ஞாயிறு, 27 நவம்பர், 2011

நகரத்தார் கல்யாணங்களில் சாமான் பரப்புவது


ஆச்சிமார்களின் சேமிப்பும், சிக்கனுமும் 
சாமான்களாக உருமாறுகின்றன. 
தாயிலுருந்து மகள், மகளிருந்து மகள் என்று 
பெயர் மாறுகின்றன. 
வைத்தது, பார்க்காமலே, புழங்காமலே, 
வீடு மாறுகின்றன.
பெண் குழந்தை பிறந்துவிட்டாலே,
பெண்ணும் வளருவாள்.
சாமான்களும் வளரும். 
வசதி அதிகம் உள்ளவரிடையே, 
வாய்ப்பும் அதிகம்,
வாங்குவதும் அதிகம்.
வைப்பதும் அதிகம்.  
சாமான்கள் வைக்கவேண்டுமா?
தேவைதானா ? என்று கேட்டால்,
பலசமயம் அவை பலருக்கு 
உதவியதுண்டு. 
உள்ளவர்கள் கொடுப்போம். 
கொடுப்பதாலே நிறைவதுமில்லை,
கொண்டு வருவதாலே குறையொன்றுமில்லை.  
கட்டாயப்படுத்தி வாங்குவதே  தவறு   என்பேன். 

சனி, 19 நவம்பர், 2011

கலை தந்தை கருமுத்து தியாகராசர் செட்டியார்



எட்டி நின்று பார்த்தவுடனே,
கட்டிடம் கட்டியது, 
யார் என்று கேட்கச் சொல்லும். 
அருகே சென்றவுடன், கட்டியது யார் 
என்று தெரிந்துவிடும்.


ஒவ்வொரு கல்லிலும் ஒரு அழகிருக்கும், 
ஒரு கதையிருக்கும். 
நுழை வாயில் கதவுத் தூண் ஒரு  அழகு, 
நிலை வாசல் கதவு ஒரு அழகு, 
சன்னல்கள் அழகு, 
சன்னல்  கம்பிகளும் அழகு,   
மாடங்கள் அழகு, 
மாடிப்படிகளும்  அழகு,
கட்டிடங்களுக்கு அழகு சேர்த்த பேராசான். 


எண்ணத் தொலயாத வடிவங்கள், 
அத்தனையும் கண்ணில் பட்டவுடன், 
நயம் சேர்க்கும் கட்டிடமாய் உருவாகிவிடும் .  


வசிக்கும் வீடு என்றில்லை, 
வாசிக்கும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் அழகு சேர்த்தாய், 
வாழ்வளிக்கும தொழிற் கூடங்களுக்கும் அழகு சேர்த்தாய்.   
கலை நயம் மிக்க கட்டிடங்கள் மட்டும் நங்கள் பார்கவில்லை, 


மரத்திலே மண்டபங்கள், 
சுதையிலே சிற்பங்கள், 
விதானத்திலே விதவிதமாய் வடிவங்கள், 
ஒன்றுபோல் ஒன்றில்லை, 
ஒவ்வொன்றும் வேறுவேறாய், 
அத்தனையும் அழகு.


கண் கண்டது கருத்திலே உருவாகும், 
கலைமிகு பொருளாய் உருமாறும். 
கற்கோவில்கள் கண்டவரிடையே,
கற்பிக்கும் கோவில்களும் தந்தவர். 


கலை தந்தை நீ என்று சொல்லுவார்,
கலை தந்தை மட்டுமல்ல, 
கல்விக்கும்   தந்தை , தொழிலுக்கும்   தந்தை, 
எண்ணிலார் வாழ்வு கொடுத்த செம்மல்.   
நாங்கள் வளர உங்கள் ஆசி வேண்டும். 
அனுதினமும் உங்கள் நினைவை போற்றி, 
வணங்குகின்றோம். 
(சோமசுந்தரம் அருணாசலம் )  

செவ்வாய், 15 நவம்பர், 2011

என் வாழ்க்கை



நகரத்தாராக நான் பிறந்தேன்,    
நலமாக நான் வளர்ந்தேன். 
நகரத்தார் என்பதிலே எனக்கு என்றும் பெருமை. 
தேவகோட்டை எனது ஊர் என்பதிலே, 
மேலும் ஓர் பெருமை. 

தாய் தந்த பொறுப்பும், 
தந்தை தந்த செல்வமும், 
குரு கொடுத்த கல்வியும், 
கடவுள் காட்டிய கருணையும், 
என் வாழ்வை நிலை நாட்டியவை.

குலம் கொடுத்த பெருமை, 
நான் பெற்ற சிறப்பு. 
பிறந்த குடும்பம், 
என் வாழ்வின் சிறப்பு. 
முன்னோர் செய்த தர்மம்,
தலை முறை காத்திடும் புண்ணியம். 

பெற்ற கல்வி என்னை வழிநடத்தியது, 
உற்ற துணையாய் என்றும் காக்கிறது. 
தடம் மாறாமல் பாரம்பரியமாய்  நின்ற பயன், 
இறைப்பயனாய் வாழ்வில் ஒளி கூடியது. 

சொக்கேசன் மதுரையிலே குடிகொண்ட வாழ்க்கை. 
மனை வாழ்க்கை தந்த மகிழ்ச்சி, 
மக்கட் செல்வம் மூன்று. 
மாறுபட்ட கருத்து வந்த போதும், 
மனம் ஒன்று பட்டதாலே,
தினம் கண்டோம் நெகிழ்ச்சி.

