வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

   சித்திரா பௌர்ணமி திருவிழாவின் சிறப்பு.


மா.அரு.சோமசுந்தரம்   
நடப்பு கரியாக்கரர். 
அருள்மிகு தெண்டாயுதபாணி சுவாமி கோவில்.
தெலுக் இந்தான்    



சித்திரா பௌர்ணமி திருநாளின் சிறப்பு, எம தர்ம ராஜாவின் பிரதம கணக்கப்பிள்ளை சித்திர குப்தரின் பிறந்தநாள் .சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் கைலாயத்தில் உமா தேவியாரால் சித்திரமாக வரையப்பட்டு பின் சிவபெருமானால் உயிர் கொடுக்கப்பட்டவர்.பிறக்கும் பொழுதே கையில் எழுத்தாணியும், ஓலைச்   சுவடியும் இரு கைகளிலும் கொண்டு பிறந்தவர்.ஆக இவர் முருகன் மற்றும் பிள்ளயாரப்பனின்  சகோதரர் . 

இவர் எமதர்மராஜனின் நேரடி உதவியாளர்.எமதர்மராஜன் நிர்ணயிக்கும் கால பிரமாணக் கணக்கை சரிவர நிர்ணயித்து மனிதர்கள்,மற்றும் எல்லா உயிர்வாழும் உயிரினங்களின்  
புண்ணிய, பாவங்களுக்கு சரியாக கணக்கு வைத்துக்கொள்வது இவரது முக்கிய வேலை. 

சித்திரா பௌர்ணமி தினத்தன்று இவரால் ஒருவரின் பாவ,புண்ணியங்கள் சரி பார்க்கப்பட்டு 
பாவ,புண்ணியங்களின் படி அவர்களுக்கு நல்லது செய்யுமாறு எமதர்மனுக்கு எடுத்துச் சொல்பவரும் இவரே.     

சித்ர குப்தரை நிறைந்த மனதோடு வணங்க வேண்டும்,நல்ல பாடல்களைப் பாடி துதிக்கவேண்டும், நல்ல அன்னம் படைத்தது,பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கவேண்டும். இவையெல்லாம் அவர் விரும்புவது.                             

கணக்குகளில் தவறேதும் நேராமல், காலக் கணக்கும் தப்பாமல் எல்லாம் சரிவர நடப்பதற்கு நாம்  சித்திர குப்தரை வணங்க வேண்டும்.வேல் கொண்டு வேளை தவறாமல் காத்திடும் முருகக் கடவுளை ,தெண்டாயுத பாணி சுவாமியையும் வணங்க வேண்டும். இவ்வளவு சிறப்புமிக்க சித்ரா பௌர்ணமி நாளில் முருகக் கடவுளை, தெண்டாயுத பாணி சுவாமியை திருவிழா எடுத்து சிறப்பாக வணங்கினால், காலமும், நேரமும் நன்றாக இருக்கும், முருகன் தெண்டம் கொண்டு தினம் காப்பான், கால தேவனின் கவனம் நம் பக்கம் வாராமல், சித்ர குப்தர் காத்து அருள்வார்  .

தேவர்களுக்கு முதல்வன் இந்திரன். இந்திராதிபதியின்  ராஜ குரு பிரகஸ்பதி .பிரகஸ்பதியின் சொல் கேட்காமல் இந்திரன் பாவ காரியங்களில் ஈடு பட்டான்.  பூ லோகத்தில் தவம் இருந்தால்  தான் செய்த பாவங்களிருந்து  மீண்டு, இந்திரப் பதவி நிலைக்கும் என்று அறிந்து, அதன் படி தவம் இருந்து தன்  பாவங்களைப் போக்கிக் கொண்டான். இந்திரன் தவம் இருந்த இடம் கடம்பவனம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மதுரையம்பதி ஆகும். மதுரையம்பதியில் இந்திரனுக்கு சிவலிங்கம் ஒன்றும், தங்கத் தாமரையும் சொக்கேசப் பெருமானால் கிடைக்கப்பெற்றது. கிடைக்கபெற்ற நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும்.  இன்றும்  சித்திரா பௌர்ணமி நாளன்று,மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேவேந்திரன் பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

தமிழகம்,கேரளா மாநிலங்களுக்கு அருகில்,குமிளி , இடுக்கி மாவட்டத்தில் உள்ள "மங்களா தேவி "ஆலயம் உள்ளது. இது சிலபதிகாராத்து நாயகி கண்ணகியின் பொருட்டு பாண்டிய மன்னனால் கட்டப் பட்ட கோவில் . இந்த கோவில் சித்திரா பௌர்ணமி நாளில் மட்டுமே திறக்கப் பட்டு பூஜைகள் நடத்தப்படும்.

