை.

படித்தவரும்,பட்டினவாசியும்,
அவசியமென  நினைக்கின்றார்.
பெருமையோடு செய்கின்றார்.

தன் வசதி மட்டும் கருதி,
தாய் தந்தை வயது காட்டி,
தள்ளாடும், தடுமாறும், காலத்தில்
பெற்றோரை,
முதியோர் இல்லங்களில்
அடைகின்றார் .

பணம் மட்டும் கட்டி விட்டால்
பாசம் என்ன ,
கடைச் சரக்கா  வாங்கிவிட!

ஏங்குது உள்ளம்,
எதிர்பார்ப்பது ஒரு  வார்த்தை.
கொஞ்ச நினைப்பது,
பேரப்பிள்ளைகளை.

உயிர் கொடுத்து,
கல்வி கொடுத்து,
உடனிருந்து உயர்த்தியது,
உன் பெற்றோர்.
உண்மை தெரிந்தும்,
உயர்வு அறியவில்லை.

பெற்றோருக்கு இன்று ,
பெற்றெடுத்த  உனக்கு நாளை .
உன் பிள்ளை உடனிருந்து
உன்னை கவனிக்கிறான் .