பிள்ளைகள் பெயர் சொல்லப் பிறந்தன, 
சொன்ன சொல் கேட்டதாலே, 
கல்வியில் உயர்வு, வாழ்கையில் சிறப்பு. 
மனையாளின் சிறப்பு,    
பிள்ளைகளின் வளர்ப்பு. 

தொழிலில்  தொய்வு கண்ட போதும், 
நிலையாய் நின்றதாலே, இடர்கள் நீங்கின. 
வாழ்க்கைப் பாடம் வழி காட்டிட, 
வரும் நாட்கள் மகிழ்ச்சி கூடியது.  

உண்மை நிலைபெறா காரணத்தால், 
உற்ற உறவுகள் உண்மையாகவில்லை. 
பணமே பிரதானம் என்பாரிடயே, 
சொந்தம் பந்தம் உறவாவதில்லை.

அலைகடலுக்கு அப்பாலே, 
மலை நாட்டில் முன்னோர், 
கொள்முதலாம் அழியாச்செல்வம்,
செம்பனை தோட்டமும் சிறப்பாய் பெற்றேன். 
சீரான வாழ்வு கண்டேன். 

வரும் பொருளைத் தரும் குமரன், 
பேராக் தெண்டாயுதபாணி கடவுள், 
தந்தது கோவில் நிர்வககிக்கும்,     
ஒருவராகப் பெரும் பொறுப்பு. 

மீனட்சி தந்த மதுரையிலே, 
நான் இருந்த காரணத்தால், 
நான்மாடக் கூடலில் நகரத்தார் சங்கத்தின், 
தலைவராய் இருக்க பேரு பெற்றேன். 
அருமையான குழு, 
அன்னையின் அருளாலே அத்தனையும் 
சிறப்பாய் நடேந்தேறின. 
மனம் நிறை செல்வம், 
வளம் தந்த வாழ்வு,  
ஏற்றம் இறக்கம் இல்லாத,  
மாற்றம் அற்ற வாழ்க்கை. 

கண் கண்ட தெய்வம், கவி மதுரை மீனாட்சியும், 
தினம் காத்திடும் பேரா தண்டயுதபாணியும்,  
என் வாழ்வின் ஆதாரங்கள், 
எனை வாழ வைக்கும் தெய்வங்கள். 

நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், 
வற்றாத அன்பும், நீங்கிடும் தீமையும், 
கொடுத்து உதவும் குணமும்,  
மாறிடும்  பகையும், நான் பெற வேண்டும். 

மீனாட்சி தாயே !
நான் கேட்க்கும்  வரமும், வளமும், தர வேண்டும்.
அனுதினமும் காத்து அருளவேண்டும்.  

வெள்ளி, 4 நவம்பர், 2011

நடன விடுதியில் நட(ன)மாடும் நங்கையின் வாழ்கை


சதிராடும் சதை பிண்டம் 
சடுதியில் மாறிவிடும் 
தன் நிலை நினையாமல் 
தவறவிட்டால் உன் உண்மை நிலை 
உனக்கு புரியாமலே போய்விடும் 
எத்தனை முறை கழுவினாலும் உன்
கர்மம் தொலையாது
மூடிய அறையில்உன் பிழைப்பு  காசுக்காக
முச்சந்தியில் பிச்சைக்காரன் பிழைப்பும் காசுக்காக
அவன் பிழைப்பு மேலானது

செவ்வாய், 1 நவம்பர், 2011

நகரத்தார் நலம் காத்திடும் தண்ணீர் மலையான் !


வளம் கொழிக்கும் பினாங்கு நகரில், நகரத்தார்
நலம் காத்திடும் தண்ணீர் மலையான் !

வெள்ளி ரதத்தில் பவனி வரும் அழகோ பேரழகு!   
துள்ளி வரும் காவடியும் ,தவழ்ந்து வரும் நடையழகும்,  
தை பூச நன் நாளில், காண்போர் இல்லமெல்லாம் 
குடிகொண்டுருப்பான்    தண்ணீர் மலையான் !
    
பதைபதைக்கும் மனதிற்கும் ,
தவமிருந்து வேண்டிடும் சுகத்திற்கும்,
அண்டிவரும் அடியாருக்கும், 
ஆனந்தம் தந்திடுவான் தண்ணீர் மலையான் !

சீனர்களின் பக்தியும் , சிதறிடும் தேங்காயும்
கூடிடும் மக்கள் கூட்டமும், 
ஓம் என்ற பிரணவமும், ஓம்கார நாதமும், 
தமிழ் வேதம் தந்த நாதனின் கருணையல்லவா! 
பினாங்கு நகர் வாழும் தண்ணீர் மலையானின்
அருள் அல்லவா ! 

நித்தமும் பக்தியாய் வணங்கிட்டோர், 
புத்தியில் நிறைந்திட்ட தன்னிகரில்லா, 
தண்ணீர் மலையான் தாள் பணிவோம்
வளம் யாவும் பெறுவோம்.     
      

சனி, 29 அக்டோபர், 2011

நல்வாழ்வுக்கு ஒரு நல்ல வழி

நல்வாழ்வுக்கு ஒரு நல்ல வழி.(சோமசுந்தரம் அருணாசலம் )

மருந்தில்லா மருத்துவம் ஒன்றுண்டு 
பாரினிலே பலரும் மறந்தார் இன்று, 
தாதா, பாட்டி சொன்னதை, செய்ததை 
மறவாமல் கடைபிடித்திருந்தால் 
நோயற்ற வாழ்வு பெறலாம். 
இனியாவது கடைபிடிப்போம், வாரீர் !