காஞ்சிபுரத்தில் சித்திர குப்தருக்கு தனி கோவில் உள்ளது.

கும்பகோணம்,மயிலாடுதுறை வழியில்,திருகோடிக் காவல் ஊரில் திருகோட்டீஸ்வரர் கோவிலில், சித்திரகுப்தருக்கும்,எம தர்மருக்கும் தனிச் சன்னதிகள் உள்ளன. இங்கு சித்திரா பௌர்ணமி திரு விழா,சித்திரா பௌர்ணமியன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். 

இந்தியாவில் எட்டுக்குடி முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்
           

நகரத்தார் பெருமக்கள்,' திரை கடலோடியும் திரவியம் தேடு'  என்ற முது மொழிக்கேற்ப வியாபாரம் நிமித்தமாக தூரக்கிழக்கு நாடுகளான வியட்நாம்இந்தோனேசியாசிலோன்,பர்மா,சிங்கப்பூர்,மலேயா ஆகிய நாடுகளுக்கு 200 -250  ஆண்டுகளுக்கு முன்பே பாய்மரக் கப்பல்லில் துணை வேண்டிசிறு கூட்டமாகசிறு 

குழுக்களாகப்  பயணப்பட்டனர்.அத்தனை பெரும் ஒரே தேசத்தை நினைக்காமல் பல்வேறு

 தேசங்களுக்கு பயணப்பட்டனர்.அத்தனை பேர் மனதிலும் ஆழமாக இருந்தது 

'செட்டிக்கப்பலுக்கு செந்தூரன் துணை
என்றஅசைக்கமுடியாத  நம்பிக்கையும்கடவுள் பக்தியும்.


ஆரம்ப காலத்தில் அதிகமாக நாகப்பட்டினம்  துறை முகத்தின்  வழியாக கடல் பயணம் மேற்கொண்டதால், எட்டுக்குடி  முருகனின் வழிபாடும், அருளாசியும் அவசியமாக இருந்தது. செட்டிநாட்டின் மையத்தில் குடி கொண்டு நகரத்தார் இல்லங்களிலும்,உள்ளத்திலும் குடி கொண்டு,இன்றும்,என்றும்   இருப்பவர் குன்றக்குடி முருகன். ஆக வேல் இருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான் என்ற கருத்திலே 'வேலை'  துணையாக கடல் பயணத்தில்    உடன் கொண்டு சென்றார்கள், தவறாது வழிபட்டு வந்தார்கள்.எட்டுக் குடி முருகன் கோவிலில் 

கண்ட" சித்திரா பௌர்ணமி திரு விழா " சிறப்பெல்லாம் இங்கு  மலேசியா நாட்டிலும் காணவேண்டும் என்ற பரந்த எண்ணமே  இங்கு தெலுக் இந்தான் நகரிலும் கண்டு சிறப்புச் சேர்த்தார்கள்.   


மலாயா நாட்டிற்கு வந்த நகரத்தார்கள்,மூவார், ,மலாக்கா,சிரம்பான்,கோலாலாம்பூர்,

பினாங்கு,  அலோர்ஸ்டார், தைபிங்,ஈப்போ, தெலுக் இந்தான் என்ற ஊர்களிலும், மற்ற முக்கிய ஊர்களிலும் தங்கள் தொழில் நிறுவனங்களை நிறுவி தொழில் செய்து வந்தார்கள்.கோவில் அமைத்த ஊர்களிலெல்லாம், ஒவ் வொரு கோவிலுக்கும் ஒரு திருவிழா என்று ஒற்றுமையாய் சிறப்புச் சேர்த்தார்கள்.




தை மாதம்             - தை பூசம்         - பினாங்கு .
மாசி மாதம்           - மாசி மகம்        - அலோர் ஸ்டார் மாலக்கா.
பங்குனி மாதம்   - பங்குனி உத்திரம்  - கோலாலம்பூர் .
சித்தரை மாதம்     - சித்ரா பௌர்ணமி.  - தெலுக் இந்தான்.
வைகாசி மாதம  - வைகாசி விசாகம் .- ஈப்போ.
ஆடி மாதம்            - ஆடி வேல்.              - தைப்பிங்.                                                                        
ஆவணி மாதம்   - விநாயகர் சதுர்த்தி - சிரம்பான். 
கார்த்திகை மாதம் - திருக் கார்த்திகை.  - மூவார்.     

