புதன், 26 பிப்ரவரி, 2014

2014 சித்திரா பௌர்ணமி திருவிழா !

2 014 ஆம் ஆண்டு
தெலுக் இந்தான்  அருள்மிகு  தெண்டாயுதபாணி ஆலயத்தில்
சித்திரா பௌர்ணமி திருவிழா !

கோவில்களின் சிறப்பு .

மகிரிஷிகள் மந்திர சக்தியால் எங்கும் நிறைந்த பரம்பொருளை
விக்கிரகங்களில் விஷேச சாநித்தியம் கொள்ளச் செய்து அந்த மூர்த்திகளைச்
சுற்றி கோயில்கள் எழுப்பப்பட்டு அற்புத அருள்சக்தி நிறைந்த ஆலயங்களாக
மிளிருவதை  நாம் அறிவோம். இன்றும் அப்படிப்பட்ட ஆலயங்களில் நமது
பாதம் பட்டதும், நம் உடலில் இனம் புரியாத ஓர்  அற்புத அருள் சக்தி ஊடுருவதை உணரலாம் .

மந்திரப் பூர்வமாக எந்திரங்களை வைத்து பூஜை முறைகளை உருவாக்கியவர்கள் நம் முன்னோர்கள் . அவர்கள் நமக்கு வழி காட்டியபடியே
தொடர்ந்து கடைபிடித்து வருவது சிறப்பு.

நமது முன்னோர்களால், சாஸ்திர  சம்பிரதாயமாய் அமையப் பெற்று அருள் பாலித்து வரும் ஒரு சில ஆலயங்களில் கூட சில அசம்பாவிதமான சம்பவங்கள் நிகழக் காரணம் என்ன ?
போட்டி ,பொறாமை , ஒழுக்கமின்மை , ஆலயப் பணியாட்களின் தவறான செயல்கள் போன்ற மனிதத் தவறே,  தவிர தெய்வத்தின் குற்றமில்லை.

எந்திரப் பூர்வமாய் மந்திர சக்தியுடன் விளங்கும் ஆலயத்தில், "தகடு"
" மந்திரித்து தெய்வ சக்தியை கட்டுப் படுத்தும் முயற்சிகள் " இவைகளில் நாம் ஈடுபட்டால் அதன் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்.

தெலுக் இந்தான் நகரம்.    

நீர் வளம் ,நில வளம் நிறைந்து, தன்னிகரற்ற  இயற்கைச் சூழ்நிலையில்,
அமைதியும்,  அழகும்,நிறைந்த பேரா நதிக் கரையில் அமைந்த ஓர்  அற்புத
நகரம் தெலுக் இந்தான்.

பேரா அருள்மிகு   தெண்டாயுதபாணிக்  கடவுள்  .

வலம்  சுற்றி, வளம் பெருக்கி , நலம் சேர்க்கும் பேரா நதிக் கரையில் நடு நாயகமாய் வீற்று அற்புத ஆற்றலுடன் அருள்பாலித்து, இப் பகுதி மக்கள்
எல்லோரும்,தங்களின் குல தெய்வமென  கொண்டாடும் கடவுள், பேரா அருள்மிகு   தெண்டாயுதபாணிக்  கடவுள்.

பேரா அருள்மிகு   தெண்டாயுதபாணி அனுக்கிரக மூர்திக்கு ஓர் அற்புத திருவிழா "சித்திரா பௌர்ணமி திருவிழா".

கலியுகத்தில்   கண்கண்ட தெய்வமென போற்றப்படும் இப் பெருமான்,ஆரம்பத்தில்  1870 ஆம் ஆண்டு வேல் ரூபமாய் அருள்பாலித்து, பின் 23.06.1926 ஆம் ஆண்டில்  கலையம்சத்துடன்,   பர்மிய தேக்கு மரத்திலான விதானங்களுடன் கூடிய , அழகிய ஆலயத்தில் எழுந்தருளி,  அருள் பாலித்து
வருகின்றார் .

"சித்திரா பௌர்ணமி திருவிழா".