நாளின் முதல் உணவே மதியம் என்று கொள்வோம்  
இடையே பசி வந்தால் பழம் மட்டுமே உண்போம். 

நீரழிவு நோய் உள்ளோரும், 
பச்சை காய்கறிகள் அதிகம் சேர்த்து, 
சமைத்த உணவு கொள்வோம் .

அந்திசாயும் நேரம் (சூரியன் மறையும் நேரம்),
அடுத்த வேளை உண்ணும் உணவாய் கொள்வோம். 
அதனையே அந்நாளின் கடைசி வேளை உணவு என்று மாற்றுவோம். 

பச்சை காய்கறிகளும், பழங்களும்அதிகம் உணவிலே சேர்த்தால்,
அண்டாது நோய்கள் .  

பாலும், தயிரும், மோரும், வேண்டாம் ,
மிருகத்திலுருந்து கிடைப்பவை அனைத்தும் வேண்டாமே!

சுத்திகரிக்கப்பட்ட எண்ணையும், உப்பும் ,
செயற்கை இனிப்பும் (சீனி) வேண்டாம் 
அத்தனையும் தவிர்ப்போம், தள்ளிவைப்போம்.

 கடைபிடித்தால்,  பெரும் பயன் தான் என்ன என்று கேட்பீர் ?
நோய் அற்ற வாழ்க்கை பெறலாம்,
கெட்ட கொழுப்பு இல்லாமலே போகுமே !

முயற்சி செய்வோம், முயன்றவர்கள் கண்டு சொன்ன உண்மை, 
பலன் அதிகம். அருமை மருந்து, எளிமை மருந்து,
செலவில்லா மருத்துவம்.
எளிமை உணவு ,இயற்கை உணவு. 

வள்ளலாரும், அண்ணல் காந்தியடிகளும், காஞ்சி பெரியவரும் 
சொன்ன வார்த்தை , வாழ்ந்த வாழ்க்கை .

நலமான வாழ்க்கை நாம் பெறவே, நல்ல முறையான உணவு பழக்கத்தைப் பழகுவோம்.

வாழ்க , வளர்க , நலம் பல மலர்க .        
         
        

வியாழன், 27 அக்டோபர், 2011

பேரா தெண்டாயுதபாணி கோவில் உற்சவரின் சிறப்பு .

உற்சவரைப் பார்த்தவுடன் உயர்வு தந்திடும் கந்தன்    
துதிப்போரின் மனமெல்லாம் நிறைந்திருக்கும் கொஞ்சும் அழகன் 
அர்ச்சிப்போர் மனம் போல் வரும் பொருளைத் தரும் திருக்குமரன். 
துள்ளி வரும் வைர வேலும்,துயர் துடைக்கும் துளசி மாலையும்
உத்திராட்சமும், பதக்கமும் படியளக்கும் புன்னகையும் கொண்டு 
காலமெல்லாம் காத்திடும் வேலன் -பேரா தெண்டாயுதபாணி முருகன் .

கல்வி வியாபாரம்


கற்பிப்பதோ கல்வி
கறப்பதோ பணம்
கல்வி - தர்மம் என்றார்
காசு கொடுத்து தர்மம் செய்வோரிடையே
காசு பெற்று தர்மம் செய்கின்றார் இங்கே
அனுமதியோடு கொள்ளை
யாரிடம் சொல்வது
கடவுளிடம் சொல்லலாம் என்றால்
கடவுளைப் பார்பதற்கும் காசு
இறைவனே ! நீயே பேசு

புதன், 19 அக்டோபர், 2011


ஒருவர் திறமையை ஒருவர் .ஊக்குவித்து 
ஒருவர் கவலையில் ஒருவர் பங்குகொண்டு
ஒருவர் குறையை ஒருவர் பொறுத்து 
ஒருவர் துன்பத்தில் ஒருவர் ஆறுதல் அளித்து
ஒருவர் முயற்சியில் ஒருவர் ஒத்துழைத்து
ஒருவர் கோபத்தில் ஒருவர் அமைதி காத்து
ஒருவர் சுதந்திரத்தை ஒருவர் அங்கிகரித்து
வாழ்வதே 
இல்லறம் இன்னிக்க சிறக்க சிறந்த வழி
(ஆக்கம்- திரு மீனாக்ஷி சுந்தரம் சோமய்யா,புதுவயல்)           


சப்தபதீ மந்திரத்தின் உட் கருத்தே, தாங்கள் குறிப்பிட்டுள்ள அருமையான கருத்துக்கள். நம் நகரத்தார் திருமணங்களில், தங்கள் அருமையான வாசகங்களை, மணமக்கள் மனமொன்றி சொல்லவேண்டும். நாளும் கடை பிடிக்க வேண்டும்.வாழ்கையில் மகிழ்ச்சி ததும்பும்          

கண்ணதாசன்


கண்ணதாசன் 
கவி தந்த ஆசான்
கவிதைக்கு ஈசன்
கண்ணதாசன் 
படிப்பறிவும் பட்டறிவும் 
தமிழறிவு ஆனதாலே 
தலை நிமிர்ந்து நின்றார் 
எழுதாத பொருளில்லை 
சொல்லாத தத்துவமும் இல்லை 
மனம் திறந்த பேச்சு 
மறைக்கத் தெரியாத மனசு
மறைந்தும் இன்றும் என்றும்   
வாழ்கின்றார் மக்கள் மனதினிலே  

கோலாலம்பூர் செந்தூல் தெண்டாயுதபாணி சுவாமி



அலை கடலுக்கு அப்பாலே 
களையான முகத்தோடு 
அலைபாயும் மனதையும்
நிலை நிறுத்தி காத்திடும் 
மலை நாட்டு செந்தூலில் குடிகொண்டிருக்கும் 
தெண்டாயுதபாணி கடவுள். 
அந்தமில்லா ஆனந்தன்   
வந்த வினையும் வருகின்ற எந்த வினையும் 
நல் வினையாக்கிடும்
முருகக் கடவுள் 

ஜாதகம் பார்க்க வேண்டாம்


பார்காமலே, முகம் பார்க்காமலே கல்யாணம்    
ஆயாவுக்கும் ,ஐயாவுக்கும்  ! 

பார்த்து, பார்த்து குணம் பார்த்து, வகை பார்த்து கல்யாணம்  
ஆத்தாவுக்கும் , அப்பச்சிக்கும் !  

இவர்களுக்கு,

சிறப்பாயிருந்தது வாழ்க்கை   
செழிப்பாயிருந்தது வாழ்க்கை 

மகிழ்ச்சி கூடியது 
சந்ததிகள் கூடியது 

ஜாதகம் பார்க்கவில்லை 
நட்சத்திரம் பார்க்கவில்லை 
குறையொன்றும் காணவில்லை 

காலம் மாறியது, 

ஜோசியம் பார்த்தால் சோதனை குறையும் என்றார் ஐயர் !
சோகம் கூடியது , வெளியே யாரும் சொன்னதமில்லை !

மணம் கூட மனப் பொருத்தம் போதும் என்றால்
கேட்பார் யாருமில்லை, 

கஷ்டங்கள் கூடியது -

சோசியர் சொல்வதெல்லாம் பலிக்கும் என்றே, 
அவர் வீட்டு வாசலிலே தினமும் தவம் கிடக்கிறார். 

சோசியர்கள் பை நிறைக்க, 
அவர் வார்த்தைக்கெல்லாம் செவி மடுக்கிறார்.

ராகு, கேது , சனி , செவ்வாய் கட்டம் என்று சொல்லி, 
நம் ம(ன)ணம் கெடுக்கிறார்.

பரிகாரம் என்ற பெயரால் பணம் பறிக்கிறார்,
பெற்றோர் ஒன்றும் புரியாமல் மனம் பதைக்கிறார்.

வைசியருக்கும், சத்திரையருக்கும், 
ஜாதகம் பார்க்க வேண்டாம் என்றால்,
சோசியர் என் பிழைப்பு என்னாகும் என்கிறார்,

கட்டம் 12 , ராசி 12 ,நட்சத்திரம் 27 ,
தெரிந்திருந்தால் எல்லாம் அறிந்த சோசியர்.
சொன்னது நடக்கும் எனபார்
அவர் வீட்டில் மாற்றி நடந்ததை யார் அறிவார்?

நல்ல குணம் கொண்டு வாழ்வோம் 
நிறை கண்டு மகிழ்வோம் 
மனம் பார்த்து மணம் முடிப்போம்  

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

சப்தபதீ

  
சப்தபதீ - ஹிந்து திருமணங்களில் திருமாங்கல்யதாரணம் முடிந்தவுடன் மண மக்கள் அக்கினியை ஏழு முறை வலம் (சுற்றி ) வருவது சப்தபதீ.
ஏழு முறை வலம் (சுற்றுவது ) என்பது ஏழு அடிகளைக் குறிப்பதாகும்.ஏழு அடிகளின் உட்பொருள்,   

1. முதல் அடி : 
எனக்கு நீ, உனக்கு நான் - நாம் இருவரும் ஒன்றே என்று வாழ்வோம்.கருத்து வேறுபாடுகள் இன்றி நலமோடு வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.

2. இரண்டாம் அடி:
கணவன் , மனைவி, இரண்டு உடலாக இருந்தாலும், ஒர் உயுராய் என்றும் இருப்போம்.உடலால், மனதால், இறையருள் துணை கொண்டு ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.

3. மூன்றாம் அடி :
நம் குடும்பம்,நம் தாய்,தந்தையர் குடும்பம் என்று மூன்று  குடும்பமும் ஒன்றே
என்று பாகுபாடில்லாமல் வாழ்வோம். வாழ்வின் ஆதாரமாய் நேர்மையாய் பொருள் ஈட்டி, பெருக்கி , வளம் சிறக்க வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.

4.நான்காம் அடி:  
அன்பு, பண்பு, பாரம்பரியம், விருந்தோம்பல் என்ற நான்கையும்   வாழ்கையில் கடை பிடித்து அறிவுப் பூர்வமாய் வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.

5 .ஐந்தாம் அடி :
புலன்கள் ஐந்தும்அடக்கி, வாழ்வில்,நன்மக்களைப் பெற்று சிறப்பொடு வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.

6. ஆறாம் அடி:
அரு சுவைகள் ஆறும் வாழ்வில் என்றும்  சுவைத்து,  மனம், மெய், வாக்கால் ஒற்றுமை காத்து வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.

7. ஏழாம் அடி :
ஏழு பிறப்பிலும், நாம் இருவருமே, கணவன் மனைவி என்று பிரியாமல் வாழ வழி கூட்ட வேண்டுமென இறையருளை வணங்கி வாழ்வோம் என்று உறுதி கொள்வோம்.

திருமண நன் நாளிலே, நல்லவை நினைத்து,  தீயவை நீக்கி, மகிழ்ச்சி நிறைந்த நல் வாழ்வு அமைய வேண்டி, நல்லருள் வழங்க, அன்னையவள் மீனாட்சி பாதம் பணிவோம் . 

    
       
   
      


வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

பாடுவார் தந்த அஷ்ட லெட்சுமி பாடல்கள்

பாடுவார் தந்த அஷ்ட லெட்சுமி  பாடல்கள் (அருணாசலம்  சோமசுந்தரம் )

பாடுவார் முத்தப்பா செட்டியார் 18 ம் நூற்றாண்டில்,கீலச்சிவல்பட்டி ஊரில், நகரத்தார் இனத்திலே தோன்றியவர். நேமம் கோவிலைச் சார்ந்தவர்கள்.தந்தையார் திரு.அழகப்பா செட்டியார், தாயார் திருமதி லெட்சுமி  ஆச்சி.

இவர் பாடிய பாட்டெல்லாம் பலிதமாகியது, சத்தியமாகியது. இச் சிறப்பு அவரது பிறப்பின் சிறப்பு,அவரது இனத்தின் சிறப்பு.

"காடுவெட்டிப் போட்டு கடிய நிலந் திருத்தி                 
வீடு கட்டிக்கொண்டிருக்கும் வேள் வணிகர் வீடுகட்க்கு 
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே 
என்றைக்கும் நீங்காதிரு" 

இந்த பாட்டினைத் தெரியாத நகரத்தார்கள் இருக்க மாட்டார்கள். இதனை தினம் பிரார்த்தனை செய்யாத நகரத்தார்களும் இருக்கமாட்டார்கள்.இதனை எழுதியவர் பாடுவார் முதப்ப செட்டியார் தான்.

இந்த பாட்டின் சிறப்பு, திருமகளாம் இலக்குமியை, நம் நகரத்தார் வீட்டுப் பெண்ணாக, நம்மையெல்லாம் காக்கும் தாயாக சொந்தம் கொண்டாடுகிறார்.

அஷ்ட லெட்சுமியை வரிசைப் படுத்துகின்ற போது,

1 . ஆதி லெட்சுமி         
2 . தானிய லெட்சுமி 
3 . தைரிய லெட்சுமி 
4 . கஜ லெட்சுமி 
5 . சந்தான லெட்சுமி 
6  .வித்யா லெட்சுமி 
7 . விஜய லெட்சுமி 
8 .  தன லெட்சுமி  

என்று வரிசைப் படுத்திச் சொல்லுவார்கள். இந்த வரிசையிலே பாடுவார் முதப்ப செட்டியாரும் அஷ்ட லெட்சுமியைப் போற்றி எட்டுப் பாடல்கள் பாடியுள்ளார்கள்.மேலே பார்த்த பாடல், அவர் தன லெட்சுமியைப் போற்றிப்  பாடிய எட்டாவது பாடலாகும். 

வீடு கட்டுவது என்பது செல்வத்தின் செழிப்பு.தானமும், தர்மமும் என்றென்றம் செய்து வருகின்ற நகரத்தார் இல்லமெல்லாம் லெட்சுமி தாயாக நீங்காதிருக்க வேண்டும், தனமாகிய செல்வம் என்றென்றும் தங்க வேண்டும் என்று பேராசை கொண்டு தாய் லெட்சுமிக்கே கட்டளையிடுகிறார். 

1 .ஆதி லெட்சுமி 

"நின்மேலும் ஆணை, நின் மா கொழுநன் தன் மேலும் ஆணை 
தமிழ் மேலும் ஆணை , தவ வணிகர் சின்னஞ் சிறுவர் 
தெரியாத காளையர் என் செய்யினும் பின்னும் 
பொறுத் திருப்பாயே பெரிய இலக்குமியே "

மகா லெட்சுமியை , மகா விஷ்ணுவை , தனிகரில்லா செம்மொழியாம் தமிழ் மொழியையும் துணைக்கு அழைத்து, நகரத்தார் இனத்துப் பிள்ளைகள், சிறுவர்கள், தெரிந்தும்,தெரியாமலும் செய்த தவறுகள், பிழைகள் அனைத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.          

2 .தானிய லெட்சுமி 

" புல்லை விதையாக்கி பூமியிலே நட்டாலும் 
நெல்லாக மாற்றும் நிறமுடயாய்
கல்லெல்லாம் ஆக்கிப் புசிக்கும்
அருமை உணவாக்கி வாய்க்குத் தருவாய் வரம் "

நெல் பயிருடுகின்ற போது, நெல்லோடு வளரும் களைப் பயிராம் புல்லும் நெல்லாக மாறவேண்டும்.அரிசியோடு கலந்து விடும் கல்லும் அருமையான உணவாக வேண்டும், செரிக்க வேண்டும் என்கிறார். இது பொது மனித சிந்தனை, சமுதாய சிந்தனை.

3 . தைரிய லெட்சுமி 

"பஞ்சான கையால் படைக் கருவி ஏந்தாமல்
எஞ்கான்றும் வெல்லும் இயல்புடையாய் 
அஞ்சாமல் நேர்மைப் படையால் நெருங்கும் 
பகை வெல்லும் கூர்மை எமக்குக் கொடு "

படைக் கருவிகளான ஆயுதங்களை, பஞ்ச பூதங்களை வணங்கும் மிருதுவான  கைகளால் எடுக்க வேண்டாம். பிரச்சினைகள், பகை, என்று வந்த போதும், அதனை எந்த தருணத்திலும் வென்று வருகின்ற சிறப்பு,நேர்மை,  பயமின்மை,அறிவு, ஆற்றல், திறமை, ஆகிய சிறப்புக் குணங்களை நகரத்தார்களுக்கு கொடுக்கவேண்டும் என்கிறார் .

4 . கஜ லெட்சுமி 

"ஆணை இருபுறம் அள்ளிச் சொரிபுனல் போல் 
தானம் கொடுக்கும் தவப் பயனே 
ஈனம் எனும் இப்பிறவி இனிமேலே போய் ஒழிய 
துந்திக்கை தருவாய் துணை "

தனம் கொடுப்பவள் மகா லெட்சுமி.கிடைத்த தனத்தைக் கொண்டு, தானம், தர்மம் செய்யவேண்டும். வாழும் நாளில் நற்காரியங்கள் செய்வோர்க்கு மறுபிறப்பு என்பது இல்லை.இந்த நம்பிக்கையை மனதிலே நிலை நிறுத்த வேண்டும். அன்னையவள் துணை புரிய வேண்டும் என்கிறார். 

5 . சந்தான லெட்சுமி 

"கல்லூரும் வாயால் கனி மழலை பேசுகின்ற 
பிள்ளை வரம் அருளும் பேரன்பே 
எல்லோரும் நல்லவரைப் பெற்றிடவும் 
நாடு சிறந்திடவும் வல்லவளே ஈவாய் வரம்"  

ஈடு இணையற்ற செல்வமாம் பிள்ளை செல்வத்தை தந்தருளும்  அன்பு மிகுந்த தாயே, குணம், நலம் நிறைந்த பிள்ளைகள் எல்லோருக்கும் பிறந்திட வேண்டும். நல்லவர்களைக் கொண்ட நாடு சிறந்து செழிப்புறும்.அப்படியான நல்ல வரம் நாங்கள் பெற வேண்டும், தர வேண்டும் என்கிறார்.

6  .வித்யா லெட்சுமி 

"வெற்றித் திருவே விளக்கேற்றிக் கும்பிடுவார் 
கற்றுச் சிறந்திடவும் கல்வியுடன் மற்றவையும் 
உற்றுச் சிறந்திடவும் உண்மை நிமிர்திடவும் 
ஏற்றிடுக எங்கள் இடர் "

வெற்றித் திருமகளாம் மகா லெட்சுமித் தாயை தினம் விளக்கேற்றிக் கும்பிட வேண்டும். வணங்கு வோரெல்லாம் மேலான கல்வி பெற்றிட வேண்டும்.கல்விச் செல்வத்தோடு, மற்ற எல்லாச்   செல்வங்களையும்   உயர்வோடு பெற்று சிறக்க வேண்டும். உண்மை நிலைக்க வேண்டும். துன்பம் எல்லாம் நீக்கி காத்திட வேண்டும் என்கிறார்.

7 . விஜய லெட்சுமி 

"நீங்காத நின் மகளும் நீண்ட திருமாலும் 
பாங்காக அன்று வந்த பாற்கடல் போல் 
தேங்காமல் நீ இருந்து நாளும் வளம் பெருக்கி 
என்றைக்கும் நீங்காதிரு" 

செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாகிய திருமகளாம் மகா லெட்சுமி தாயே, மூன்று உலகிலும், அடியும், முடியும் காணமுடியாத நீண்ட திருமேனி கொண்ட  மாலவனே, எங்கள் இல்லத்தில்  என்றென்றும் குடி கொண்டிருக்க வேண்டும்.பரவி, விரிந்த பார் கடல் போன்று வளம் யாவும் பெருக வேண்டும்  என்று வேண்டுகிறார்.

நகரத்தார் இனம் சிறக்கப் பாடியவர். அப்பெருமகனாரை நகரத்தார் பெருமக்கள் என்றென்றும் நினைத்துப் போற்ற வேண்டும், வணங்க வேண்டும்.

இரு உள்ளங்கையை சேர்த்து வைத்துப் பார்த்தால், கடைசியாக இருக்கும் இரண்டு கட்டை விரல்களும், இரு பக்கமும் யானைகள் தும்பிக்கையை நீட்டிக் கொண்டிருப்பது போன்றும், நடுவிலே உள்ள எட்டு விரல்களும் அஷ்ட லெட்சுமியையும் குறிப்பதாகவும்  சொல்லுவார்கள்.  இது குறித்து வட மொழியில் மந்திரம் ஒன்று உண்டு. அந்த மந்திரம்,

"கர கிரக வரத லெட்சுமி      
கர மத்ய சரஸ்வதி 
கர மூலதே கோவிந்தா 
பிரபதே கர தர்ஷனம் "

கைகளின் விரல்களில் லெட்சுமியும், மையப் பகுதியில் சரஸ்வதியும்.கீழ் பகுதியில் கோவிந்தனும் (மகா விஷ்ணு ) வாசம் செய்வதாக நம் புராணங்கள் கூறுகின்றன.

இதன் காரணமாகத்  தான், காலை எழுந்தவுடன், இரு கைகளையும் சேர்த்து வைத்து உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்று நம் பெரியவர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள்.பார்க்கும் பொழுது மகா லெட்சுமியை நினைக்கிறோம், திரு மகளின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை தான் வாழ்க்கை.

நல்லவனவற்றை நினைக்க வேண்டும், சொல்ல வேண்டும், செய்ய வேண்டும்.நமக்கு கிடைப்பதும், நாம் கொடுப்பதும், அத்தனையும், அன்னையவள் திருமகளாம் மகா லெட்சுமி நமக்கு கொடுத்தது.