                 
நாள் என் செய்யும் ?வினை தான் என் செய்யும்? 
எனை நாடி வந்த
கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? 
குமரேசர் இரு 
தாளும் சிலம்பும், சலங்கையும் தண்டையும்
சண்முகமும் 
தோளும், கடம்பும் எனக்கு முன்னே 
வந்து தோன்றிடினே. (கந்தரலங்காரம்) 


அருணகிரிப் பெருமான் இந்த பாட்டிலே 27 நட்சத்திரங்களை உள்ளடக்கி முருகப் பெருமான் தன் உடல் உறுப்புக்களாலும் அணிகலன்களாலும் அவன் தாள் பணிவோரை காத்து   அருள்வார் என்பதை சொல்கிறார்.

 தாள்        - 2 
சிலம்பு     - 2
சலங்கை - 2
தண்டை  - 2 
முகம்      -  6 
 தோள்          -  12
 கடம்பு          -   1  

பேரா தெண்டாயுத பாணி சுவாமியின் அருளாசி பெற்று உயர்ந்திட அவன் தாள் பணிவோம்.                                        
                               

                 

புதன், 26 பிப்ரவரி, 2014

2014 சித்திரா பௌர்ணமி திருவிழா !

2 014 ஆம் ஆண்டு
தெலுக் இந்தான்  அருள்மிகு  தெண்டாயுதபாணி ஆலயத்தில்
சித்திரா பௌர்ணமி திருவிழா !

கோவில்களின் சிறப்பு .

மகிரிஷிகள் மந்திர சக்தியால் எங்கும் நிறைந்த பரம்பொருளை
விக்கிரகங்களில் விஷேச சாநித்தியம் கொள்ளச் செய்து அந்த மூர்த்திகளைச்
சுற்றி கோயில்கள் எழுப்பப்பட்டு அற்புத அருள்சக்தி நிறைந்த ஆலயங்களாக
மிளிருவதை  நாம் அறிவோம். இன்றும் அப்படிப்பட்ட ஆலயங்களில் நமது
பாதம் பட்டதும், நம் உடலில் இனம் புரியாத ஓர்  அற்புத அருள் சக்தி ஊடுருவதை உணரலாம் .

மந்திரப் பூர்வமாக எந்திரங்களை வைத்து பூஜை முறைகளை உருவாக்கியவர்கள் நம் முன்னோர்கள் . அவர்கள் நமக்கு வழி காட்டியபடியே
தொடர்ந்து கடைபிடித்து வருவது சிறப்பு.

நமது முன்னோர்களால், சாஸ்திர  சம்பிரதாயமாய் அமையப் பெற்று அருள் பாலித்து வரும் ஒரு சில ஆலயங்களில் கூட சில அசம்பாவிதமான சம்பவங்கள் நிகழக் காரணம் என்ன ?
போட்டி ,பொறாமை , ஒழுக்கமின்மை , ஆலயப் பணியாட்களின் தவறான செயல்கள் போன்ற மனிதத் தவறே,  தவிர தெய்வத்தின் குற்றமில்லை.

எந்திரப் பூர்வமாய் மந்திர சக்தியுடன் விளங்கும் ஆலயத்தில், "தகடு"
" மந்திரித்து தெய்வ சக்தியை கட்டுப் படுத்தும் முயற்சிகள் " இவைகளில் நாம் ஈடுபட்டால் அதன் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்.

தெலுக் இந்தான் நகரம்.    

நீர் வளம் ,நில வளம் நிறைந்து, தன்னிகரற்ற  இயற்கைச் சூழ்நிலையில்,
அமைதியும்,  அழகும்,நிறைந்த பேரா நதிக் கரையில் அமைந்த ஓர்  அற்புத
நகரம் தெலுக் இந்தான்.

பேரா அருள்மிகு   தெண்டாயுதபாணிக்  கடவுள்  .

வலம்  சுற்றி, வளம் பெருக்கி , நலம் சேர்க்கும் பேரா நதிக் கரையில் நடு நாயகமாய் வீற்று அற்புத ஆற்றலுடன் அருள்பாலித்து, இப் பகுதி மக்கள்
எல்லோரும்,தங்களின் குல தெய்வமென  கொண்டாடும் கடவுள், பேரா அருள்மிகு   தெண்டாயுதபாணிக்  கடவுள்.

பேரா அருள்மிகு   தெண்டாயுதபாணி அனுக்கிரக மூர்திக்கு ஓர் அற்புத திருவிழா "சித்திரா பௌர்ணமி திருவிழா".

கலியுகத்தில்   கண்கண்ட தெய்வமென போற்றப்படும் இப் பெருமான்,ஆரம்பத்தில்  1870 ஆம் ஆண்டு வேல் ரூபமாய் அருள்பாலித்து, பின் 23.06.1926 ஆம் ஆண்டில்  கலையம்சத்துடன்,   பர்மிய தேக்கு மரத்திலான விதானங்களுடன் கூடிய , அழகிய ஆலயத்தில் எழுந்தருளி,  அருள் பாலித்து
வருகின்றார் .

"சித்திரா பௌர்ணமி திருவிழா".

உத்தராயணம்,இளவேனிற்காலம், என்று சொல்லக் கூடிய வசந்த ருது காலத்தில்,சூரியன்,தெற்கிலிருந்து,வடக்கு நோக்கிச் செல்லும் புண்ணிய
காலத்தில்   "ஜய" ஆண்டு சித்திரை மாதம் 31ஆம் நாள்,14.05 2014 ,
புதன் கிழமை, பௌர்ணமி திதியும் கூடிய சுப யோக சுப தினத்தில் இவ்வாண்டின் "சித்திரா பௌர்ணமி திருவிழா" வருவது மிகவும் சிறப்புடையதாகும்.

இவ்வாண்டு சித்திரை மாதம் 1ஆம் தேதி 14.04 2014, திங்கட் கிழமை ஒரு
பௌர்ணமியும், சித்திரை மாதம் 31ஆம் தேதி, 14.05 2014, புதன் கிழமை ஒரு பௌர்ணமியும், ஆக இவ்வாண்டில் இரண்டு பௌர்ணமிகள் வருவதால்,
இதில் எந்தப் பௌர்ணமியில் திருவிழா நடைபெறப் போகிறது என்ற சந்தேகம்,கேள்வி  நம் மலேசியா  வாழ் மக்களுக்கு.

இந்த சந்தேகத்தைப் போக்கவே,இவ்வாலயத்தில், சுமார்  ஐம்பது
ஆண்டுகளாக குருக்களாக சேவை புரிந்து வரும்,ஆலய தலைமைக் குருக்கள்,திரு. ரா.குமாரவேல் அவர்கள் இக்கட்டுரையை வழங்கியுள்ளார்கள்.

சித்திரா பௌர்ணமி என்றதும்,நம் கண் முன்னே தோன்றுவது இங்கு
எழுந்தருளி அருள்பாலிக்கும் தெண்டாயுதபாணிப் பெருமானின் கருணை பொங்கும் அற்புத ஆற்றல் நிறைந்த திருமுகமே .

மலேசியாவில்,வேறு சில இடங்களிலும்,சித்திரா பௌர்ணமி திருவிழா  கொண்டாடப்பட்டாலும்,தெலுக்  இந்தான்  அருள் மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் தான் தொண்ணூறு ஆண்டுகளாக மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. எந்த சூழ் நிலையிலும்,  எக்காரணம்
கொண்டும் தடை படாமல் தொடர்ந்து நடைபெற்று வருவது இதன் தனிச் சிறப்பாகும் .
         
பொதுவாக,மலேசியா நாட்டில்,நடை பெறுகின்ற சமய விழாக்கள் எல்லாம், இந்தியாவில் நடைபெறுகின்ற சமய விழாக்களை அடிப்படையாகக்
கொண்டே நடைபெற்று வருகின்றன. நகரத்தார் பெருமக்களும்  ஊர்
திருவிழாக்களை , மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்  திருவிழாவுக்கு நாள் குறிக்கும் நாளிலே விழாக்களை அமைத்து கொண்டாடுவது வழக்கம் .

இங்கு நடை பெரும் "சித்திரா பௌர்ணமி திருவிழா"வும், இந்தியாவில்,மதுரையில்,மீனாட்சி திருக் கல்யாணத்தை ஒட்டி,
திருமாலிரும்சோலை அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும்,
புகழ்பெற்ற  வைபவத்தை, அந்த நாளினை  அடிப்படையாகக்  கொண்டே தொன்று தொட்டு நடைபெற்று   வருகின்றது.  

அந்த வகையில், இவ்வாண்டின் "சித்திரா பௌர்ணமி திருவிழா".வையும்,
14.05.2014, புதன் கிழமை கொண்டாடுவது சிறப்பானதென தீர்மானித்து,
பரம்பரை அரங்காவலர்களில் ஒருவரும், இவ்வாண்டின் நடப்பு காரியக் காரர், உயர் திரு.மா.அரு.சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் எல்லா
ஏற்பாடுகளையும் , மிகவும் சிறப்பாகவும்,விமர்சையாகவும் செய்து வருகிறார்கள்.

மலேசியா,சிங்கப்பூர், மற்றும் வெளி நாடுகளில் வசிக்கும் எல்லா
பக்தர்களுக்கும்,இவ்வாண்டு திருவிழா 14.05.2014, புதன் கிழமை
என்பதனை  ,பக்திப் பூர்வமாகவும் , மகிழ்வோடும் அறிவிக்கின்றோம்.

திருவிழா  அன்று கோவிலில் நடைபெறும் அபிஷேகம் ,
பூஜை விவரங்கள் .

14.05.2014,புதன் கிழமை,திரு விழா அன்று அதி காலை மணி 4.30 முதல் பால் அபிஷேகம் நடைபெறும்.

காலை மணி 7.30 க்கு நித்தியப்படி காலை சந்தி பூஜைக்குப் பின் காவடிகள் காணிக்கைகள் செலுத்தி சாமி தெரிசனம் செய்யலாம் .

காலை மணி 10.30 அளவில் மஹா அபிஷேகம் நடைபெறும்.

பகல் மணி 12 அளவில் உச்சிக்கால பூஜையும், மகேஸ்வர பூஜையும் நடைபெற்று, பக்த கோடி பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்படும்.

மாலை மணி 4.30 அளவில் மீண்டும் மஹா அபிஷேகம் செய்து, மாலை மணி 6.30 அளவில் சாயரட்சை பூஜையும்,உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்று, உற்சவ மூர்த்தி ஆலயம் வலம் வந்து,வெள்ளி ரதத்தில் எழுந்தருளச் செய்து,நகர் வலம் வந்து,தமது ஆலயம் சேர்க்கை சேர்ந்து,சிறப்பு தீபம் பார்க்கப்படும்.

திருவிழா சிறப்பாக நடைபெற பல வகையிலும்,உதவிகள் புரிந்த,புரிந்து வருகின்ற அரசாங்க அதிகாரிகள், காவல் துறை அன்பர்கள்,தொண்டர்கள்,
மற்றும்  பொது மக்கள் அனைவருக்கும்,மாலை மரியாதை, காளாஞ்சி பிரசாதம்  வழங்கி சிறப்பு செய்வதுடன் திருவிழா இனிதே நிறைவு பெரும்.

இத் திருவிழாவின் மற்றுமொரு சிறப்பு, திருவிழா வந்து விட்டால், தெலுக் இந்தான் நகரமே,விழாக்கோலம் பூண்டு,தொடர்ந்து பத்து நாட்களுக்கு,
தற்காலிகமாக புதுக் கடைகள் அமைத்து வியாபாரம்  சிறப்பாக நடக்கும்.              
வியாபாரம் செய்யும் பொருட்டு இந்தியாவிலிருந்து வரும் நரிக்குறவர் அன்பர்கள் வருகையும், மேலும் களை கட்டி ,பார்பதற்கு தமிழ் நாட்டிலே ஒரு நகரத்தில் நடக்கும் திருவிழா போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி,பார்க்க பரவசமாய்   இருக்கும்.

புள்ளி மயில் மீதேறி ,துள்ளி விளையாடி, வெள்ளி ரதம்  பவனி வரும்
அழகன் முருகனை  துதித்து ,துன்பம் நீக்கி, இன்பமெல்லாம் பெற்றுய்வோமாக.

இன்பமே சூழ்க .எல்லோரும் வாழ்க .

துதிப்போரின் மனமெல்லாம் நிறைந்திருக்கும் கொஞ்சும் அழகன் 
அர்ச்சிப்போர் மனம் போல் வரும் பொருளைத் தரும் திருக்குமரன். 
துள்ளி வரும் வைர வேலும்,துயர் துடைக்கும் துளசி மாலையும்
உத்திராட்சமும்பதக்கமும் படியளக்கும் புன்னகையும் கொண்டு 
காலமெல்லாம் காத்திடும் வேலன் -பேரா தெண்டாயுதபாணி முருகன் .