உத்தராயணம்,இளவேனிற்காலம், என்று சொல்லக் கூடிய வசந்த ருது காலத்தில்,சூரியன்,தெற்கிலிருந்து,வடக்கு நோக்கிச் செல்லும் புண்ணிய
காலத்தில்   "ஜய" ஆண்டு சித்திரை மாதம் 31ஆம் நாள்,14.05 2014 ,
புதன் கிழமை, பௌர்ணமி திதியும் கூடிய சுப யோக சுப தினத்தில் இவ்வாண்டின் "சித்திரா பௌர்ணமி திருவிழா" வருவது மிகவும் சிறப்புடையதாகும்.

இவ்வாண்டு சித்திரை மாதம் 1ஆம் தேதி 14.04 2014, திங்கட் கிழமை ஒரு
பௌர்ணமியும், சித்திரை மாதம் 31ஆம் தேதி, 14.05 2014, புதன் கிழமை ஒரு பௌர்ணமியும், ஆக இவ்வாண்டில் இரண்டு பௌர்ணமிகள் வருவதால்,
இதில் எந்தப் பௌர்ணமியில் திருவிழா நடைபெறப் போகிறது என்ற சந்தேகம்,கேள்வி  நம் மலேசியா  வாழ் மக்களுக்கு.

இந்த சந்தேகத்தைப் போக்கவே,இவ்வாலயத்தில், சுமார்  ஐம்பது
ஆண்டுகளாக குருக்களாக சேவை புரிந்து வரும்,ஆலய தலைமைக் குருக்கள்,திரு. ரா.குமாரவேல் அவர்கள் இக்கட்டுரையை வழங்கியுள்ளார்கள்.

சித்திரா பௌர்ணமி என்றதும்,நம் கண் முன்னே தோன்றுவது இங்கு
எழுந்தருளி அருள்பாலிக்கும் தெண்டாயுதபாணிப் பெருமானின் கருணை பொங்கும் அற்புத ஆற்றல் நிறைந்த திருமுகமே .

மலேசியாவில்,வேறு சில இடங்களிலும்,சித்திரா பௌர்ணமி திருவிழா  கொண்டாடப்பட்டாலும்,தெலுக்  இந்தான்  அருள் மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் தான் தொண்ணூறு ஆண்டுகளாக மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. எந்த சூழ் நிலையிலும்,  எக்காரணம்
கொண்டும் தடை படாமல் தொடர்ந்து நடைபெற்று வருவது இதன் தனிச் சிறப்பாகும் .
         
பொதுவாக,மலேசியா நாட்டில்,நடை பெறுகின்ற சமய விழாக்கள் எல்லாம், இந்தியாவில் நடைபெறுகின்ற சமய விழாக்களை அடிப்படையாகக்
கொண்டே நடைபெற்று வருகின்றன. நகரத்தார் பெருமக்களும்  ஊர்
திருவிழாக்களை , மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்  திருவிழாவுக்கு நாள் குறிக்கும் நாளிலே விழாக்களை அமைத்து கொண்டாடுவது வழக்கம் .

இங்கு நடை பெரும் "சித்திரா பௌர்ணமி திருவிழா"வும், இந்தியாவில்,மதுரையில்,மீனாட்சி திருக் கல்யாணத்தை ஒட்டி,
திருமாலிரும்சோலை அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும்,
புகழ்பெற்ற  வைபவத்தை, அந்த நாளினை  அடிப்படையாகக்  கொண்டே தொன்று தொட்டு நடைபெற்று   வருகின்றது.  

அந்த வகையில், இவ்வாண்டின் "சித்திரா பௌர்ணமி திருவிழா".வையும்,
14.05.2014, புதன் கிழமை கொண்டாடுவது சிறப்பானதென தீர்மானித்து,
பரம்பரை அரங்காவலர்களில் ஒருவரும், இவ்வாண்டின் நடப்பு காரியக் காரர், உயர் திரு.மா.அரு.சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் எல்லா
ஏற்பாடுகளையும் , மிகவும் சிறப்பாகவும்,விமர்சையாகவும் செய்து வருகிறார்கள்.