நன்று பல செய்து, நலம் பல பெற்று வளர்வோம், வாழ்வோம்.                   

          
           
      
    


புதன், 6 ஏப்ரல், 2011

தெலுக் இந்தான் சித்ரா பௌர்ணமி - திருவிழா


சைவமும் தமிழும் வளர்த்த குலம்
தர்மமே கண்ணெனக் கொண்ட இனம்
நகரத்தார் இனம்.
நன்மைகள் எங்கும் பெருகிடவேண்டும்
தீமைகள் யாவும் நீங்கிடவேண்டும்
சீர்மிகு மொழியாம் வளமான தமிழால்
வணங்குகின்றேன் அன்னை மீனாட்சியே
வருவாய் வந்து காத்தருள்வாய்.



நகரத்தார் பெருமக்கள்,' திரை கடலோடியும் திரவியம் தேடு'  என்ற முது மொழிக்கேற்ப வியாபாரம் நிமித்தமாக தூரக்கிழக்கு நாடுகளான வியட்நாம், இந்தோனேசியா, சிலோன்,பர்மா,சிங்கப்பூர்,மலேயா ஆகிய நாடுகளுக்கு 200 -250  ஆண்டுகளுக்கு முன்பே பாய்மரக் கப்பலில் துணை வேண்டி, சிறு கூட்டமாக,  சிறு குழுக்களாக பயணப்பட்டனர்.அத்தனை பெரும் ஒரே தேசத்தை நினைக்காமல் பல்வேறு தேசங்களுக்கு பயணப்பட்டனர்.அத்தனை பேர் மனதிலும் ஆழமாக இருந்தது 
'செட்டிக்கப்பலுக்கு செந்தூரன் துணை' என்றஅசைக்கமுடியாத  நம்பிக்கையும், கடவுள் பக்தியும்.


வைசியர் வீட்டுப்   பெண்களும்,  பிராமணர்களும்  கடல் தாண்டக்கூடாது (கடல் பயணம் ) என்பது அந்தக்காலத்து மரபு. இதன் காரணமாக நகரத்தார் வீட்டுப் பெண்கள் அந்தக்காலத்தில் வெளி நாட்டுப் பயணம் செல்லவில்லை.தனி ஆளாகப்   பயணப்பட்ட நகரத்தார்களுக்கு,தணிகை வேலரின் தெண்டாயுத பாணி கோலமே சரியாகப்பட்டது போலும். 


ஆரம்ப காலத்தில் அதிகமாக நாகப்பட்டினம்  துறை முகத்தின்  வழியாக கடல் பயணம் மேற்கொண்டதால், எட்டுக்குடி  முருகனின் வழிபாடும், அருளாசியும் அவசியமாக இருந்தது. செட்டிநாட்டின் மையத்தில் குடி கொண்டு நகரத்தார் இல்லங்களிலும்,உள்ளத்திலும் குடி கொண்டு,இன்றும்,என்றும்   இருப்பவர் குன்றக்குடி முருகன். ஆக வேல் இருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான் என்ற கருத்திலே 'வேலை'  துணையாக கடல் பயணத்தில்    உடன் கொண்டு சென்றார்கள், தவறாது வழிபட்டு வந்தார்கள்.

இப்படியாக முருகன் வேலாக வந்து கோவில் கொண்ட இடம் தான், நாம் இப்பொழுது பார்கின்ற 'பேரா'   தெண்டாயுதபாணி சுவாமி கோவில். இதன் ஆரம்பம் 1870  ஆம் ஆண்டு.1926 ஆம்   ஆண்டு முழு கோவிலாக வளர்ச்சி பெற்று, 1926 ஆம் ஆண்டு முதல் கும்பாபிஷேகமும் நடை பெற்று சிறப்புப் பெற்றது.



நகரத்தார்கள் , இந்தியாவிலுருந்து  , தானியங்கள், வாசனைப்பொருட்கள்,  துணிகள் என்று நெடு நாட்கள் கெடாத பொருட்களை வியாபாரம் செய்யும் நோக்கமாக கொண்டு சென்றார்கள்.
லேவா தேவி தொழில் என்பது அவர்களது ஆரம்பத்   தொழிலாக இருந்ததில்லை.கொண்டுசென்ற பொருட்களை விற்று பெற்ற பணம் அவர்களிடம் அதிகமாக இருந்ததும்,அவர்களிடம் நேர்மையும்,நன்னடத்தையும் இருந்ததின் காரணமாகவும் உள்ளூர் மக்கள்  இவர்களிடமிருந்து பண உதவி பெற்றுக்கொண்டார்கள்.சிறிய அளவிலே தொடங்கியது,பெரிய அளவிலே மாற்றம் பெற்று விட்டது.



மலாயா நாட்டிற்கு வந்த நகரத்தார்கள் ,மூவார்,மலாக்கா ,சிரம்பான்,கோலாலாம்பூர்,பினாங்கு,  அலோர்ஸ்டார், தைபிங்,ஈப்போ, தெலுக் இந்தான் என்ற ஊர்களிலும், மற்ற முக்கிய ஊர்களிலும் தங்கள் தொழில் நிறுவனங்களை நிறுவி தொழில் செய்து வந்தார்கள்.கோவில் அமைத்த ஊர்களிலெல்லாம், ஒவ் வொரு கோவிலுக்கும் ஒரு திருவிழா என்று ஒற்றுமையாய் சிறப்புச் சேர்த்தார்கள்.



தை மாதம் பினாங்கிலே தை பூசம். மாசி மாதம் அலோர் ஸ்டார் - மாலக்காவில் மாசி மகம்.
பங்குனி மாதம் கோலாலம்பூரில் பங்குனி உத்திரம்.சித்தரை மாதம் தெலுக் இந்தானிலும்,ஜாவியிலும் சித்ரா பௌர்ணமி.வைகாசி மாதம் ஈப்போவிலும், வாழப்புரிலும்    வைகாசி விசாகம்.ஆடி மாதம் தைப்பிங்கில் ஆடி வேல்.ஆவணி மாதம், சிரம்பானில் விநாயகர் சதுர்த்தி .கார்த்திகை மாதம், மூவாரில் திருக் கார்த்திகை.       
                                                                              
                 
இந்தியாவில் எட்டுக்குடி முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமி ,10 நாள்     திருவிழாவாக   மிகச் சிறப்பாக நடைபெறும். 




மலேசியாவில் தெலுக் இந்தான் பேரா தெண்டாயுதபாணி கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா கடந்த 84 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.தெலுக் இந்தான் பேரா தெண்டாயுதபாணி கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா அன்று நகர்வலம் வருகின்ற வெள்ளி ரதம் 1932 ஆம் ஆண்டு (28 -01 -1932 ) முதன் முதலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

2011  ஏப்ரல் 17  ஆம் நாள் சித்ரா பௌர்ணமி என்று, இங்கு மலேசியா நாட்டிலே சொல்கிறார்கள்.
அது தவறு.

நகரத்தார் தொடர்புடைய கோவில்களெல்லாம் திருவிழாவிற்கு நாள் குறிப்பது,மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எந்த நாள் குறித்து திருவிழா அறிவிக்கப்படுகிறதோ,அதனையே பின் பற்றுவது பழக்கம்,அது தான் மரபு.

அதன்படி மதுரையில் அழகர் ஆற்றில் இறங்குவதும்,சித்ரா பௌர்ணமி திருவிழாவும் 2011 ஏப்ரல் 18  ஆம் நாள் தான்.அன்று தான் சித்தரை நட்சத்திரமும்,பௌர்ணமி திதியும் ஒன்றாக வருகிறது.                       

சித்ரா பௌர்ணமிக்கும்,தெண்டாயுதபாணி கடவுளாம் முருகக் கடவுளுக்கும் என்ன தொடர்பு ? 



சித்ரா பௌர்ணமி திருநாளின் சிறப்பு, எம தர்ம ராஜாவின் பிரதம கணக்கப்பிள்ளை சித்திர குப்தரின் பிறந்தநாள் .சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் கைலாயத்தில் உமா தேவியாரால் சித்திரமாக வரையப்பட்டு பின் சிவபெருமானால் உயிர் கொடுக்கப்பட்டவர்.பிறக்கும் பொழுதே கையில் எழுத்தாணியும், ஓலைச்   சுவடியும் இரு கைகளிலும் கொண்டு பிறந்தவர்.ஆக இவர் முருகனின் சகோதரர் . இவரின் முக்கிய வேலை மனிதர்களின் புண்ணிய, பாவங்களுக்கு சரியாக கணக்கு வைத்துக்கொள்வது.சித்ர குப்தரை நிறைந்த மனதோடு வணங்க வேண்டும்,நல்ல பாடல்களைப் பாடி துதிக்கவேண்டும், நல்ல அன்னம் படைத்தது,பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கவேண்டும். இவையெல்லாம் அவர் விரும்புவது.                             



கணக்குகளில் தவறேதும் நேராமல், காலக் கணக்கும் தப்பாமல் எல்லாம் சரிவர நடப்பதற்கு நாம்  சித்திர குப்தரை வணங்க வேண்டும்.வேல் கொண்டு வேளை தவறாமல் காத்திடும் முருகக் கடவுளை ,தெண்டாயுத பாணி சுவாமியையும் வணங்க வேண்டும். இவ்வளவு சிறப்புமிக்க சித்ரா பௌர்ணமி நாளில் முருகக் கடவுளை, தெண்டாயுத பாணி சுவாமியை திருவிழா எடுத்து சிறப்பாக வணங்கினால், காலமும், நேரமும் நன்றாக இருக்கும், முருகன் தெண்டம் கொண்டு தினம் காப்பான், கால தேவனின் கவனம் நம் பக்கம் வாராமல், சித்ர குப்தர் காத்து அருள்வார்  .


நாள் என் செய்யும் ?வினை தான் என் செய்யும்? 
எனை நாடி வந்த
கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? 
குமரேசர் இரு 
தாளும் சிலம்பும், சலங்கையும் தண்டையும்
சண்முகமும் 
தோளும், கடம்பும் எனக்கு முன்னே 
வந்து தோன்றிடினே. (கந்தரலங்காரம்) 

அருணகிரிப் பெருமான் இந்த பாட்டிலே 27 நட்சத்திரங்களை உள்ளடக்கி முருகப் பெருமான் தன் உடல் உறுப்புக்களாலும் அணிகலன்களாலும் அவன் தாள் பணிவோரை காத்து   அருள்வார் என்பதை சொல்கிறார்.
 தாள் -        2 


சிலம்பு -     2

சலங்கை - 2

தண்டை -  2 

முகம் -      6 

தோள் -    12

கடம்பு -      1  

பேரா தெண்டாயுத பாணி சுவாமியின் அருளாசி பெற்று உயர்ந்திட அவன் தாள் பணிவோம்.