மலேசியா,சிங்கப்பூர், மற்றும் வெளி நாடுகளில் வசிக்கும் எல்லா
பக்தர்களுக்கும்,இவ்வாண்டு திருவிழா 14.05.2014, புதன் கிழமை
என்பதனை  ,பக்திப் பூர்வமாகவும் , மகிழ்வோடும் அறிவிக்கின்றோம்.

திருவிழா  அன்று கோவிலில் நடைபெறும் அபிஷேகம் ,
பூஜை விவரங்கள் .

14.05.2014,புதன் கிழமை,திரு விழா அன்று அதி காலை மணி 4.30 முதல் பால் அபிஷேகம் நடைபெறும்.

காலை மணி 7.30 க்கு நித்தியப்படி காலை சந்தி பூஜைக்குப் பின் காவடிகள் காணிக்கைகள் செலுத்தி சாமி தெரிசனம் செய்யலாம் .

காலை மணி 10.30 அளவில் மஹா அபிஷேகம் நடைபெறும்.

பகல் மணி 12 அளவில் உச்சிக்கால பூஜையும், மகேஸ்வர பூஜையும் நடைபெற்று, பக்த கோடி பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்படும்.

மாலை மணி 4.30 அளவில் மீண்டும் மஹா அபிஷேகம் செய்து, மாலை மணி 6.30 அளவில் சாயரட்சை பூஜையும்,உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்று, உற்சவ மூர்த்தி ஆலயம் வலம் வந்து,வெள்ளி ரதத்தில் எழுந்தருளச் செய்து,நகர் வலம் வந்து,தமது ஆலயம் சேர்க்கை சேர்ந்து,சிறப்பு தீபம் பார்க்கப்படும்.

திருவிழா சிறப்பாக நடைபெற பல வகையிலும்,உதவிகள் புரிந்த,புரிந்து வருகின்ற அரசாங்க அதிகாரிகள், காவல் துறை அன்பர்கள்,தொண்டர்கள்,
மற்றும்  பொது மக்கள் அனைவருக்கும்,மாலை மரியாதை, காளாஞ்சி பிரசாதம்  வழங்கி சிறப்பு செய்வதுடன் திருவிழா இனிதே நிறைவு பெரும்.

இத் திருவிழாவின் மற்றுமொரு சிறப்பு, திருவிழா வந்து விட்டால், தெலுக் இந்தான் நகரமே,விழாக்கோலம் பூண்டு,தொடர்ந்து பத்து நாட்களுக்கு,
தற்காலிகமாக புதுக் கடைகள் அமைத்து வியாபாரம்  சிறப்பாக நடக்கும்.              
வியாபாரம் செய்யும் பொருட்டு இந்தியாவிலிருந்து வரும் நரிக்குறவர் அன்பர்கள் வருகையும், மேலும் களை கட்டி ,பார்பதற்கு தமிழ் நாட்டிலே ஒரு நகரத்தில் நடக்கும் திருவிழா போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி,பார்க்க பரவசமாய்   இருக்கும்.

புள்ளி மயில் மீதேறி ,துள்ளி விளையாடி, வெள்ளி ரதம்  பவனி வரும்
அழகன் முருகனை  துதித்து ,துன்பம் நீக்கி, இன்பமெல்லாம் பெற்றுய்வோமாக.

இன்பமே சூழ்க .எல்லோரும் வாழ்க .

துதிப்போரின் மனமெல்லாம் நிறைந்திருக்கும் கொஞ்சும் அழகன் 
அர்ச்சிப்போர் மனம் போல் வரும் பொருளைத் தரும் திருக்குமரன். 
துள்ளி வரும் வைர வேலும்,துயர் துடைக்கும் துளசி மாலையும்
உத்திராட்சமும்பதக்கமும் படியளக்கும் புன்னகையும் கொண்டு 
காலமெல்லாம் காத்திடும் வேலன் -பேரா தெண்டாயுதபாணி முருகன் .



              

              


கருத்துகள் இல்லை: